உயிருக்கு ஆபத்தான இடத்தில் பாடல் காட்சி




‘ஜில்லுன்னு ஒரு காதல்’ இயக்கிய கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நெடுஞ்சாலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆரி ஹீரோ. ஷிவாதா என்ற புதுமுகம் ஹீரோயின். சத்யா இசை, ராஜவேல் ஒளிவீரன் ஒளிப்பதிவு. கேரள மாநிலம் கண்ணனூர் அருகில் உள்ள மலையில் படப்பிடிப்பு.

பொதுவாக பாடல் காட்சிகளுக்கு பசுமையான பின்னணியைத் தேடிச் செல்வார்கள். இவர்கள் வந்திருப்பது தங்கம்போல தகதகவென மின்னும் ஒரு பின்னணியைத் தேடி. ஏதோ வெளிநாட்டு லொக்கேஷன் போன்று அத்தனை பிரமாதமாக இருந்தது. ஒரு ஆள் உயரத்துக்கு வளரும் ஒரு வகையான புல்வெளி அது. ஆண்டு முழுவதும் பசுமையாக இருந்துவிட்டு ஒரு மாதத்தில் இப்படி காய்ந்த சருகாகி எரிந்து விடுமாம். மீண்டும் மழைக்காலம் தொடங்கும்போது முளைக்கத் தொடங்குமாம். இப்படி காய்ந்து நிற்கிற காலத்தில் இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுவிடுமாம். காரணம் எந்த நேரத்திலும் தீ பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறதாம்.



சில பல சிபாரிசுகளைப் பிடித்து இந்த லொக்கேஷனில் படம் பிடிக்க பர்மிஷன் வாங்கி வந்திருக்கிறார் கிருஷ்ணா. ‘எங்கள் உயிருக்கு நாங்களே பொறுப்பு’ என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். நான்கு தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருக்க படப்பிடிப்பு நடந்தது. நடன இயக்குநர் நோபல் ஆரிக்கும், ஷிவதாவுக்கும் மூவ்மெண்டுகளை சொல்லிக் கொடுத்துவிட்டு கேமரா அருகில் வந்தார். ‘ஸ்டார்ட் மியூசிக், ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன்...’ என்றார் நோபல். ‘இஞ்சாதே... இஞ்சாதே...’ என்று பாடல் ஒலிக்க... ஆரியும், ஷிவதாவும் காய்ந்த புல்வெளிக்கு நடுவில் காதலுடன் ஆடினார்கள். டேக் ஓகே என்று மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா சொல்ல ஓடிச் சென்ற இரண்டு பேர் ஷிவதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள்.

என்னாச்சு..? என்கிற தோரணையில் நாம் கிருஷ்ணாவைப் பார்க்க, ‘‘படத்தோட முதல்நாள் ஷூட்டிங்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகிப்போச்சு. அந்த நாள்ல ஓடின ஆட்டோ படத்துல ஒரு முக்கியமான கேரக்டர். அதுக்காக தேடிப் பிடிச்சு அந்த ஆட்டோவைக் கொண்டு வந்து ஓடுற கண்டிஷனுக்கு ரெடி பண்ணி யூஸ் பண்றோம். அதுல ஏறி வர்றமாதிரி முதல் சீன். ஷிவதா ஆட்டோல ஏறியதும் பேலன்ஸ் பண்ண முடியாம கீழ விழுந்துட்டார். அதுல சின்ன ப்ராக்சர் ஏற்பட்டுப் போச்சு. இருந்தாலும் அதையும் பொறுத்துக்கிட்டு நடிச்சுக்கிட்டிருக்கார். நல்ல டெடிகேட்டிவான பொண்ணு. நல்லா வருவாங்க...’’ என்றார்.



ஜில்லுன்னு அழகா ஒரு காதல் படம் பண்ணிட்டு ‘நெடுஞ்சாலை’னு ஒரு வெயிட்டான சப்ஜெக்ட் பண்றீங்கபோல... என்றால், ‘‘நிச்சயமா அப்படித்தான். என்னோட ஒரு படம் போல இன்னொரு படம் இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக் களத்தை புடிச்சேன். கன்னியாகுமரிலேருந்து காஷ்மீர் வரைக்கும் டிராவல் பண்ணி லொக்கேஷன் புடிச்சேன். 1985-89 காலகட்டத்துல நடக்கிற கதை. 5 பேருடைய வாழ்க்கையின் முக்கிய கட்டம்தான் படம். எல்லோருமே நெடுஞ்சாலையோடு சம்பந்தப்பட்டவங்க. ஹீரோ ஹீரோயின்னு யாரும் கிடையாது. புதுசான திரைக்கதை, படமும் புதுசா இருக்கும்...’’ என்று பேசிக்கொண்டே இருந்தவர் ‘சிகரெட் ஸ்மைல் அடிக்குதுல்ல?’ என்று அதிர்ச்சியானார்.



‘‘யோவ் யாருய்யா சிகரெட் பிடிக்குறது?’’ என்று கத்த மொத்த யூனிட்டும் பரபரப்பாக சிகரெட் புகைவந்த இடத்தைத் தேடினார்கள். ஒரு கார் டிரைவர் மறைவாக தம் அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து இயக்குநர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ‘‘ஏன்ணே இத்தனை உயிரோட விளையாடறீங்க? ஒரு பொறி போதும். நம்ம எல்லோரும் கூண்டோடு கைலாசம்தான்...’’ என்று கடிந்துவிட்டு நம்மிடம் வந்தார். ‘டென்ஷனா இருக்கீங்க. அடுத்த ஷாட்டுக்கு போங்க...’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
- மீரான்