ஐஸ்வர்யா தனுஷ்



ரஜினி, லதா தம்பதியரின் மூத்த மகள். ஜனவரி 1ல் பிறந்தார். 31 வயதாகிறது. கிளாசிக்கல் டான்சர். நடனத்துக்காக தமிழக அரசிடம் ‘கலைமாமணி’ பட்டம் பெற்றார். தனுஷை காதலித்து மணந்தார். யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இமான் இசையில் ‘விசில்’ படத்துக்காக ‘நட்பே நட்பே...’ என்ற பாடலை சிம்புவுடன் இணைந்து பாடினார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்காக ‘உன் மேல ஆசைதான்...’ என்ற பாடலை தனுஷ், ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியுள்ளார்.

படம் இயக்குவதற்கான பயிற்சி பெற, செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநரானார். இப்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘வை ராஜா வை’ படத்தை இயக்குகிறார். இவரது தங்கை சவுந்தர்யா அஸ்வின், ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்’ மூலம் இயக்குநராகிறார்.

பிற்காலத்தில் ரஜினியை வைத்து ஆக்ஷன் படம் இயக்க ஆசைப்படுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடித்துக் காண்பிப்பார். அறிமுகமானவர்களிடம் கலகலப்பாகவும், புதியவர்களிடம் ஓரிரு வார்த்தையும் பேசுவார். ‘நடிக்க’ விருப்பம் இல்லாதவராக இருக்கிறார்.

- தேவராஜ்