இன்னொரு வாலி




வாலி ஹீரோவாக அறிமுகமாகும் ‘குற்றாலம்’ படத்தை வி.சாய் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடத்தில் ரியாஸ்கான், சஞ்சய் ராம், மீனு கார்த்திகா, சவுகந்தி நடிக்கின்றனர். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். சஞ்சய் ராம் இயக்குகிறார்.

இப்படத்துக்காக, ‘லவ் பெயிலியர் ஆந்தம்’ என்ற பெயரில் புரமோஷன் பாடல் ஒன்று ரூ.50 லட்சம் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் வாலி, ரியாஸ்கான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மாடல் அழகிகள் பங்கேற்று ஆட்டம் போட்டுள்ளனர்.

‘‘சீசன் முடிந்துவிட்டால், அதுவரை செழிப்பாக இருந்த குற்றாலம் வறட்சியான பூமியாக மாறிவிடும். எனவே, குற்றாலத்தை செழிப்பான பூமியாக மாற்றிக் காட்டுகிறோம் என்று நானும், ரியாஸ்கானும் சொல்லி, அங்கு இருப்பவர்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறோம். திடீரென்று அந்த ஊருக்கு வரும் அக்கா, தங்கை இருவரும் ஒருவனை மட்டும் காதலிக்கின்றனர். இந்த கேரக்டர்களில் மீனு கார்த்திகாவும், சவுகந்தியும் நடிக்கின்றனர். இறுதியில் யாருடைய காதல் ஜெயிக்கிறது என்பது சஸ்பென்ஸ்...’’ என்று சிரிக்கிறார் வாலி.
- மிஸ்டர் டி