சினிமாவில் வாங்க



சினிமா இரும்புக் கோட்டையாக இருந்தது ஒரு காலம். பாரதிராஜாவை கூட கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது ஏவிஎம் நிறுவன வாயில். திறமை  இருந்தால் மட்டும் போதாது. மிகப்பெரிய பின்புலம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல ஆண்டுகாலம் வறுமை, அவமானங்களை தாண்டி தாக்குபிடிக்க  வேண்டும். அப்படி தாக்குபிடிப்பவர்களில் ஆயிரம் பேருக்கு இரண்டு பேர் சினிமாவில் ஜெயிக்க முடிந்தாலே பெரிய விஷயம்,


ஒரு எம்ஜிஆர் - சிவாஜி யின் வெற்றிக்குப் பின்னால் தோற்றுப்போன ஆயிரம் எம்ஜிஆர்.களும், சிவாஜிகளும் இருக்கிறார்கள். ஒரு பாரதிராஜா,  கே.பாலசந்தரின் வெற்றி கோபுரத்தின் கீழ் ஆயிரம் பாலசந்தர், பாரதிராஜாக்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இளையராஜா, ரகுமானுக்கு பின்னால் ஆயிரம்  கலைஞர்கள் இசைக் கருவிகளோடு முடங்கிப்போயிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகள் வரை இதுதான் நிதர்சனமான உண்மை,

ஆனால், இப்போது இந்த நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. திறவா பெருங் கதவுகள் திறந்து விட்டன. இரும்புக் கோட்டையின் முரட்டு சுவர்கள்  இடிக்கப்பட்டுவிட்டன. இரண்டு பேர் மட்டுமே விளையாடும் டென்னிஸ் கிரவுண்டாக இருந்த சினிமா இப்போது ஆயிரம் பேர் பங்கேற்கும் மராத்தான்  சாலைகளாக மாறிவிட்டன. இதற்கு காரணம் அசுர வளர்ச்சி கண்டுள்ள நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம்.

இனி யாரும் மஞ்சள் பையோடு திருட்டு ரயிலேறி சென்னைக்கு வரவேண்டியதில்லை. வந்து பிளாட்பாரத்தில் படுத்துறங்கி, கார்பரேஷன் குழாய்  தண்ணிகுடித்து வாழ வேண்டியதில்லை. ஒரு சினிமா அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்து அங்கு டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும்  ‘நானாவித’ வேலைகள் செய்து உதவி இயக்குநராகி அப்புறம் இயக்குநராக வேண்டியதில்லை. சிறு சிறு வேடங்களில் நடித்து அப்புறம் நடிகனாக  வேண்டியதில்லை.

நடிகர் நடிகைகள் இப்படித்தான் அழகாக இருக்க வேண்டும், நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற சினிமா தர்மத்தை கால்நூற்றாண்டுக்கு முன்பே  பாரதிராஜா காலில் போட்டு மிதித்து விட்டார். வாகை.சந்திரசேகர் முதல் தனுஷ் வரை வந்த நடிகர்கள் சினிமா ஹீரோக்களுக்கான இலக்கணங்ளை உடைத்து  எறிந்து விட்டார்கள். சரிதா, அர்ச்சனா போன்ற நடிகைகளும் ஹீரோயின் லட்சணங்களுக்கான விதிமுறைகளை தகர்ந்தெறிந்து விட்டார்கள்.

இவை எல்லாமே சேர்ந்து இப்போது சினிமாவை பொது விளையாட்டு களமாக்கி விட்டிருக்கிறது. இனி சினிமாவில் சேர திறமை ஒன்று மட்டுமே போதும்.  சிபாரிசின் மூலமாகவோ, வாரிசின் மூலமாவோ, பணத்தின் மூலமாகவோ, செல்வாக்கின் மூலமாகமோ ஒருவன் சினிமாவுக்கு இனி வந்தால் அவன் திறமைக்  குறைவானவன் என்றே பொருள்.

நல்ல திறமை இருந்தால், சினிமா மீது உண்¬மான காதல் இருந்தால், சினிமாவை கலையாக நேசித்தால், 30 நிமிட சினிமா ஒன்றை உருவாக்க அதிகபட்சம்  50 ஆயிரம் ரூபாய் போதும். 5 பேர் இணையுங்கள், ஆளுக்கு பத்தாயிரம் போடுங்கள். ஒருவர் இயக்க, ஒருவர் ஒளிப்பதிவு செய்ய, ஒருவர் நடிக்க, ஒருவர்  இசை அமைக்க அந்த 30 நிமிடத்திற்குள் உங்கள் திறமையின் செறிவுகளை அடக்குங்கள். ஒரு நிறைவான சினிமா தயாராகி உங்களுக்கான முகவரியாக அது  மாறும். யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ‘இதோ என் சினிமா. இதை பெரும் சினிமாவாக்க விரும்புகிறவர்கள் வாருங்கள்’ என்று  உரக்கச் சொல்லி அழைக்காலம்.

நண்பர்களே சமீபத்தில் வெற்றி பெற்ற ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ போன்றவை இந்த முக  வரியோடு வந்தவைகளே.
இளைஞர்களே உங்களை வரவேற்க சினிமா ரெடி. தகுதியோடு நுழைய நீங்கள் ரெடியென்றால் 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு விசிட்டிங் கார்டை தயார்  செய்யுங்கள். யார் கையிலும் மோதிரகுட்டு படாமல் உங்கள் கைகளில் நீங்களே வெற்றி மோதிரங்களை மாட்டிக் கொள்ளலாம்.

- மீரான்