வெறும் கற்பனை கதைகளை நான் எழுதுவதில்லை



-ஸ்ரீதேவிமோகன்

தொலைக்காட்சி தொடர்கள் வருவதற்கு முன்பு, பிரபல பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகள்தான் பெண்களின் பெரும் பொழுதுபோக்கு. அப்படி தொடர் எழுதி, பெண்களின் மனதைக் கொள்ளையடித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எழுத்தாளர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் என இவரது எழுத்துலகப் பணி விரிகிறது. பலருக்கும் பிடித்தமான ஆதர்ச எழுத்தாளர் இவர். பலரும் சந்திக்க ஆசைப்பட்ட ஆளுமை. எழுத்துலகில் தன் நீண்ட நெடிய பயண அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டவை:

எழுத்தின் மீதான ஆர்வம்
நான் சிறுவயதாக இருக்கும் போது எங்கள் வீட்டிற்கு வார, மாத இதழ்கள் எதுவும் வராது. ஆனால் ஊரில் இருந்த என் பெரிய பாட்டி வீட்டில் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கும். ‘ஆனந்தவிகடன்’ இதழில் வந்த தொடர்கள், கல்கியின் தொடர்களை எல்லாம் பைண்டிங் செய்து வைத்திருப்பார்கள். அங்கு செல்லும் போதெல்லாம் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். புத்தகங்கள் படிப்பதற்காகவே ஊருக்குச் செல்ல விரும்புவேன். வாசிப்பின் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது. அதன் பிறகு சீரியஸான எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பில் இருந்த ஆர்வம் என்னை எழுதவும் தூண்டியது.
 
ஆரம்ப கால எழுத்து எனது 17, 18 வயதில், முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதை என்று எழுதினேன். அதன்பிறகு ’ஆனந்த விகடனில்’ எனது சிறுகதை வெளியானது. அதற்கு அடுத்து ‘ஆனந்தவிகடன்’ தீபாவளி மலருக்கு எழுதச் சொல்லிக் கேட்டார்கள்.

பிறகு தொடர் என எழுத்துலகில் எனது தீவிரமான பயணம் ஆரம்பித்தது. கதைகள் வெளியாகும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்.
 
கதைக்கருவுக்கான வித்து
நான் பார்த்த, கேட்ட, என்னை பாதித்த சம்பவங்கள்தான் என் கதைக்கருக்கள். என் மனதை பாதிக்காத அல்லது நெகிழ வைக்காத எதுவும் கதையாவதில்லை. வெறும் கற்பனைக் கதைகள் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சம்பவங்கள், நான் பழகிய மனிதர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் என அவற்றைக் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுகிறேன்.

‘இதை எழுது எழுது’ என மனசு சொல்ல வேண்டும். அப்படி எழுதும்போதுதான் ஆத்மார்த்தமான எழுத்து வெளிவரும். பொற்கோவில் பிரச்னை வந்த போது, ஒரு சீக்கிய பையனை சிலர் துரத்திக்கொண்டு வந்து இருக்கிறார்கள். அந்த வழியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆட்டோவில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அவன் இவரிடம் உதவிக்கேட்டிருக்கிறான். துரத்தி வந்தவர்கள் அருகில் வரவே பயத்தால் அந்த பெண்ணால் அந்த சிறுவனுக்கு உதவ முடியவில்லை. அந்த செய்தியை நாளிதழில் படித்ததில் இருந்து நான்கு நாட்களாக எனக்குஅந்த பையன் என்னிடம் கெஞ்சுவது போலே இருந்தது. அந்த பாதிப்பில் நான் எழுதியது தான் ‘குருத்து’ எனும் கதை.
  
ஆதர்ச எழுத்தாளர்
தி.ஜானகிராமன். அவர் என் குரு. அவரது கதைகள் அவ்வளவு பிடிக்கும். அவ்வளவு மென்மையான கதைகள் அவை. ஒரு சிற்பி செதுக்கிற மாதிரி கதைகளை செதுக்கி இருப்பார். அந்த வர்ணனைகளை யாரும் தொட்டுவிட முடியாது. அவரை மாதிரி எழுத வேண்டும் என்று ஆசை இருந்தது.

தொடர்கள் எழுதிய காலகட்டம்
அப்போது தமிழக அலுவலகங்களில் மதிய சாப்பாட்டு நேரத்தில் சூடான தலைப்பு எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் கதைகள்தான். ஒருநாள் தெருவில் நான் நடந்து போகும்போது, என் பின்னால் வந்த இரு பெண்கள் நான் யார் எனத் தெரியாமல் அந்த கதையில் ‘இந்துமதி சங்கரின் காலை உடைச்சிட்டா, அவ கையை உடைக்கணும்னு’ பேசிக்கிட்டாங்க.

இப்போதைய டிவி சீரியல்கள் மாதிரி பெண்கள் அப்போது தொடர்கதைகளை அவ்வளவு தீவிரமாக விரும்பினார்கள். எங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரர்,  ‘தினம் இரண்டு பை முழுக்கக் கடிதங்கள் வருதும்மா உனக்கு. என்னால தூக்கிட்டு வர முடியலை. நீங்க எங்கயாவது வீடு மாறிப் போங்க’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.
 
நெகிழ்ச்சியான தருணம்
மாங்காடு கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது, பின் வரிசையில் நின்றிருந்த ஒரு வயதான மனிதர் என் அருகில் வந்து திடீரென்று என் காலில் விழுந்து கும்பிட்டார். நான் ஆடிப்போய் விட்டேன். ‘சரஸ்வதிம்மா நீ, உன் ‘தரையில் இறங்கும் விமானங்களுக்காக’ நூறு முறை கூட உன் காலில் விழலாம்’ என்று சொல்லிப் பாராட்டினர். நான் மிகவும் நெகிழ்ந்து போன தருணம் அது.
 
மறக்க முடியாத சில நிகழ்வுகள்
ஒரு முறை விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக  மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ சார்.. உங்களை தெரியாதா’ என நான் ஆச்சரியத்துடன் பேச, அதன்பிறகு அவர் ‘நான் உங்கள் ‘தரையில் இறங்கும் விமானத்தின்’ தீவிர வாசகன்.

அந்தக் கதையை எத்தனை முறை வாசிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது’ என என் எழுத்தைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டார். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் அது. தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரும் இந்தக் கதை குறித்து தங்கள் கருத்தை கடிதம் மூலமாக எனக்குத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தக் கதையை அடிப்படையாகக்கொண்டு 15 வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் எடுத்திருந்தார்கள். கதை விவாதமே என் புத்தகத்தை வைத்துக்கொண்டு தான் நடந்திருக்கிறது. ஆனால் இப்படி என் கதையைப் பயன்படுத்தியதை என்னிடம் தெரிவிக்கவும் இல்லை. குறைந்தபட்சம் மூலக்கதை இந்துமதியுடையது என்று கூட டைட்டிலில் போடவில்லை.
 
கதையின் நாயகர்கள்
இளவயதில் உள்ள அல்லது இளவயதைத் தாண்டிய ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த எதிர்பால் பிம்பம் ஒன்று இருக்கும். அது ஆணாய் இருந்தால் பெண் பிம்பம். பெண்ணாய் இருந்தால் ஆண் பிம்பம். அது போல எனக்கு வெள்ளையான, உயரமான, ‘வெள்ளை வேளேர்’ என்ற உடையில் இருக்கும் ஆண் பிம்பம் பிடித்தமானதாக இருந்தது. அதுதான் என் கதைகளில் வெளிப்பட்டது.

பாரதி ராஜா படங்களில், பெரும்பாலான பாடல் காட்சிகளில் தேவதைகள் லாலி பாடுவார்கள். அது அவருடைய ஃபேண்டஸி. இது என்னுடைய ஃபேண்டஸி. முதன் முதல் நான் எழுதிய த்ரில்லர் ‘யார்’. குமுதம் ஆசிரியர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் எழுதினேன். அந்தக் கதையை எழுதியது யார்? கொலை செய்தது யார்? கொலையைக் கண்டுபிடித்தது யார்? என பல கேள்விகள் இருந்ததால் அதற்கு ‘யார்’ எனப் பெயரிடப்பட்டது.

அதாவது அந்த தொடர் வெளிவந்தபோது அதை எழுதியது யார் என்று மக்களுக்குத் தெரியாது. அது கேள்வியாக வாசகர்களிடம் கேட்கப்பட்டது. பலர் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என நினைத்து எழுதி இருந்தனர். குடும்ப, சமூக நாவல்களை எழுதிக்கொண்டிருந்த நான் க்ரைம் எழுதுவேன் என பலரும் நினைக்கவில்லை. ஆனால் நான் வழக்கமாக எழுதும் ஸ்டைலை மாற்றியும் கூட என்னை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் ஒரு சிலர் மட்டும் என்னை அறியாமல் நான் ஓரிடத்தில் எழுதியிருந்த வெள்ளையான, உயரமான கதாநாயகனை வைத்து நான்தான் எழுதினேன் என அடையாளம் கண்டுகொண்டார்கள்.
 
சிவசங்கரி உடன் இணைந்து எழுதிய அனுபவம்
நாங்கள் இருவரும் இணைந்து ‘இரண்டுபேர்’ என்ற தொடரை எழுதினோம். மூலக்கதை என்னுடையது. ஆசிரியருக்குப் பிடித்திருந்ததால் இதனைத் தொடராக எழுதலாம் என்றார். ஒரு வித்தியாசமான முயற்சியாக இருவரும் சேர்ந்து எழுத முடிவெடுக்கப்பட்டது. தொடர் ஆரம்பிக்கும் முன்னர் போட்டோ ஷூட்டுக்காக சந்தித்துக்கொண்டபோது, தொடர் எப்படி எழுதுவது என்று கலந்தாலோசித்தோம்.

அதன்படி நான்கு வாரம் நான், நாங்கு வாரம் அவர் என மாற்றி மாற்றி எழுதினோம். அதில் எந்தவிதமான கஷ்டமும் எனக்கு இல்லை. தொடரின் போது இருவரையும் அட்டைப் படத்தில் போட்டார்கள். அந்தக் கதை தமிழகத்தை கலக்கிய கதை எனலாம். நிறைய கருத்துகள் வந்தன.

கலாச்சார மாற்றம் குறித்தான கதை என்பதால் எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் வந்தன. மொத்தத்தில் நிறைய வாசகர்களிடம் சென்றடைந்த தொடர் அது. என் ஸ்டைலில் நானும் அவர் ஸ்டைலில் அவரும் எழுதினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. கதை வெற்றி அடைந்தது.
 
அழகியல்
வர்ணனைகள். மென்மை, மென்மையான உணர்வுகளைக்கொண்ட கதாபாத்திரங்களை  படைத்திருக்கிறேன். என்னுடைய கதைகளில் எதிர்மறையான கதாபாத்திரங்களே இருக்காது. இயக்குனர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரு நல்லவரை விட இன்னொரு நல்லவர், அவரைவிட இன்னொரு நல்லவர் என்று இருக்கும். ஜானகிராமன் கதைகளிலும் இப்படித்தான் பெரும்பாலான பாத்திரங்கள் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். அதே போலத்தான் நானும் நிறையால் நிரப்பிக் கொண்டே இருக்க விரும்புவேன். நேர்மறை அலைகளை ஏற்படுத்தவே எனக்கு விருப்பம்.

எழுதியதில் பிடித்தவை
தரையில் இறங்கும் விமானம், தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள்.
 
சமீபத்தில் படித்து ரசித்த புத்தகம்
பாஸ்கர் சக்தி ஒருநாள் வீட்டிற்கு வந்து அவர் எழுதிய ‘காற்று வளையம்’ என்ற புத்தகத்தை அளித்தார். அந்த புத்தகத்தைப் படித்தேன். அற்புதமான நாவல் அது.

வாழ்க்கையின் தத்துவம்
அன்பு. எல்லாரிடமும் அன்பு செலுத்த வேண்டும். நான் சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் நேசிக்கிறேன். யாரையும் யாரும் உடலால் மட்டுமல்ல, மனதாலும் காயப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம். அன்பை மிஞ்சி இந்த உலகத்தில் எதுவுமில்லை.
 
அண்மையில் எழுதியது
குமுதத்திற்கு ‘ஆறு வாரத்தொடர்’ எழுதினேன். இப்போது ‘சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு’ எழுதி இருக்கேன். நான் பெரும்பாலும் அறிவுரை எதுவும் சொல்வதில்லை. உயிரோட்டமாக எழுதுவேன். அதில் தேவையானதை எடுத்துக்கொள்வது வாசகருடைய பொறுப்பு. என் கதைகளில் கூட சில கதைகளில் முடிவென்று எதுவும் இருக்காது. அதை வாசகர்களின் யூகத்திற்கே விட்டுவிடுவேன். 
 
ஆண் எழுத்தாளர்கள் - பெண் எழுத்தாளர்கள்
எனக்குப் பிடிக்காத விஷயம் இது. எழுத்தில் ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் எனப் பிரித்துப் பார்ப்பது ஏன்? எல்லாரும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதுகிறார்கள். பெண்களும் எல்லா விஷயத்தையும் தன் எழுத்தில் பேசுகிறார்கள். பெண்களால முடியாதது ஒன்றுமில்லை எனும்படியாக இன்றைய பெண் எழுத்தாளர்கள் அதிரடியாக எழுதுகிறார்கள். அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள். ஆண் எழுத்தாளர்களும் வணிக ரீதியாக எழுதுகிறார்கள். பெண் எழுத்தாளர்களும் இலக்கியத்தரமாக எழுதுகிறார்கள். எழுத்துக்குக் கண்டிப்பாக ஆண்-பெண் வித்தியாசம் கிடையாது.
 
எழுத விரும்பும் பெண்களுக்கு சொல்ல நினைப்பது
என்றைக்குமே யாருமே தயவுசெய்து ஜன்னலில், பால்கனியில உட்கார்ந்து கொண்டு கதை எழுத நினைக்காதீர்கள். அனுபவம் உள்ள எழுத்துதான் நிற்கும். ஏதோ ஒரு அனுபவம், அந்த அனுபவம் நமக்குத்தான் நேர்ந்திருக்கவேண்டும் என்பதில்லை. பக்கத்து வீட்டில் நடந்தது, எங்கேயோ தெருவில் நடந்தது, யாருக்கோ நடந்ததாக இருந்தாலும் அந்த நினைவு நம்மை இம்சிக்கவேண்டும். அந்த வலியை நாம் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது அந்த மகிழ்ச்சியை நாம் உணரவேண்டும். அப்படி அனுபவப்பட்ட எழுத்துக்களாக எழுதுங்கள். அது கட்டாயம் உங்கள் பேர் சொல்லும்.
 
குங்குமம் தோழிகளுக்கு
சொல்ல விரும்புவது சமைப்பது, கணவனை வேலைக்கு அனுப்புவது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி பார்ப்பது என்று இருக்காதீர்கள். அது மட்டும் வாழ்க்கை கிடையாது. சமூக நலனில் அக்கறை செலுத்துங்கள். சமூகப் பொறுப்புணர்ச்சியோடு இருங்கள். வீடு என்கிற ஒரு சின்ன வட்டத்தோடு நிற்காமல் உங்கள் பார்வை விரிவடையட்டும். நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்யுங்கள்.

படங்கள்: ஆர்.கோபால்

‘இரண்டு பேர்’ ஏற்படுத்திய கலாசார அதிர்ச்சி சிவசங்கரியும் இந்துமதியும் இணைந்து எழுதிய தொடர்கதை வெளிவந்தபோது அந்தக் காலகட்டத்தில் அது கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதற்கு எதிர்வினைகளாக வந்த கடிதங்களில் எழுதிய இருவரையும் சராமாரியாக தாக்கி எழுதி இருந்தனர் வாசகர்கள் என்கிற பெயரில் எழுதியவர்கள்.

இந்தக் கடிதங்களில் சில ‘இரண்டு பேர்’ நூலாக வெளிவந்தபோது இணைக்கப்பட்டிருந்தன. பெண்கள் எழுதவரும்போது மட்டும் இச்சமூகத்திற்கு இயைந்த கருத்துக்களை மட்டுமே எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறது இச்சமூகம். மாறாக சற்றே சுதந்திர சிந்தனையுடன் எழுதிவிட்டால் கட்டுப்பெட்டி மனம் உடனே வசைபாடவும் அவதூறும் செய்யத் துவங்கும் என்பது இந்துமதி காலத்திலிருந்து இப்போதுவரை தொடரவே செய்கிறது.