டைட்டில் வைக்க எம்ஜிஆர் கற்றுக் கொடுத்தார்




“கல்லூரியில் படிக்கும்போதே திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்த அனுபவமும் மறக்க முடியாதது...’’ என்று ஆரம்பித்தார் இயக்குநர் வி.சி.குகநாதன்.
‘‘பச்சையப்பன் கல்லூரி யில் பி.காம் படிக்கும் போதுதான் எனக்குள் இருந்த தமிழ் ஆர்வமும் நாடகங்கள் மீது இருந்த ஈடுபாடும் அதிகமானது. அத்துடன் சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து மும்முரமாக கதைகள் எழுத ஆரம்பித்தேன். கதைகள் எழுதிய எனக்கு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பமும் அமையவில்லை.

ஒரு கட்டத்தில் பழம்பெரும் எழுத்தாளர் ஜி. பாலசுப்ரமணியம் அவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் எனக்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தவர் அவர்தான். இன்று நான் சுமார் 250 படங்களுக்கு மேல் கதை எழுத காரணமாக இருந்தவரும் அவர்தான். அந்தக் காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆலயமணி’, ‘பணமா பாசமா’, ‘பாலும் பழமும்’ உட்பட ஏராளமான படங்களுக்கு கதை எழுதியவர் அவர். அவரிடம் என்னுடைய நாடகப் படைப்புகளைக் காண்பித்தேன். அவரும் என்னுடைய படைப்புகள் மீது திருப்தி அடைந்து தன்னுடைய உதவியாளராகச் சேர்த்து கொண்டார். தவிர என்னை நடிக்க வைக்கவும் முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. ஒரு படத்துக்கு எப்படி திரைக்கதை எழுத வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவர் கதை எழுதிய ‘தாழம்பூ’, ‘கலங்கரை விளக்கம்’, ‘முகராசி’ உட்பட ஏராளமான படங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியாக நாடகமும் அரங்கேற்றம் செய்து கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில்தான் எம்ஜிஆரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு எம்ஜிஆர் நடித்த ‘புதிய பூமி’ படத்துக்கு கதை எழுத வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. அந்தப் படத்தை சுமார் 10 முறையாவது பார்த்திருப்பேன். அதுபோல் என்னுடைய சினிமா வாழ்க்கையும் எம்ஜிஆர் நடித்த ‘புதிய பூமி’ படத்திலிருந்து ஆரம்பமாகியது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்ஜிஆரை முதன் முதலாகச் சந்தித்தபோது ‘உங்களுடைய எதிர்கால லட்சியம் என்ன’ என்று கேட்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தாலும் அவருடைய அழகை நேரில் பார்த்த பிறகு நான் நடிகனாக வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை சொல்ல கூச்சமாக இருந்ததால் ‘சினிமாவுக்கு கதைகள் எழுத வேண்டும்’ என்று சொன்னேன். உடனே அவர் ‘எனக்கு ஒரு கதை எழுதி வாருங்கள்’ என்றார். நானும் ‘பார்வதி’ என்கிற பெயரில் ஒரு கதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அந்த கதையை படித்த எம்ஜிஆர் ‘இதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கு. என்னுடைய ரசிகனாக இருக்கும் நீங்கள் எனக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கலாமே?’ என்றார்.

அடுத்த நான்கைந்து நாட்களில் மீண்டும் எம்ஜிஆரை கதையுடன் சந்தித்தேன். அந்த கதையை ஓ.கே. செய்தார். அதுதான் ‘புதிய பூமி’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. அந்தப் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், ரமாபிரபா, உட்பட ஏராளமான நடிகர்கள்  நடித்தார்கள். அந்தப் படத்தை இயக்கியவர் சாணக்கியா. அவரிடமும் சிறிது நாட்கள் உதவி இயக்குநராக வேலை செய்தேன். எம்ஜிஆர்தான் அவரிடம் ‘தம்பியை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சிபாரிசு செய்தார். ‘புதிய பூமி’ படத்தில் நான் பணிபுரியும்போது சிவாஜி நடித்த ‘தங்கைக்காக’ படத்தின் கதை எழுதினேன். பிறகு ‘எங்க மாமா’, உட்பட ஒரே சமயத்தில் ஏழெட்டு படங்களுக்கு கதை எழுதினேன். இந்தக் கதைகள் எழுதும்போது நான் பச்சையப்பா கல்லூரி மாணவன்.

‘புதிய பூமி’ படத்துக்குப் பிறகு மீண்டும் எம்ஜிஆர் நடித்த ‘குமரிக் கோட்டம்’ படத்துக்கு கதை எழுதினேன். எனக்கு அந்தப் பட வாய்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. அந்தப் படம் உருவாகிய சமயத்தில் பச்சையப்பா கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோவை செழியன் என்னை தேடி கல்லூரிக்கு வந்தார். அவரிடம் விபரத்தை கேட்டேன். ‘எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்க போகிறேன். அவர்தான் உங்களிடம் கதை இருக்கிறதா என்று கேட்கச் சொன்னார்’ என்றார். உடனே ஆர்வத்துடன் ஒரு கதையை எழுதி எம்ஜிஆரிடம் கொடுத்தேன். அவர் அந்தக் கதையைப் படிக்க ஆரம்பித்ததும் என்னிடம் பேனா கேட்டார். அந்த கதைக்கு நான் ‘ஏழை அழுத கண்ணீர்’ என்று டைட்டில் வைத்திருந்தேன்.

உடனே அவர் பேனாவால் அந்த டைட்டிலை திருத்தி ‘படத்துக்கு இப்படி டைட்டில் வைக்கக் கூடாது. பாசிடிவ்வாகத்தான் வைக்க வேண்டும்’ என்றார். பிறகு அண்ணாவின் ‘குமரிக் கோட்டம்’ டைட்டிலையே படத்துக்கும் தலைப்பாக வைத்தோம். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது...’’ என்று நிறுத்திய வி.சி.குகநாதன், அதன் பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து அடுத்த வாரம் தொடர்கிறார்.
- சுரேஷ்ராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்