பிரியாணி முதல் தோசை வரை



பொதுவாகவே தாய்மார்கள் தங்கள் பெண்களிடம், ‘என்னைக்கு இருந்தாலும் நீ புருஷன் வீட்டுக்கு வாழப் போறவடி. இப்பவே நல்லா சமைக்க கத்துக்க.  இல்லன்னா, புகுந்த வீட்டுல என்னைத்தான் குத்தம் சொல்வாங்க’ என்று சொல்வது வழக்கம். திருமணமாகி பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு செல்லும்  பெண்கள், தாலி கட்டிய கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு பாராட்டு பெறுவது உண்டு. சரி, இந்த விஷயத்தை எதற்கு இப்போது சொல்கிறீர்கள்  என்று நீங்கள் முணுமுணுக்கும் சத்தம் கேட்கிறது. விஷயத்தைச் சொல்லிவிடுகிறோம்.

தமன்னா இப்போது தீவிரமாக சமைக்க கற்றுக்கொண்டு இருக்கிறாராம். அதற்கு முதற்படியாக வெந்நீர் போடுவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது  போன்ற சங்கதி களைச் சொல்லி வெறுப்பேற்ற விரும்ப வில்லை. அம்மணிக்கு இப்போது சமையல் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. உடனே, தமன்னா திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக தலைப்பு போட்டுவிட முடியாது.

ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரங்களில் இசை கேட்பதும், புத்தகம் படிப்பதும், நடனம் ஆடுவதும் தமன்னாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இப்போது  அவர் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் பேசவும் தயாராகிவிட்டார். பேஸ்புக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு ரசிகர்  கேட்ட கேள்விக்கு பதில் சொல்கையில், ‘ஷூட்டிங் இல்லாதபோது, மும்பையிலுள்ள என் வீட்டில் சமைக்க கற்றுக்கொள்கிறேன். இப்போது நான் நன்றாக  தோசை வார்ப்பேன்’ என்ற தகவலைப் பதிவு செய்துள்ளார்.

மும்பையை விட ஐதராபாத்தில் அதிக நேரத்தை செலவழிக்கும் அவர், அங்கு பிரபலமாக இருக்கும் ஐதராபாத் பிரியாணி என்றால், டயட்டைப் பற்றி சிறிதும்  கவலைப்படாமல் அரை பிளேட், முக்கால் பிளேட், முழு பிளேட் என்று ரசித்து, ருசித்து சாப்பிடுவாராம். சென்னைக்கு வந்தால் பூ போன்ற இட்லியும்,  கமகமவென்று மணக்கும் சாம்பாரும் உடனடியாக அவருக்கு தேவைப்படும். என்றாலும், மொறுமொறு தோசை சாப்பிட அதிக ஆர்வம் காட்டுகிறார். எவ்வளவு  சாப்பிட்டாலும், உடனே தேவையற்ற கலோரிகளைக் குறைக்க உடற்பயிற்சி செய்வதில் மட்டும் தமன்னாவை யாராலும் தோற்கடிக்க முடியாது. அதனால்தான்  சாப்பாட்டு ராமியாக இருந்தாலும், இன்னமும் அவர் ‘சிக்’கென்று ‘கிக்’ ஏற்றும் தோற்றத்தில் இருக்கிறார்.

- தேவராஜ்