மீண்டும் கவுண்டமணி




விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடிப்பில் ரிலீசான ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீபாலாஜி. இதையடுத்து கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென்று அந்தப் படத்தில் இருந்து விலகினார். இப்போது புதுமுகம் மிதுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு ‘எங்க காட்டுல மழை’ என்று பெயரிட்டுள்ளார். புதியவர் ஸ்ரீவிஜய் இசையமைக்கிறார்.

தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்க திட்டமிட்டிருந்த மனோஜ் கே.பாரதி, அந்த எண்ணம் ஈடேறாத நிலையில், ‘தாஜ்மஹால்’ படத்தை தொடர்ந்து மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடி’ படத்தில் வில்லனாக நடித்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் ‘அசத்தப்போவது நீயா? நானா?’ என்ற படத்துக்கான தொடக்க விழா நடந்தது. அப்போது பேசுகையில், ‘அப்பா வழியில் நானும் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துவிட்டேன். முழுநீள காமெடி கதை என்பதால், ‘டப்பா மோகனுக்கு கல்யாணம்’ என்று பெயரிட்டுள்ளேன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்ற மனோஜ் கே.பாரதி, இந்தப் படத்தின் கதையை இதுவரை பாரதிராஜாவிடம் சொல்லவில்லையாம்.

கடைசிவரை கவர்ச்சி நடிகையாகவே அறியப்பட்டவர், மறைந்த சில்க் ஸ்மிதா. அவரை ‘வீணையும் நாதமும்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்த இயக்குநர் முகவை ஆர்.திருப்பதிராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் அவர், ‘வேஷதாரிகள்’ என்று பெயரிட்டுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்புகளையும் அவரே ஏற்றுள்ளார். புதுமுகங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் நான்கு இயக்குநர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக துளசிராஜன் இசையில் மறைந்த டி.எம்.சவுந்தரராஜன் பாடிய, ‘சமுதாயச் சந்தையிலே கண்ணீர்த் துளிகள்... சஞ்சலத்தில் ஆடுதே கன்னி விழிகள்’ என்ற பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவரது கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.




கோவையில் வசித்த மயில்சாமிக்கு அப்போது 9 வயது. தனது தெருவில் நின்றிருந்த ‘பென்ஸ்’ காரை ஆசையுடன் தொட்டுப் பார்த்திருக்கிறார். அப்போது ஆவேசமாக ஓடிவந்த அதன் உரிமையாளர், மயில்சாமியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து நடுரோட்டில் தள்ளிவிட்டாராம். அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் மறையவில்லை. ‘நானும் ஒருநாள் பென்ஸ் கார் வாங்குவேன்’ என்று சபதம் செய்த மயில்சாமி, 41 வருடங்களுக்குப் பிறகு அந்த ஆசை ஈடேறியதாகச் சொல்லி நெகிழ்கிறார். ‘இப்ப எனக்கு 50 வயசு. சமீபத்துல பென்ஸ் கார் வாங்கினேன். ‘பட்டத்து யானை’ ஷூட்டிங்கில் இருந்தப்ப, சந்தானம் கிட்ட ஐடியா கேட்டேன். 45 லட்சம் செலவாயிடுச்சி. ஆனா, என் லட்சியம் நிறைவேறிடுச்சி. காரை எடுத்துக்கிட்டு ரஜினி சார், கமல் சார் கிட்ட காட்டினேன். என் சந்தோஷத்தை அவங்களும் பகிர்ந்துகிட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டாங்க’ என்ற அவர், விரைவில் ‘சிங்கம் புலி சிறுத்தை’ என்ற முழுநீள காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வாய்மை’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் கவுண்டமணி. இதில் சாந்தனு, பானு ஜோடியாக நடிக்கின்றனர். இதையடுத்து ‘49 ஓ’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டமணி. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ படங்களில் கவுதம் வாசுதேவ் மேனனிடமும், ‘யாவரும் நலம்’ படத்தில் விக்ரம் கே.குமாரிடமும் பணியாற்றிய ஆரோக்கியதாஸ் இயக்குகிறார். கே.வி.ஆனந்த் உதவியாளர் பாபு ஒளிப்பதிவு செய்கிறார். கவுண்டமணி ஜோடியாக புதுமுகம் நடிக்க, காமெடி வேடத்தில் சத்யன் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘பணம் பத்தும் செய்யும்’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘தலையாட்டி பொம்மைகள்’, ‘ராஜா எங்க ராஜா’ போன்ற படங்களில் கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘49 ஓ’ படத்தில் அவர் விவசாயி வேடத்தில் நடிக்கிறார்.

விஷால் நடித்த ‘திமிரு’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி என்கிற கோபிநாத். பிறகு சிம்பு நடித்த ‘காளை’ படத்தை இயக்கினார். பிறகு ராசு மதுரவன் இயக்கிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ மூலம் நடிகராக மாறிய தருண்கோபி, இப்போது ‘சரவண குடில்’, ‘பேச்சியக்கா மருமகன்’, ‘கன்னியும் காளையும் செம காதல்’ படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குகிறார். அதற்காக ‘திமிரு புரொடக்ஷன்ஸ்’ என்ற சொந்தக் கம்பெனி தொடங்கியுள்ளார். அவருடன் இன்னொரு இளம் ஹீரோ நடிக்கிறார். படத்துக்கு ‘சூதாட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.



செல்வா இயக்கத்தில் அஜீத் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில், அஜீத்துக்கு டப்பிங் பேசியவர் விக்ரம். அந்த காலக்கட்டத்தில் விக்ரம், பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். பிறகு விக்ரம் ஹீரோவாக நடித்து பிரபலம் அடைந்தபோது, ‘உல்லாசம்’ படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தார். பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில், அஜீத்துக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் டப்பிங் பேசினார். பிறகு அவர்கள் இருவரும் ‘அசல்’ படத்தில் சேர்ந்து நடித்தனர். மற்ற படங்களில் எல்லாம் அஜீத் சொந்தக்குரலில் பேசி நடித்து வருகிறார்.

அனுஷ்காவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். ‘நானும், நயன்தாராவும் லவ் பண்ணல. ஆனா, அதையும் தாண்டி எங்களுக்குள்ள நட்பு இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வந்தா கூட, ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டி விளையாடுவோம். அந்த அளவுக்கு எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. இதை வேறமாதிரி கண்ணோட்டத்தோட பார்க்காதீங்க. அது ரொம்ப தப்பு’ என்று சொல்லும் ஆர்யா, ‘ராஜா ராணி’ படத்தின் புரமோஷனுக்காக தங்களுக்கு திருமணம் நடந்தது போன்ற விளம்பர யுக்தியைக் கையாண்டாராம். இதற்கு நயன்தாராவும் சம்மதித்தாராம். சரி, ‘அனுஷ்காவுடன் என்ன உறவு?’ என்று கேட்டபோது சிரித்த ஆர்யா, ‘அவரும், நானும் குளோஸ் பிரெண்ட்ஸ். ரெண்டுபேரும் பேசாத விஷயமே கிடையாது. தயவுசெய்து எங்களைப் பற்றி தப்பா பேசாதீங்க’ என்று, எதுவும் தெரியாத பச்சபுள்ள போல் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

சின்ன வயதில் காஜல் அகர்வாலுக்கு பால் என்றாலே பிடிக்காதாம். காரணம் அது வெண்மை நிறத்தில் இருப்பதாம். இதையறிந்த அம்மா, பாலில் சிறிதளவு காபி பவுடரை கலந்து கொடுப்பாராம். அது நிறம் மாறி காணப்படுவதால், வேறு ஏதோ என்று நினைத்து குடிப்பாராம். இதை ஒரு விழாவில் நினைவு படுத்தி சிரித்த அவர், விஜய்யுடன் ‘ஜில்லா’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படங்களில் நடிப்பதாகச் சொன்னார்.
- தேவராஜ்