பக்தி என்பது அந்தரங்கமானது!



திருமூலர் மந்திர ரகசியம்

உலக அளவில் எங்கு பார்த்தாலும்... ஊஹூம்! ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. அவலங்களும் அல்லல்களும் தான் பரவிக் கிடக்கின்றன. ஏன் இப்படி? அங்கங்கு ஆட்சியாளர்கள் இல்லையா? இருக்கிறார்கள்! பிறகு, இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்? திருமூலர் சொல்கிறார்:

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன் நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே
(திருமந்திரம் - 239)

கருத்து : அன்றாடம், அரசன் அவனுடைய நாட்டில், அற ஒழுக்கம் கெடாமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் தினந்தோறும், தன் நாட்டில் நீதிமுறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறியத் தவறினால், அவன் நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டழியும். அவனுடைய நாட்டில் அறியாமை எங்கும் பரவும். செல்வமும் செல்வாக்கும் தினந்தோறும் குன்றிப் போகும். அரசனும் அழிவான்.

இது ஒரு சாதாரணப் பாடல், அரசன் ஒருவன் தன் நாட்டை எப்படி ஆள வேண்டும் என்பதைச் சொல்லும் பாடல் இது என எண்ணக்கூடாது. இதில் அரசன் என்பதை, அந்தந்த நாட்டை ஆளும் முதல்வர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் எனப் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு முன்னால், அரசன் என்றே பார்த்து விட்டுப் பிறகு தற்காலத்திற்கு வரலாம்.

மன்னர்கள் பலரும் நாட்டை (நாடுகளை) ஆண்ட வரலாற்றைப் பல நூல்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. இமயமலை வரை போய் வென்று, அங்கே கொடி ஏற்றி; கடல் கடந்தும் போய் வெற்றிக் கொடியை விண்ணில் பறக்க விட்ட மன்னர்களைப் பற்றியெல்லாம் விரிவாக தெரிந்து கொள்கிறோம்.

அதெல்லாம் சரி! அப்படி ஓங்கி உயர்ந்து பெரும் புகழ் கொண்ட மன்னர்களோ அல்லது அந்த மன்னர்களின் பரம்பரையோ எப்படிப் பலவீனமாகிப் போனது? அற்புதமான நாடு, அலைகடல் தாண்டி வியாபாரம் செய்ய வந்த அயல் நாட்டுக்காரர்களிடம் அடிமையானது எப்படி?வேறொன்றுமில்லை, மக்களைக் கட்டி ஆள வேண்டிய அந்த மன்னர்கள், தங்கள் மனதைக் கட்டி ஆளவில்லை. பட்டத்து ராணியைத் தவிர, இரண்டு மூன்று பெண்களைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன. அந்தப் பிள்ளைகள் வளர்ந்தவுடன், அவர்களும் ராஜ்ஜியத்தில் உரிமை கொண்டாட அரசாட்சியில் பங்கு கேட்டுப் போராட்டத்திலும் மறைமுக வேலைகளிலும் ஈடுபட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு கும்பல் கூடியது.

அப்புறம் என்ன? வியாபாரம் செய்து வந்த அயல் நாட்டுக்காரர்கள் மத்தியஸ்தம் செய்வதை போல நுழைந்து, குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையைப் போல நாட்டையே கபளீகரம் செய்து விட்டார்கள்; அதாவது, நாட்டையே அடிமைப்படுத்தி விட்டார்கள்.இந்த விபரீதத்திற்குக் காரணம்? மக்களை கட்டி ஆள வேண்டிய மன்னர்கள், தங்கள் மனதை கட்டி ஆளாதது தான். இனி, இக்காலக் கதைக்கு வருவோம்.

உலகம் முழுவதும் இப்போது, அரசருக்குப் பதிலாக ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்று பலவிதமான பொறுப்புகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, தங்களைச் சார்ந்தவர்களை சமாளிப்பதிலும், எதிரணியாளர்களுக்குப் பதில் சொல்வதிலும் காலம் போய் விடுகிறது. இல்லாவிட்டால், யாராக இருந்தாலும் அவர்களால் ஆட்சி செலுத்த முடியாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது.

அப்படி இருக்கும் போது நம் நிலை?

சபரிமலை முதலான இடங்களுக்குப் போகும் போது இருட்டில் பாதை தெரிவதற்காக ஒரு டார்ச் லைட்டை நாமே கொண்டு போகிறோம் அல்லவா? அது போல, எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் வாக்கிற்கு இணங்க, நாமெல்லோரும் அற ஒழுக்கம் கெடாமல் நல்ல வழியில் நடக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போய் விடுவோம். நம் குடும்பத்தில் எங்கு பார்த்தாலும் அறியாமை பரவும். செல்வமும் செல்வாக்கும் நாள்தோறும் குன்றிப் போகும். அப்புறம் நம் கதை, அவ்வளவுதான்!

‘‘ஹூக்கும்! கடவுள் என்ன காவல் துறையிலா வேலை பார்க்கிறார்? யார் யார் ஒரு வழிப்பாதையில் (oneway™) போகிறார்கள்? யார் யார் தலைக்கவசம் அணியாமல் போகிறார்கள்? என்றெல்லாம் கவனிக்கும் காவலர் போலப் பார்த்துக் கொண்டிருக்கிறா என்ன?’’ என்று கேள்வி எழுந்தால்...?தெய்வத்தை விடுங்கள்! மற்றவர்களையும் விடுங்கள்!

நம்மைப் பற்றி, நமக்குத் தெரியும் அல்லவா? ‘தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி நாம் செய்யும் தவறுகள் கண்டிப்பாக நம் உள்ளத்தைச் சுடும் அதனால், திருமூலர் ஏதோ அரசர்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ பாடம் நடத்துவதாக எண்ண வேண்டாம்; நமக்குத் தான்.

அடுத்த பாடலைத் தொடருகிறார்:
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புலம்பும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர்
தொழச்செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே (திருமந்திரம் - 2068)

கருத்து : கடல் சூழ்ந்த இந்த உலகைப் படைத்த பரம்பொருளுக்கு அனைத்தும் தெரியும். பொய் பேசுவதையே இயல்பாகக் கொண்டுப் புலம்பித் திரிபவர்களை, அந்தப் பரம்பொருள் அறிவார். அவர்கள் பொய் பேசுவதை விட்டு, உண்மை பேசுவார்களாக மாறினால், அவர்களைத் தேவர்களும் வந்து வணங்கும்படியாகச் செய்வார். உண்மை பேசும் உத்தமர்களைத் தேவர்களும் தொழும்படியான நிலைக்கு, நீலகண்டப் பெருமானான சிவபெருமான் உயர்த்துவார்.

இந்தப் பாடலுக்கு விரிவுரை தேவையில்லை. இருந்தாலும் இப்பாடலில், ‘‘பொய்யை விட்டு உண்மையின் வழியில் நடப்பவர்களை, தெய்வம் உயர்வான இடத்தில் வைத்தருளும்’’ என்ற திருமூலர், பொய் பேசுபவர்களைத் தெய்வம் பள்ளத்தில் அழுத்தி விடும் எனக் கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.ஒரு வேளை, பொய் பேசுபவர்களுக்காக இப்
பாடலில் திருமூலர் வக்காலத்து வாங்குகிறாரோ? இல்லை. இல்லவே இல்லை!

இன்று என்னவோ, ‘பாஸிடிவ் தாட்ஸ்’, ‘நெகடிவ் தாட்ஸ்’ என்றெல்லாம் கூறுகிறார்களே! அதாவது, ‘எதையும் எதிர்மறையாகப் பார்க்காதே! நேர்மறையாகப் பார்! நினை!’ என்று சொல்கிறார்களல்லவா? இதை அன்றே சொன்னவர் திருமூலர். அதனால் தான், ‘‘பொய் சொன்னால் உன்னைத் தெய்வம் விடாது. அழித்து விடும்’’ என்று சொல்லாமல், ‘‘உண்மை பேசுபவர்களுக்குத் தெய்வம் உயர்வளிக்கும்’’ என, நேர்மறையாகவே கூறுகிறார்.

சத்தியத்திற்காகவே வாழ்ந்த அரிச்சந்திரன் நாடகத்தை காந்திஜி பார்த்தார். சத்தியத்திற்காகவே வாழத் துணிந்தார் என்று, இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே, இதை விடவா இப்பாடலுக்கு உதாரணம் வேண்டும்?

இதை அனுசரித்தே அடுத்த பாடலும் தொடர்கிறது.பொய் சொல்வதை விட்டு, உண்மை பேசுபவர்களை ஸ்வாமி உயர்த்தி வைப்பார் என்று சொன்னாலும், கேட்டாலும், நடைமுறைக்கு என்று வரும்போது ஒன்றும் சரிபட்டு வரமாட்டேன் என்கிறது. எதையாவது படாடோமாக ஆடம்பரமாகச் செய்தால் தான், பேரும் புகழும் கிடைக்கிறது. அதுவும் ஆன்மிகத்தில், கேட்கவே வேண்டாம்.

திருமூலரே சொல்கிறார்:பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற்று உண்டு விளைபுலம் பாழ் செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே
(திருமந்திரம் - 2069)

கருத்து : போலி வேடம் போட்டுக் கொண்டு, பக்தியை விற்று, அதாவது, கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு காலம் கழிக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு, அப்படி மதி மயங்கிக் கிடப்பவர்களுக்குத்தான் மறுபிறப்பு என்பது இருக்கும்.

ஆனால், பிறவித் துன்பத்திற்குக் காரணமான வினைகளைத் தோன்றாதபடி அழித்து, அவை உருவாகும் நிலமான மனதை அந்த நினைவுகளுக்கு இடம் தராதபடி, அதாவது, தீவினைகள் தோன்றாதபடி (மனதை) தரிசாகக் கிடக்கச் செய்து வாழும் பக்தர்களுக்கு, இறையருள் சிந்தனை கொண்ட ஞானிகளுக்கு என்றும் பிறவித்துன்பம் என்பதே இல்லை.

பக்தியைப் பகல் வேடமாக்கி, அதை விற்பனை செய்யும் இழிவை, இடித்துரைக்கிறார் திருமூலர். இன்றைய சூழ்நிலையில், அதிக முதலீடு இல்லாத அதே சமயம் அதிகமான லாபத்தைத் தரும் ஒரு தொழில், ஒரே தொழில் பக்தி தான்!

நம்பாவிட்டால், அன்றாடம் ஆலயங்களில் நடப்பதை நினைத்துப் பாருங்கள்!

தீபம் காட்ட, அர்ச்சனை செய்ய அனைத்திற்கும் மேலாகக் கடவுளைத் தரிசனம் செய்யக் காசுதான் தேவை. இல்லாவிட்டால், தூர தூர நின்று தரிசித்து விட்டுத் திரும்ப வேண்டியது தான். பேர், புகழ், பதவி, ஆடம்பரம் என இருந்தால்தான் ஆலயங்களில் அருகில் போய் ஆண்டவனையே தரிசிக்க முடிகிறது.

பக்தி இருக்கிறதோ இல்லையோ! அது இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டால்தான், மதிப்பு கிடைக்கிறது. முறைப்படிப் பார்த்தால், ‘‘எனக்கு இந்தப் பூஜை தெரியும், அந்தப் பூஜை தெரியும். உங்கள் வீட்டில் நான் இந்தப் பூஜை செய்கிறேன்’’ என்று சொல்லி, யார் வீட்டிற்கும் போய் விசேஷ பூஜைகள் செய்யக்கூடாது. ஆனால், தற்போதைய நிலைமை?

நம் வழிபாட்டு தெய்வம், மந்திர உபதேசம் ஆகியவற்றைத் தண்டோரோ போடக்கூடாது. நம் பக்தியைப் பற்றி அறிய வேண்டியது - தெய்வம். தெய்வம் நம் பக்தியை அறியும். அதற்கேற்ப அருள் செய்யும். அப்படி இருக்க, அதை ஏன் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்ய வேண்டும்?கர்ண பரம்பரைக் கதை ஒன்று.

ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசரும் அரசியும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அரசி, பக்தி மிகுந்தவர். அவ்வப்போது ஆலயங்களுக்குச் செல்வதும் துதிப்பாடல்கள் பாடுவதுமாக இருந்த அவளை அனைவரும் போற்றினார்கள். அதே சமயம், அரசர் கோயிலுக்குப் போனதில்லை. அது அரசிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ஒரு நாள், அரசரும் அரசியும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த நேரம், ஏதோ ஓசை கேட்டு அரசி விழித்தெழுந்தாள். பார்த்தால். அரசர் தூக்கத்திலேயே, தெய்வ நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்! அரசிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; உடனே அந்தப்புரத்தை விட்டு வெளியே வந்து, நாடெங்கிலும் ஆலயங்களில் சிறப்புப் பூஜைகள் செய்ய உத்தர விட்டாள். பக்தி பெருக்கெடுத்து ஓடியது.

அரசர் விழித்தெழுந்து, நடந்ததையெல்லாம் பார்த்தார். அரசியை அழைத்துக் காரணம் கேட்டார். அதற்கு அரசி, ‘‘மன்னா! நீங்கள் கோயிலுக்குப் போவதில்லை. அரண்மனை வழிபாட்டிலும் துதிப்பாடல் சொன்னதில்லை. பக்தியே இல்லாத அப்படிப்பட்ட உங்களுக்கு, பக்தி வர வேண்டும் என்று நான் வேண்டாத நாளில்லை. உங்களுக்குப் பக்தி வந்து விட்டது. நேற்று இரவு நீங்கள் தூக்கக் கலக்கத்தில் உங்களை அறியாமலே, ஸ்வாமி நாமங்களைச் சொல்லி விட்டீர்கள். அதற்காகத்தான் இந்தப் பூஜைகள்’’ என்றாள்.

அதைக் கேட்ட அரசர் அதிர்ச்சி அடைந்தார். ‘‘ஆகா! என் பக்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று எச்சரிக்கையாகவும், அமைதியாகவும் இருந்தேன். அப்படிப்பட்ட என் பக்தி, இன்று எல்லோருக்கும் தெரியும்படியாக வெளிப்பட்டு விட்டதா?’’ என்று சொல்லி வருத்தமுற்றார். அதே விநாடியில் அவர் உயிர் போய் விட்டது.

பக்தியை வெளிப்படுத்தாமல் அதைத் தானே அனுபவித்து வந்த அரசர், அது தன்னை அறியாமல் வெளிப்பட்டதை அறிந்தவுடன் உயிரையே விட்டு விட்டாரே என்று அனைவரும் வியந்தார்கள்.உண்மையான பக்தி, பிறவித் துன்பத்திற்குக் காரணமான வினைகளையெல்லாம் போக்கி விடும். பிறவியில்லாத முக்தி நிலையை அளிக்கும்.திருமூலர் நடத்தும் இப்பாடம் என்றைக்கும் பொருந்தும்.

(மந்திரம் ஒலிக்கும்)