சொந்த வீட்டுக்கே விருந்தாளியான லஷ்மிராய்




லஷ்மிராய் என்று சொன்னாலே, ஏதோ சொல்ல முடியாத ‘ஈர்ப்பு’ இருக்கத்தான் செய்கிறது. தெலுங்கில் ரிலீசான ‘பலுபு’ படத்துக்காக அவர் குத்தாட்டம் போட்டுள்ள ஹாட் ஸ்டில்கள் இணையதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் பி.பியை எகிற வைத்துள்ளது. ஆனால், வழுவழுப்பான கால்கள் மட்டும் சற்று பருத்து காணப்படுகின்றன. இதுகுறித்து மும்பையில் இருந்த லஷ்மிராயிடமே கேட்டோம். ‘அடப்பாவிங்களா... இதைக் கூடவா கவனிப்பீங்க?’ என்று சிரித்தார். அதுதான் லஷ்மிராய். தாட், பூட் என்று கோபப்பட மாட்டார்.



‘‘ஷூட்டிங் நடந்து ரொம்ப நாளாச்சு. அந்த பாட்டுக்கு ஆடினப்ப, கொஞ்சம் வெயிட் போட்டிருந்தேன். அதுதான்...’’ என்றவர், இப்போது பாதிக்குப் பாதி உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம். காரணம், அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பாரே, பாலிவுட் என்ட்ரியைப் பற்றி. அந்த கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. இந்த ஆண்டு இறுதியில் அவர் நடிக்கும் இந்திப் படத்துக்கான அறிவிப்பு வருகிறது.



‘‘பாலிவுட் என்ட்ரி பிரமாதமா இருக்கணும். அதுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு எக்சர்சைஸ் பண்றேன். இந்தியில் ஒரு படம் பண்ணா, அது முடியறவரைக்கும் அதுல மட்டும்தான் கவனம் செலுத்தணும். அப்பதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்’’ என்ற லஷ்மிராய், தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் ‘ராணி ராணம்மா’ படத்தில், அர்ஜுன் ஜோடியாக நடிக்கிறார். ‘‘இந்தமாதிரி கேரக்டர் வேற எந்த ஹீரோயினுக்கும் கிடைச்சிருக்காது. அந்தவிதத்தில் நான் லக்கி. முதல் பாதி முழுக்க ஒருவிதம், அடுத்த பாதி முழுக்க யாரும் எதிர்பார்க்காதவிதமா என் கேரக்டர் இருக்கும். இந்தப் படத்துக்கு 75 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். அதனாலதான் தமிழ், மலையாளம், கன்னடம்னு எந்த மொழியிலும் நடிக்கலை...’’ என்றார்.



40 படங்களை தொட்டுள்ள லஷ்மிராய், தயாரிப்பு பணியில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக சொல்கிறார். மும்பையிலுள்ள சொந்த வீட்டில் அப்பா, அம்மா, இரண்டு அக்காக்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என குதூகலமாக இருக்கிறார். ‘‘நடிப்புல பிஸியா இருந்ததால், பெற்றோர் கூட தங்க முடியாம தவிச்சேன். என் சொந்த வீட்டுக்கே விருந்தாளி மாதிரிதான் வந்து போய்க்கிட்டிருந்தேன். இப்ப எல்லாரும் என்கூட தங்கியிருக்காங்க. கூடிய சீக்கிரம் நாங்க எல்லாரும் இந்தியா முழுக்க டூர் போறோம். இது ஃபேமிலி டூர். திருஷ்டி பட்டுடாம இருக்கணும்...’’ என்று, சாமியை வேண்டிக்கொண்டார்.
- தேவராஜ்