விழுந்த குதிரை எழுந்தது



பகவான் யோகி ராம்சுரத்குமார் தன் ஆரம்ப கால கட்டங்களில் அடிக்கடி திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்வது வழக்கம். அங்கிருக்கும் ஞானானந்த கிரி சுவாமிகள் யோகியார் மீது மிகுந்த அன்பு பூண்டவர். அன்போடு அவரை உபசரித்து உணவளித்துப் போற்றி வந்தார். ஒருநாள் திருக்கோவிலூருக்குச் சென்றிருந்தார் யோகி.

 அங்கே ஆற்றையொட்டியுள்ள பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த குதிரை ஒன்று திறந்தவெளிக் கிணற்றில் விழுந்துவிட்டது. அது மேலே ஏற எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் முடியவில்லை. விஷயம் அறிந்த ஞானானந்தரின் பக்தர்கள் பலர் ஒன்றிணைந்து கயிற்றைக் கட்டி மேலே இழுத்துப் பார்த்தனர். என்ன முயற்சி செய்தும் முடியவில்லை. குதிரை எழுந்திருக்கவே இல்லை. அது சோர்ந்து போய்ப் படுத்து விட்டது.

விஷயம் யோகியாருக்கும் தெரியவந்தது. அவரும் மெல்ல அங்கே வந்து சேர்ந்தார். கூடியிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு கிணற்றின் அருகே சென்றார். குதிரையையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். சற்றே தலைதூக்கிய குதிரையும் அவரையே பார்க்க ஆரம்பித்தது.சிறிது நேரம் சென்றிருக்கும். சற்றே தலையசைத்த யோகியார் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று ஒரு முறை கத்தினார்.அவ்வளவுதான். துள்ளிக் குதித்த குதிரை, ஒரே தாவலில் மேலே வந்தது. ஓட்டமாய் அந்த இடம் விட்டு ஓடிப்போனது.

பார்த்தவர்கள் வியந்தார்கள். “எப்படி... எப்படி... ” என்று ஆச்சரியத்துடன் யோகியாரைக் கேட்டார்கள்.“எல்லாம் ராம நாமத்தின் மகிமைதான். நாமத்தின் மகிமையால் அனுமானால் கடலையே தாண்ட முடிந்தபோது, இது எம்மாத்திரம்” என்றார் யோகி.பக்தர்கள் நாம ஜபத்தின் மகிமையை அன்று அனுபவபூர்வமாக உணர்ந்தனர்.“ஞானானந்தா... ஞானானந்தா... சத்குரு ஞானானந்தா...” என்ற நாம மந்திர ஜபத்தை உருவாக்கியவரே யோகி ராம்சுரத்குமார்தான்.