ஜூனியர் விஜயகாந்த் படத்தில் விஜய்



விக்ரமன் உதவியாளர் கே.நாகபூஷன் தமிழ் மற்றும் தெலுங்கில் எழுதி இயக்கி தயாரிக்கும் ‘3ம் பார்வை’ படத்தில் டாக்டர் நீரஜ் ஷ்யாம், ஹரிப்பிரியா ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.எல்.சூர்யா இசையமைக்கிறார். பிறைசூடன் வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார். இதில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா கூறுகையில், ‘தமிழில் ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘துள்ளி எழுந்தது காதல்’, ‘முரண்’ படங்களில் நடித்தேன். அனைத்தும் ரிலீசாகி விட்டது. இப்போது ‘அட்ட கத்தி’ தினேஷ் ஜோடியாக ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் முடிந்து விட்டது.

‘3ம் பார்வை’ தமிழில் எனக்கு ஆறாவது படம். இப்படம் என்னை முன்னணிக்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன். முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன். இது காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வருவேன்’ என்ற ஹரிப்பிரியா, இப்போது தமிழில் சரளமாகப் பேசுகிறார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் ரசிகரான கார்த்தி, தன் வீட்டிலுள்ள அலமாரி முழுக்க அவரது பாடல் சி.டிகளை அடுக்கி வைத்திருக்கிறார். ‘என் தந்தை சிவகுமார் நடித்த ‘அன்னக்கிளி’, இளையராஜாவுக்கு முதல் படம். நான் அறிமுகமான ‘பருத்திவீரன்’ படத்துக்கு அவரது மகன் யுவன் இசையமைத்தார். இப்போது யுவனின் 100வது படத்தில் நான் ஹீரோவாக நடித்துள்ளேன். இது அவருக்கு மட்டுமல்ல,

எனக்கும் ஸ்பெஷலான படம். சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து, அரட்டையடித்து திரிந்த நாங்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றியதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. அமரர் வாலி எழுதிய ‘மிசிசிப்பி...’ என்ற பாடலை நானும், பிரேம்ஜி அமரனும் பாடியிருக்கிறோம். ‘ரன் பார் யுவர் லைஃப்...’ என்ற பாடல் காட்சியில் 600 ‘கட்’டுகள் இடம்பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது’ என்றார் கார்த்தி.

விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘சகாப்தம்’. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். ‘நெல்லை சந்திப்பு’ இயக்குநர் கே.பி.பி. நவீன் கிருஷ்ணா எழுதிய கதைக்கு ஆர்.வேலுமணி வசனம் எழுதுகிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ‘வல்லரசு’ இயக்குநர் என்.மகாராஜன் உதவியாளர் டி.இ.சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். சென்னை மற்றும் மலேசியாவில் ஷூட்டிங் நடக்கிறது. விஜயகாந்த் மற்றும் விஜய் சிறப்பு வேடத்தில் நடிப்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.

புதுமுகம் ஆகாஷ் ஜோடியாக ‘கடவன்’ படத்தில் நடிக்கும் சுப்ரஜாவிடம், ‘உங்களை எங்க யோ பார்த்த மாதிரி இருக்கே. நீங்க யாரு?’ என்று கேட்டோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காத அவர், ‘ஏற்கனவே நான் தமிழில் ‘அவர்களும் இவர்களும்’, ‘வெள்ளை’ படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். தெலுங்கில் ரிலீசான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ரீமேக்கில், இங்கு காயத்ரி ஏற்றிருந்த வேடத்தை தெலுங்கில் ஏற்று நடித்திருந்தேன்’ என்றார். அவர் வசிப்பது திருப்பதியில் என்றாலும், தமிழில் பேசி கொஞ்சுகிறார்.

விஜய் படம் என்றாலே, ஓப்பனிங் சாங் பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்திருக்கும். இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் 85வது படம் என்ற பெருமைக்குரிய ‘ஜில்லா’ படத்திலும் பட்டையைக் கிளப்பும் ஓப்பனிங் பாடல் இடம்பெற்றுள்ளது. இமான் இசையில் யுகபாரதி எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன் இணைந்து பாடிய, ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா... எதுத்து நின்னவன் தூசுடா’ என்ற பாடல் காட்சி, திருமூர்த்தி மலை அணையில் ராஜீவன் அமைத்திருந்த பிரமாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்டது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு செய்தார். ராஜுசுந்தரம் நடனப் பயிற்சி அளித்தார். ‘முருகா’ படத்தைக் கொடுத்த ஆர்.டி.நேசன் இயக்கினார். இப்பாடல் காட்சியில் விஜய்யும், அவரது தந்தையாக நடிக்கும் மலையாள மெகா ஸ்டார் மோகன்லாலும் இணைந்து ஆடினர்.

‘ஒருதலை ராகம்’ ஹீரோ சங்கரை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. தமிழில் கடைசியாக ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்திய அவர், அங்கு ‘வைரஸ்’, ‘கேரளோற்சவம்-2009’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கினார். தமிழில் ‘ஒருதலை ராகம்’ படத்தை ரீமேக் செய்து இயக்க ஆசைப்பட்ட அவர், அது நிறைவேறாத நிலையில், இப்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். முழு படப்பிடிப்பும் துபாயில் நடந்துள்ளது. ஆடம்பரமாக வாழ்வதற்காக அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள், அங்குள்ள கடுமையான சட்டங்களால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? நினைத்தபடி அவர்களால் பணத்தைச் சம்பாதித்து சேமித்து வீட்டுக்கு அனுப்ப முடிகிறதா என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

வரைமுறை இல்லாமல் உடல் பெருத்துவிட்ட மீனாட்சி, தமிழில் மிகப் பெரிய இடைவெளி விட்டுவிட்டார். இப்போது அதை சரிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர், முன்னணி இயக்குநர்களிடம் மனம் திறந்து வாய்ப்பு கேட்கிறார். இளம் ஹீரோக்களிடமும் பேசுகிறார். அதற்கான பலன் கிடைத்துள்ளது. கே.பாக்யராஜ் ஸ்கிரிப்ட் எழுதி, சுவேதா மேனன் ஜோடியாக நடிக்கும் ‘துணை முதல்வர்’ படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்கும் மீனாட்சி, அடுத்து நந்தா ஜோடியாக ‘வில்லங்கம்’ படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். கிடைத்த இடைவெளியில் அவர் செய்த நல்ல காரியம் என்ன தெரியுமா? கொல்கத்தாவில் எம்.பி.ஏ படித்து முடித்திருக்கிறார். இப்போது வசிப்பது மும்பையில்.

நகரத்து வாடையையே நுகராமல், காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் காட்டுவாசிகளின் வாழ்வியல் பிரச்னைகளை இதுவரை எந்தப் படமும் முழுமையாக சொன்னதில்லை. அந்த குறையைப் போக்க (வெங்)‘காயம்’ இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கி இருக்கும் படம், ‘நெடும்பாறைக்காடு’. கிருஷ்ணன், ஜானகி ஹீரோ, ஹீரோயின். முக்கிய வேடங்களில் எஸ்.எம்.மாணிக்கம், சங்ககிரி ராஜ்குமார் நடித்துள்ளனர். மற்ற அனைவரும் புதுமுகங்கள். தலக்கோணம், ஒகேனக்கல், கேரளா பகுதிகளில் அடர்ந்த காடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. காட்டிலிருந்து நகரத்துக்கு வரும் ஒரு காட்டுவாசி, தலையாய பிரச்னையில் சிக்குகிறார். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர், மீண்டும் காட்டுக்கே திரும்புகிறார். அவருக்கு என்ன பிரச்னை? யாரால் ஏற்படுகிறது என்பது கதை.

விதார்த் ஜோடியாக ‘முதல் இடம்’ படத்தில் நடித்தவர், மலையாள வரவு கவிதா நாயர். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், சென்னையை விட்டு கேரளாவுக்கு சென்றார். ஏற்கனவே மலையாளப் படங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்துள்ள அவர், இம்முறை சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி சில படங்களில் நடித்து வருகிறார். இங்கு குடும்பப்பாங்காக தோற்றமளித்த அவர், கேரளாவில் கவர்ச்சி காட்டி புது போட்டோசெஷன் நடத்தியுள்ளார். மலையாளத்து இணையதளங்களில் அவரது கிளுகிளு படங்கள் அணிவகுத்துள்ளன. ‘கவிதா நாயர்’ என்ற பெயரை ‘மோகனா’ என்று மாற்றியுள்ள அவர், மீண்டும் தமிழில் நல்ல கதைகளையும், கேரக்டர்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

கீர்த்தி சாவ்லா யாரையோ காதலிக்கிறார், அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று யாரோ கொளுத்திப்போட, விஷயத்தைக் கேள்விப்பட்ட அம்மணி அலறிவிட்டார். ‘அய்யோ அண்ணா. ‘திருமதி தமிழ்’ படத்தை ரொம்பவும் எதிர்பார்த்தேன். சரியா போகல. அதுக்கு பிறகு தமிழ்ல நல்ல படம் எதுவும் கிடைக்கல. அதனால, சினிமா பங்ஷன் எதுக்கும் நான் வர்றதில்ல. வடபழநியில் ஒரு வாடகை வீட்ல தங்கியிருக்கேன். ஒரேயடியா மும்பைக்கு ஓடிப்போயிடல. யாரையும் நான் காதலிக்கவும் இல்ல, சீக்ரெட்டா மேரேஜ் பண்ணிக்கவும் இல்ல. இப்ப ஒரு தெலுங்கு படத்துல நடிக்கிறேன். நல்ல வாய்ப்பு கிடைச்சா, தமிழ்லயும் நடிப்பேன்’ என்ற அவர், தெலுங்கில் ‘ஆதி’ என்ற படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேவராஜ்