குகைக்குள் குமரன்



வள்ளியூர்

சூரன் வதம் முடிந்த பின்னர், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட முருகன், அவளுடன் தென்திசைப் பயணம் வந்தார். அகத்தியரால் உண்டாக்கப்பட்ட குகைக்குள் புகுந்திருந்த தாரகனை அழித்தார். அந்த மலைக் குகையில் தெய்வானையைத் தங்க வைத்துவிட்டு மீண்டும் முருகன் கயிலைக்குச் சென்றார். அங்கே, நாரதர் வள்ளியின் அழகினை, பெருமைகளையும் சொல்லி, அவள் குறமகளானாலும், அவனுக்காகவே காத்திருப்பவள் என்றும் கூறி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முருகப் பெருமானும் தகுந்த காலம் வந்ததையறிந்து வள்ளியைத் தேடி வந்தார். தினைப்புனைக் காவலில் இருந்த வள்ளிமுன் வேடனாய், வேங்கை மரமாய், விருத்தனாய்த் தோன்றி அவளுடைய உள்ளத்தில் ஆவலைத் தூண்டியவனாய் இறுதியில் அண்ணன் கணபதியின் துணையுடன் அவளை அரவணைத்துக் கொண்டார்.

பின் உண்மையறியவே, வள்ளியின் தந்தையும் வேடுவர் குல அரசனுமான நம்பிராஜனின் போர்ப்படை முருகப் பெருமானையும், வள்ளியையும் துரத்திச் சென்றனர். இறுதியில் நடந்த போரில் வெற்றி வேல்முருகனுக்கே. பிறகு, உண்மையுணர்ந்த நம்பிராஜன், திருக்குறுங்குடி பக்கமாக உள்ள வள்ளியூரில், தன் மகள் வள்ளிக்கும், முருகனுக்கும் தானே முன்னின்று திருமணம் நடத்தி வைத்தான் என்கிறது புராணம்.

வள்ளியை திருமணம் முடித்துக் கொண்டு தெய்வானையை விட்டுச் சென்ற குகை தேடி வந்தார் முருகன்.  தெய்வானையோ தனக்குப் போட்டியாக இன்னொருத்தியுடன் முருகன் வருவதைப் பார்த்து மனம் வெறுத்து, தன்னை கோர ரூபமுடையவளாக மாற்றிக்கொண்டு குகையை விட்டு வெளியேறினாள். அந்த தெய்வானையே இப்போது வள்ளியூரில் சரவணப் பொய்கையில் மேலக்கரையில் ‘தாடகத்தி அம்மன்’ என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். பின் அவளுடைய ஊடலை நீக்கித் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் முருகப் பெருமான்.

குகையில் குமரப் பெருமான் சுந்தரவல்லி, ஆனந்தவல்லியுடன் அருளாட்சி செய்கிறார். வள்ளித் திருமணக் காட்சி, கந்த சஷ்டிப் பெருவிழா முடிந்தபின், சூரசம்ஹார வதம் முடிந்த ஆறாவது அல்லது ஏழாம் நாளில் நடைபெற்று வருகிறது. மதுரை உக்கிரம பாண்டியராஜா, மானூரை ஆளுகையில் சங்கர நயினார் கோயில் திருப்பணியை மேற்கொண்டார்.

இவனுடைய மகன் அள்ளியுண்ட ராஜா, திருக்குறுங்குடி நம்பிராயரைத் தொழுவதற்கு வந்தபோது வேட்டைக்காக மலைப் பகுதிகளுக்கு வந்தார். வள்ளியூர் மலைக் குகையில் முருகப் பெருமான் குகைநாதனாகக் காட்சியளிப்பதைக் கண்டார். பின் குகையைச் சார்ந்து முன் மண்டபம் அமைத்து வள்ளியூரையும், முருகப் பெருமான் கோயிலையும் எல்லோரும் அறியும்படி செய்தார்.

வேட்டைக்கு வந்த ராஜாவிடம் இடைச் சிறுவன் ஒருவன் குகைக் கோயிலையும், முருகப் பெருமானையும் காட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. அச்சிறுவனுடைய சிற்பம், அதே மேய்க்கும் நிலையில் முருகப் பெருமான் சந்நதிக்குத் தென்புறம் உள்ள மலை தாங்கி சாஸ்தாவின் தென்புற மலைக் குகைப் பாறைச் சுவரில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். திருவிளக்கேந்திய நிலையில் உற்சவ விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும் சப்பரத்தின் முன் நிற்கும் திருவுருவச் சிலை முதன் முதலில் இந்த குகைக் கோயிலுக்கு முன் மண்டபம் கட்டிய கள்ளியுண்ட ராஜாவினதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கந்த சஷ்டிப் பெருவிழாவில் வீரபாகு மூர்த்திக்கு முதன்மையும், முக்கியத்துவமும் அளிப்பது வள்ளியூரில் மட்டுமே. முதலில் வீரபாகு சூரனுடனும், தாரகனுடனும் போரிட்டுத் தன் இயலாமையைக் கூறும் நிகழ்ச்சியும் இவ்விழாவில் நடத்திக் காட்டப்படுகிறது. பிறகு குமரன் தாரகனை வதம் செய்யும் நிகழ்ச்சி தொடருகிறது. எல்லா முருகப் பெருமான் தலங்களிலும் கந்த சஷ்டிப் பெருவிழா நிகழ்ச்சி ஆறு நாட்கள் நடைபெற்று ஆறாம் நாள் மாலையில் சூரசம்ஹாரக் காட்சி நடைபெறுகிறது. ஆனால், வள்ளியூர் திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடுநிசிக்குப்பின் நிகழ்த்தப்படுகிறது.

சஷ்டி விழாவில் சூரசம்ஹார வடிவம் அமைக்கப் பெற்று, வதம் முடிந்தபின் அது முழுவதும் எரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி மாயை சுட்டெரிக்கப்பட்டால் உண்மை ஞானம் பெற வழியுண்டு என்பதைத் தெளிவாக்குகிறது. குகைக் கோயில் என்பதனால் குன்றுக்கு மேலாக கர்ப்பக் கிரக விமானம் அமைக்கப் பட்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. கோயிலுக்கு முன்னே உள்ள சரவணப் பொய்கை நீர் நிறைந்து, கோயிலுக்கு மட்டுமின்றி ஊருக்கும் பல வகைகளில் பயன்படுகிறது. கிரி பிரதட்சணமாகவும் கோயிலை வலம் வரலாம்.

கிழக்கு, வடக்கு இரு திசைகளிலிருந்தும் கோயிலுக்குள் செல்ல கோபுர வாசல்கள் உள்ளன. முன் மண்டபத்தில் இடது பக்கம் பிள்ளையார் தனித்து வீற்றிருந்து, வரும் பக்தர்களை வரவேற்று ஆசீர்வதிக்கிறார். அவரிடமிருந்து ஆசி பெற்று உள்ளே சென்றால், ஆனந்தவல்லி, சுந்தரவல்லி சமேத முருகனின் கர்ப்பக் கிரகத்தினுள் எண்ணெய் தீபங்கள் வழங்கும் தெய்வீக ஒளி நம் மனதை நிறைவிக்கிறது. சூரனை வதைத்த ஷண்முகன் நம் மனசில் உள்ள அரக்க குணங்களையும் வதைத்து நம்மை நல்வழி நடத்தும் அருளை பரிபூரணமாக உணரமுடிகிறது.

மூலவருக்கு வலப்புறம், வள்ளிக்குத் தனிச் சந்நதி. சுமார் மூன்றடி உயரத்தில், கருணைப் பார்வையுடன் அருள்பாலிக்கிறாள் இந்த சுந்தரவல்லி. வெளி மண்டபத்தில் ஜெயந்தீஸ்வரர் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். பக்கத்தில் சௌந்தரநாயகி அம்மன். இவர்கள் இருவரும் தம் மகன் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அருளாட்சி செய்யும் பாங்கினைப் பார்க்க வந்ததாகவும், பிறகு முருகன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க இங்கேயே தனி சந்நதி கொண்டுவிட்டதாகவும் புராணம் சொல்கிறது. நடராஜர்-சிவகாமி அம்மை, ஆறுமுகன்-வள்ளி- தெய்வானை, தட்சிணாமூர்த்தி என்றும் தனித்தனியாக இறையருள் நம்மைக் குளிர்விக்கிறது.

இக்கோயிலில் சந்தனக் காப்பு வழிபாடு மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. உச்சிகால பூஜையின்போது ஸ்தபன கும்பம், கலசம் வைத்து சந்தனக் காப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மறுநாள் காலை விஸ்வரூப தரிசனக் காட்சிவரை சந்தன அலங்காரம் அப்படியே இருக்கும். மறுநாள், முருகன் திருமேனியிலிருந்து  எடுக்கப்படும் சந்தனம், பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அது நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது என்பது அனுபவித்தோர் கூறும் உண்மை. தம் பிரார்த்தனைகள் நிறைவேறிய நன்றி காணிக்கையாக, பவுர்ணமி நாட்களில், இங்கே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் அற்புதக் காட்சி நெகிழ வைக்கும். இக்கோயில் திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையில் உள்ளது.

- பி.எஸ்