கரும்பு தின்னக் கூலி!



‘‘நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பது ‘வாழும் கலை’ வழியாக மேலும் உறுதியானது. ‘‘சைவக்காளி” தகவல் மிகவும் அருமை. படமோ மிகவும் அழகு. பக்தித் தமிழில் கணபதியின் தோற்றம் மனதை கொள்ளை கொண்டது. ‘‘வளம் தரும் வாஸ்து” வாழ்க்கை வளமாக நல்வழி காட்டுகிறது. ‘‘பழநி மகிமை” பஞ்சாமிர்தமாய்ப் பொழிகிறது.
கே.ரேவதி, சென்னை.

‘‘மக்கட்பேறே மகத்தான பேறு” - மக்கட்பேறின் சிறப்புகளை மிக அழகாகக் கூறியது கட்டுரை. ‘‘அபிராமி அம்மை பதிகம்” வாசித்து மன வலிகள் நீங்கி, உடல் பலம் பெற்று வாழ்க்கை சிறக்க தந்தமைக்கு மிக்க நன்றி!
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி மாவட்டம்.

ஞாபக சக்தியை அதிகரிக்க, திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா கூறிய ஸ்லோகம் மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
ராஜிராதா, பெங்களூரு.

வழிபாடுகள் வித்தியாசமாகவும், வினோதமாக இருந்தாலும் படிக்கும்போது ஒவ்வொரு திருத்தலத்திலும் ஏதோ ஒரு மகத்துவமும், அருளும் இருப்பதை எங்களால் உணர முடிந்தது.
பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

ஆதிசங்கரர் அருளிய நான்கு அறிவுரைகளை 2015ன் புத்தாண்டு சபதமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும், வளமும் பெருகும்.ஆலயங்கள் தோறும் கொண்டாடப்படும் வித்தியாசமான வழிபாடுகளை வாசித்து மெய்சிலிர்த்தது. வெறும் அழகை மட்டுமே கருதி, வால் பேப்பர்களையும், ஓவியங்களையும் சுவரில் அலங்கரிக்கிறோம். வாஸ்துப்படி என்ன படம் வைக்கலாம் என்ற ஆலோசனை, பொங்கலுக்கு சுத்தம் செய்த வீட்டை மறு அலங்காரம் செய்ய உதவியாக இருந்தது.

பித்ரு தோஷம் தீர, தை அமாவாசை கோயில்களை பட்டியலிட்டது, பயனுள்ளது.அறிந்திராத ரதஸப்தமி விரதத்தை சென்னை கோயில்களின் ரதஸப்தமி பெருமாள் தரிசனப் படங்களோடு விளக்கியது, விரதமிருக்க வேண்டுமென்ற உணர்வையூட்டியது.
மல்லிகா அன்பழகன், சென்னை-78.

ஒவ்வொரு ஆலயத்திலும் நடைபெறும் வித்தியாசமான வழிபாடுகள், நிகழ்வுகளில் எங்களை கலந்து கொண்டு தரிசிக்க வைத்த புண்ணியம் உங்களுக்கே சேரும். அனைத்துமே வெகு ஆனந்தம். விபூதி, சந்தனம், குங்குமத்தின் மகிமைகளையும், மனிதருக்கு அதனால் ஏற்படும் நற்பலன்களையும் கடைசி பக்கம் கசித்தமாய் வழங்கியது.
சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் அருமை. ஆதிசங்கரர் வழி நடப்போம், சதுர்பத்ரம் போற்றுவோம். மனிதன் வாழ நல்ல கருத்துகளை எளிய முறையில் எடுத்துக் கூறியமைக்கு நன்றி.
ஏ.டி.சுந்தரம், ஈரோடு.

தை கிருத்திகை பக்தி ஸ்பெஷல் இதழே பெரும் பொக்கிஷம். தலையங்கத்தில் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்களாக சதுர்பத்ரம் பற்றி படித்து சிந்தனையில் ஆழ்ந்தேன். வித்தியாச வழிபாட்டை தெள்ளத் தெளிவாக்கிய விதத்தை பாராட்டித்தானாக வேண்டும்.
எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

‘பகைவனுக்கருள்வாய் நெஞ்சே’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் பகைவனையும் பக்தனாக பாவித்த புகழ்ச்சோழர் என்ற மன்னரின் புகழ் பாடிய (அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்) கட்டுரை சிந்திக்க வைத்து விட்டது!
த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘‘கரும்பு தின்ன கூலியா?” என்று சொல்லச் செய்யும் வகையில் பக்தி மணம் வீசும் ஆன்மிகம் பலன் இதழில் வாசகர்களுக்கு ‘‘நவகிரக தல சுற்றுலா” (நூறு பேருக்கு) ஏற்பாடு செய்ய இருப்பது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது!
அ.கிருஷ்ணகுமார், பு.புளியம்பட்டி.