என்ன சொல்லுது எதிர்காலம்?



இல்லற வாழ்வில் மகிழ்ச்சி தங்கும்

?என் மூத்த மகன் தற்போது ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். அரசாங்க வேலைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகன் பி.இ. ஏரோனாட்டிக்ஸ் படித்து தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் மகனுக்கு எப்பொழுது அரசாங்க வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் செய்யலாம்? வீடு எப்போது கட்டுவோம்? அண்ணன், தம்பி இருவரும் எதிர்காலத்தில், கடைசி வரை ஒற்று மையாக இருப்பார்களா என்பதையும் கூறுங்கள். - திருமதி.கலா, திருச்சி.

உங்களின் மூத்த மகனுடைய வருங்காலம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவருடைய ஜாதகம் நன்றாக இருக்கிறது. மகன் ஜாதகத்தை ஜாதகாபரணம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மிதுன லக்னம், கன்னி ராசியில் அவர் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் தனித்து 8வது வீட்டில் நின்று கொண்டிருப்பதால் போராடக் கூடிய, கடினமாக உழைக்கக்கூடிய மனம் இவருக்கு உண்டு.

ஆனால், 7ம் இடத்தில் செவ்வாயும், சனியும் அமர்ந்து லக்னத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் அவ்வப்போது சோம்பல் மற்றும் மன இறுக்கத்திற்கு ஆளாவார். இவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் ராகு சேர்ந்து கும்பத்தில் அமர்ந்திருப்பதால் விடாமுயற்சி இருந்து கொண்டேயிருக்கும்.

குருவும், சுக்கிரனும் மேஷத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல எதிர்காலம் உண்டு. கோச்சார கிரகங்களின்படி இவருக்கு ஏழரைச் சனி முடிவடைந்துவிட்டது. இனி இவர் சுறுசுறுப்பாவார். எல்லா வகையிலும் வெற்றியும் பெறுவார். தசா, புக்திகளின்படி இவருக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் மகாதசைகளெல்லாம் முடிவடைந்து தற்போது ராகு மகாதசை நடைபெற்று வருகிறது. ராகு கும்பத்தில் ஸ்திர வீட்டில் அமர்ந்திருப்பதால் அடுத்தடுத்த யோக பலன்களை எதிர்பார்க்கலாம். சூரியனுடன், ராகு நிற்பதால்தான் எடுத்த எடுப்பிலேயே நேரடியாக அரசாங்க வேலைக்கு இவரால் செல்ல முடியவில்லை. ராகு தடைபடுத்தி நன்மையை தரக்கூடிய கிரகம்.

ஆனால், இனிமேல் இந்தத் தடையை ராகுவால் ஏற்படுத்த முடியாது. இவருக்கு அரசு உத்யோகம் உண்டு. தசா புக்திகள், அந்தரங்கங்களின்படி இவர் மத்திய அரசுக்குரிய பணிக்கு முயற்சிப்பது நல்லது. மாநில அரசு பணிக்கும் முயற்சிக்கலாம். ஆனால், கடுமையாக உழைக்க வேண்டியது வரும். மத்திய அரசு பணி இவருக்கு எளிதாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 10ம் வீட்டிற்குரிய கிரகமான குரு, மேஷத்தில் செவ்வாய் வீட்டில் அமர்ந்திருப்பதால் காவல் துறை, ரெவின்யூ துறை, ராணுவத் துறை உள்ளிட்ட துறைகளிலும் வேலைக்கு முயற்சிக்கலாம்.

கட்டிடகாரகன் சுக்கிரனும், கட்டிட ஸ்தானாதிபதியும் ஜாதகத்தில் வலுவாக இருப்பதால் வருங்காலத்தில் பார்ப்பவர் கண்ணை பறிக்குமளவிற்கு பெரிய வீடு கட்டி அதில் வாழக் கூடிய அமைப்பும் அவர் ஜாதகத்தில் இருக்கிறது. மகன் ஜாதகத்தில் சகோதரனுக்குரிய கிரகம் சாதகமாகத்தான் இருக்கிறது. சகோதரக்காரகன் குரு வீட்டில் அமர்ந்திருப்பதாலும் இளைய சகோதர ஸ்தானாதிபதி ஸ்திர வீட்டில் அமர்ந்திருப்பதாலும் இரண்டு பிள்ளைகளுமே சுகமாக இருப்பார்கள்.

அவருக்கு 2016 செப்டம்பர் முதல் 2017 செப்டம்பருக்குள் நல்ல விதத்தில் திருமணம் முடியும். வங்கிக் கடன் பெற்று வீடு கட்டக் கூடிய அமைப்பும் நன்றாக இருக்கிறது. 2015 பிற்பகுதி அல்லது 2016 முற்பகுதியில் வீடு கட்ட வாய்ப்பிருக்கிறது. ஆனால், கொஞ்சம் பொறுத்தால் பெரிய வீடாகக் கட்டலாம். எனவே வீடு கட்டும் வேலையை இப்போது அவசரப்பட்டு தொடங்க வேண்டாம். அண்ணன், தம்பி இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். மேலும் நற்பலன்கள் கிடைப்பதற்கு திருநள்ளாறு சென்று சனீஸ்வர
பகவானை வணங்கிவிட்டு திருக்கடையூர் சென்று அபிராமியம்மனை வணங்கி வாருங்கள்.

? என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா?
அரசு தேர்வெழுதி மூன்று வருடங்களா
கின்றன. இந்த வேலைக்காக பணம் கொடுத்துள்ளோம். பணம் திரும்பக் கிடைக்குமா?
- எல்.சரவண பெருமாள், செய்யாறு.

மகனின் ஜாதகத்தை ஜோதிட சிகாமணி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மிதுன லக்னம், கடக ராசியில் இவர் பிறந்திருக்கிறார். லக்னத்திலேயே ராகு அமர்ந்திருப்பதுடன், லக்னாதிபதி புதனும் கேதுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்திருப்பதால்தான் அரசு வேலை கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அவருக்கு தற்போது சுக்கிர மகாதசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது 14.1.2016 வரை இருக்கும்.

சுக்கிரன் இந்த ஜாதகத்தில் 8ல் மறைந்து கிடப்பதுடன், புவியீர்ப்பு விசை அதிகமுள்ள கிரகமான சந்திரனுக்கு 7ல் சுக்கிரன் நிற்பதால்தான் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இந்த வேலையின் பொருட்டு பணம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், 4ல் செவ்வாயும், சனியும் சேர்ந்து நிற்கிறார்கள். இப்படிச் சேர்ந்தாலே பணம் கொடுத்து ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இனிமேல் நீங்கள் இவரின் வேலைக்கென்று முயற்சிக்கும்போது யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.

15.1.2016 முதல் சூரிய மகாதசை இவருக்கு தொடங்குகிறது. அந்த சூரியன் 6ல் நிற்பதாலும், சூரியன் அரசுத் தொடர்பான கிரகமாக இருப்பதாலும் அதுமுதல் இவருக்கு அரசு வேலை கிடைக்கலாம். முயற்சித்தால் 24.3.2015க்கு பிறகு நீங்கள் கொடுத்த பணமும் கிடைத்துவிடும். அடுத்ததாக சூரிய மகாதசை வரவிருப்பதால் இவர் படித்து, போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேரக்கூடிய அமைப்பு இருக்கிறது.

ஆனால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவிழந்து காணப்படுவதால் சில கர்ம வினைகள் இந்த ஜாதகத்தை அலைக்கழிக்கிறது. அந்த கர்மவினைகள் நீங்குவதற்கு கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அய்யாவாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை பௌர்ணமி திதியன்று சென்று வழிபட்டு வருவது நல்லது. அதன்மூலமாக கர்மவினைகள் நீங்கும். அரசு வேலையும் கிடைக்கும்.

? என் மகள் பெங்களூருவில் வாடகை வீடொன்றில் 31.5.2008 அன்று குடித்தனம் சென்றாள். 15 நாட்களுக்குப் பிறகு அவள் செய்வினை, மனநிலையால் பாதிக்கப்பட்டாள். தற்போது அவள் தனக்குத்தாளே பேசுகிறாள். சிரிக்கிறாள். திடீரென்று கோபம் கொள்கிறாள். எதைச் சொன்னாலும் கேட்பதில்லை. இரண்டு கால்களிலும் அலர்ஜியால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் என்ன பேசினாலும் திரும்பச் சொல்கிறாள். நான் எத்தனையோ பூஜை, பரிகாரம் செய்தும் எந்தப் பலனும் இல்லை. அவளை குணப்படுத்த வழி கூறுங்கள்.
- ஈ.சேதுபாய், பெங்களூர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை ஜாதக சந்திரிகை எனும் நு£லையும் அஷ்டவர்க்க பரல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். சிம்ம லக்னம், கடக ராசியில் பிறந்திருக்கிறாள். 15.7.2007 முதல் 15.7.2013 வரை உங்கள் மகளுக்கு சூரிய திசை நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் சனியின் கோச்சார சஞ்சாரங்களும் சரியில்லாமல் போனதால், அவள் உடல்நிலை பாதித்துள்ளது. மனோகாரகனான சந்திரனுடன் ராகு சேர்ந்திருப்பதாலும் அந்தச் சேர்க்கையை சனி பார்வையிடுவதாலும் புத்தி ஸ்தானத்துக்குரிய குரு நீசமாகி 6ல் மறைந்த  தாலும்தான் மகளுக்கு மனநிலை பெரிதாக பாதிக்கப்பட்டது. செய்வினைக் கோளாறு எதுவும் இல்லை.

தற்சமயம் சந்திர மகாதிசையில் ராகு புக்தி தொடங்கி 18.5.2016 வரை நடைபெறும். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 23.7.2015 முதல் சிம்ம லக்னம் கடக ராசிக்கு முக்கிய கிரகமான செவ்வாய் வலுவடைவதால் அதுமுதல் உங்கள் மகளின் மனநிலை பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.நீங்கள் பெங்களூருவில் வசிப்பதால் மைசூர் அருகிலுள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மனையும் குகே சுப்பிரமணிய சுவாமியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

பௌர்ணமி, அமாவாசை திதிகளில் பசுவின் கோமியத்தை வேப்பிலையால் வீட்டை சுற்றி தெளிப்பது நல்லது. ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகாலமாக சுக ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனிபகவான் இப்போது 5ம் வீட்டிற்கு மாறியிருப்பதால் உங்கள் மகளின் கால்களில் அலர்ஜியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளெல்லாம் இனி குறையும். லக்னாதிபதி சூரியன் சேரநாட்டு கிரகமான புதனுடனும், செவ்வாயுடனும் சேர்ந்து இருப்பதால் ஆயுர்வேத வைத்தியத்தால் உங்கள் மகளின் நோய் குணமாகும்.

? நான் சொந்த வீட்டிற்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையிலும் தொழிலிலும் முன்னேற்றம் இல்லை. நான் செய்து வரும் வாழ்த்து மடல் தொழில் மேலோங்க, அடைய பரிகாரம் தெரிவிக்கவும்?
- கே.தேவராஜன், ஓசூர்.

உங்கள் ஜாதகத்தை ஹோரா ரத்தினம் எனும் நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மகர லக்னம் கடக ராசியில் பிறந்திருக்கும் நீங்கள், நேர் வழியில் சென்று சம்பாதிக்கவே எப்போதும் விரும்புவீர்கள். உங்களுக்கு குரு தசை, சனி தசை, கேது தசை எல்லாம் முடிந்து தற்சமயம் சுக்கிர மகா தசை நடைபெற்று வருகிறது. சுக்கிர தசையில் ராகு புக்தி 8.11.2015 வரை நடைபெறும். சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் ஐஸ்கிரீம், பீடா கடை, பூச்செண்டு விற்பனை அல்லது அழகு சாதனப் பொருட்கள் விற்பனை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

லக்னாதிபதி சனி கேதுவுடன் அமர்ந்து கிரகண தோஷம் அடைந்திருப்பதால்தான் தொழிலில் முன்னேற்றமில்லாமலும், அதிகம் சம்பாதிக்கமுடியாமலும் போதிய வளர்ச்சியில்லாமலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கிரகணதோஷம் நீங்கவும், வியாபாரம் மேம்படவும் அருகிலிருக்கும் பெருமாள் சந்நதியில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை சனிக்கிழமை தோறும் வணங்குங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும்.  

? என் கணவர் வனத்துறையிலிருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளாகின்றன. அவர்மீது பணியின் போது சுமத்தப்பட்ட வழக்கு 22
வருடங்களாக நடைபெற்று வருகிறது. வழக்கு முடிவுற்றால்தான் ஓய்வூதியம் கிடைக்கும். வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திருப்பித் தர இயலாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். மூத்த மகளுக்கு தற்போது திருமணம் செய்ய வாய்ப்புள்ளதா? என் கணவரின் ஊதியத்தில் பாதி வட்டிக்கே போய்விடுகிறது. நான் கட்டிய வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு புறமாக வாசல் அமைத்ததில் குறைபாடு ஏதேனும் உள்ளதா?  - ஆர்.சாந்தி, சேலம்.

உங்கள் கணவர் மற்றும் குடும்ப ஜாதகத்தை ஜாதக சாரதீபா எனும் பழமையான நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் கணவர் படும் அவஸ்தைகளுக்கு அவர் ஜாதகத்தில் சுக ஸ்தானத்தில் செவ்வாயும், ராகுவும் அமர்ந்திருப்பதுதான் காரணம். கன்யா லக்னத்திற்கு அதிபதியான புதன் நீசமாகி விரயாதிபதி சூரியனுடன் சேர்ந்து நிற்பதால்தான் அவர் இத்தனை வருடங்
களாக உழைத்த உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகி விட்டது.

கன்னியா லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான செவ்வாய் சுக ஸ்தானமான 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன் ராகுவும் 4ம் வீட்டில் நிற்பதால்தான் நிம்மதியில்லாமல் வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. உங்கள் கணவருக்கு சனி தசை, புதன் தசை, கேது தசை, சுக்கிர தசை, சூரிய தசை எல்லாம் முடிந்து தற்சமயம் சந்திர மகாதசை நடைபெற்று வருகிறது. 19.7.2019 வரை சந்திர மகாதசை நடைபெறும். தசாபுக்தி அந்தரம் மற்றும் கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது 6.4.2015 முதல் வழக்கில் ஓரளவு முன்னேற்றமும் 23.9.2015 முதல் வழக்கில் நல்ல முடிவும் வர வாய்ப்பிருக்கிறது. முழு ஓய்வூதியத் தொகையை நிச்சயம் பெறுவார்.

உங்கள் ஜாதகத்தையும் விரிவாக ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், 2019 வரை உங்களுக்கும் சந்திர மகாதசை நடைபெறப் போகிறது. இருவருக்கும் தசாசந்தி இருப்பதால் விழுப்புரம் அருகிலுள்ள திருவெண்ணெய்நல்லு£ரில் அருள்பாலிக்கும் சிவனை வருடத்திற்கு ஒருமுறை திங்கட் கிழமை அல்லது பிரதோஷ நாளில் சென்று வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.

உங்கள் மூத்த மகளின் ஜாதகம் நன்றாக உள்ளது. 27.2.2015 வரை புதன் தசையில் கேது புக்தி நடைபெறும். 28.2.2015 முதல் 27.2.2018 வரை சுக்கிர புக்தி நடைபெறும். சுக்கிரன் உங்கள் மகளுக்கு யோகாதிபதியாக இருப்பதால் இந்த காலக்கட்டத்தில் உங்கள் மகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெறும். சந்திரனுக்கு 7ல் சூரியனும், 8ல் கேதுவும் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் ஜாதகப் பொருத்தம் பார்த்து
மகளுக்கு திருமணம் முடிப்பது நல்லது.

? எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆனதிலிருந்து என்னை என் மாமியாருக்கு பிடிக்கவில்லை. திருமணம் முடிந்த 10வது நாளே என் கணவரின் குடும்ப கஷ்டங்களுக்காக என் நகை அனைத்தையும் கொடுத்தேன். என் கணவர் அடிக்கடி வெளியூர் செல்வதால் என் மாமியார் வீட்டில்தான் இருப்பேன். நல்ல மகளாக அவரிடம் நடந்து கொள்வேன். ஆனாலும், அவருக்கு என்னை பிடிக்கவில்லை.

இந்தநேரத்தில் என் கணவரின் தம்பிக்கு திருமணம் முடிந்தது. அன்றிலிருந்து என் மாமியார், என் கணவரின் தம்பி, அவரது மனைவி மூவரும் என்னை அசிங்கமாகவும், கேவலமாகவும் நடத்தினார்கள். என் கணவரிடம் சொன்னால் அதை நம்பமாட்டார். என்னை ஒரு அடிமை மாதிரி நடத்த ஆரம்பித்தார்கள். தினமும் அழுது, அழுது தற்கொலைக்கு துணிந்தேன். குழந்தைக்காக அதை கைவிட்டேன். நல்ல வேலையையும் விட்டேன்.

கடைசியில் என் கணவரை விட்டு பிரிந்து விடலாம் என்று நினைத்தேன். என் குலதெய்வத்தை வேண்டி விரதம் இருந்தேன். விரதம் முடிந்த அடுத்த நாளே என் கணவர் என்னை புரிந்து எனக்காக முதல்முறையாக தன் அம்மாவிடம் பேசினார். ஆனாலும் என் மாமியார், அவரது சின்ன மகன், மருமகள் மூவரும் என் மீது வீண்பழி சுமத்தியிருக்கிறார்கள். எங்கள் எதிர்காலம், மற்றும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? - ஒரு வாசகி.

உங்கள் ஜாதகத்தை ஜாதக தேஷ்மார்க்கம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். தனுசு லக்னம், சிம்ம ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். லக்னாதிபதி குரு நீசம் அடைந்து பலவீனமாக உள்ளார். ராசிநாதனான சூரியன் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்திருக்கிறார். அதனால்தான் நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மறைந்து நிற்பதால் மனக் கஷ்டங்களை அடிக்கடி நீங்கள் சந்திக்கிறீர்கள்.

மாங்கல்ய ஸ்தானாதிபதியான புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் கணவர் கடைசிவரை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். மாமியார் ஸ்தானத்துக்குரிய கிரகம் நவாம்சத்தில் பலவீனமாக இருப்பதாலும் தசாபுக்தி, அந்தரம் மற்றும் கோச்சார கிரகங்களும் வலுவிழந்து காணப்படுவதாலும்தான் மாமியாரின் தொந்தரவு உங்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்சமயம் சந்திர மகாதசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10.9.2016 முதல் உங்கள் ஜாதகம் வலுவடைவதால் அதுமுதல் மாமியார் தொந்தரவு குறையும். கணவரும் உங்களுடைய தியாக மனதை அதிகம் புரிந்து கொள்வார். எனவே கவலைப்படாதீர்கள். உங்கள் கணவர் ஜாதகப்படி 20.8.2015 முதல் நல்ல நேரம் தொடங்குகிறது. அதுமுதலே உங்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் மகன் ஜாதகம் நன்றாக இருக்கிறது.

அதன்படியும் உங்களுக்கு நிம்மதியும், நல்ல எதிர்காலமும் இருக்கிறது. அவனுக்கு படிப்பும், தீர்காயுசு யோகமும் உண்டு. உங்கள் ஜாதகத்தில் உத்யோக ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதால் உங்களுக்கு வேலை கிடைக்கும். 2016 பிற்பகுதியிலிருந்து நிம்மதியும், மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் துலங்கும். மேலும் நன்மை பெற பிள்ளையார்ப்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை சங்கட ஹர சதுர்த்தி நாளில் அறுகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள். மாமியாரின் மனம் மாறும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் தங்கும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்