கோதுமை மாவு பிரசாதம்



பௌர்ணமிக்கு வட இந்தியர்கள் பிரசாதம்

என்னென்ன தேவை?
Fresh கோதுமை மாவு - 1 கப், சர்க்கரைப் பொடி - 1/2 கப், வாழைப்பழம் - 1, பாதாம், முந்திரி, திராட்டை, பேரீச்சம் பழம் போன்ற உலர்ந்த பழங்கள் - தேவைக்கேற்ப, நெய் - 1/2 கப், ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?
கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி, உலர்ந்த பழங்களை வறுத்து (பொன்னிறமாக) எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதி உள்ள நெய்யில் கோதுமை மாவை போட்டு கை விடாமல் வறுக்கவும். இந்த மாவு வறுபட்டு வாசனை நன்றாக வரும். அப்போது இறக்கி ஏலக்காய் தூள், வறுத்த பருப்புகள் சர்க்கரைப் பொடி சேர்த்து கலந்து வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அலங்கரித்துப் பரிமாறலாம்.குறிப்பு: இந்த பிரசாதம் பௌர்ணமி நாட்களில் சிவனுக்கு பூஜை செய்து படைப்பார்கள். சிலர் கோதுமை, பால், பழம், தேன், உலர்ந்த பழங்களை வறுக்காமல், பச்சையாக கலந்து படைப்பார்கள்.

கச்சாயம்

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப், நெய் - 1 கப், ஏலக்காய் தூள் - சிறிது, வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - சிறிது, பொடித்த முந்திரி - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பச்சரியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி நைஸாக பொடித்து, ஜல்லடையில் 3 முறை சலிக்கவும். வெல்லத்தை கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு உருட்டும் பதம் வந்த பின் அதில் மாவை கொட்டி கிளறவும். பாகு முறுகாமல் பார்க்கவும். அதே சமயத்தில் (மாவு) இளகலாக இருக்க வேண்டும். ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். 8 மணி நேரத்திற்கு பின் வாழை இலையில் நெய் தடவி மாவை உருட்டி வைத்து லேசாக தட்டவும். (விரும்பினால் வடை மாதிரி மத்தியில் ஒரு ஓட்டை போடலாம்.) கடாயில் நெய் விட்டு, பதமான தீயில் தட்டி வைத்ததை (கச்சாயத்தை) போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். நறுக்கிய வாழைப்பழம், முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து கடவுளுக்கு படைக்கவும்.
குறிப்பு : நெய் சேர்த்தால் ருசியாக
இருக்கும்.

ஜவ்வரிசி, பால் கலவை

என்னென்ன தேவை?
ஜவ்வரிசி - 250 கிராம், சர்க்கரை - 250-300 கிராம், நெய் - 50 கிராம், பால் - 250 மி.லி., திராட்சை, முந்திரி - தலா 20, ஏலக்காய் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசியை ஊற விடவும். 4 மணி நேரம் ஊறிய பின் வாய் அகன்ற கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுக்கவும். இவை வறுபட்டதும், ஜவ்வரிசி, பால் கலவையை கொட்டி மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். இதை மெதுவாக நடுநடுவே கலந்து கிளறி விடவும். வெந்து ‘பொல, பொல’ என்று வந்ததும் சர்க்கரை சேர்க்கவும். கலவை பதம் வந்து, இறக்கும்போது சிறிது நெய் விட்டு கிளறி இறக்கி வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் தூவி கலந்து அலங்கரித்து படைக்கவும்.
குறிப்பு : ஜவ்வரிசி, பால் கலவை வெந்து பதம் வந்ததும் சர்க்கரை சேர்க்கவும் அல்லது சர்க்கரையை பாகு செய்து சேர்த்து வேக விட்டு இறக்கவும்.

பிரண்டை துவையல்

என்னென்ன தேவை?
பிரண்டை சற்று நீளமான துண்டு - ஒன்று, உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது (காரத்திற்கு), புளி - சிறிதளவு, நல்லெண்ணெய் - 1 கப், உப்பு - தேவைக்கு, மிளகு, கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது.
எப்படிச் செய்வது?
பிரண்டையை சுத்தம் செய்வது முக்கியம். ஓரத்தில் இருக்கும் நாரை உரித்து நீக்கவும். பின் நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும். பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயைத் தனியாக வதக்கவும். ஆறியதும் உப்பு, புளி, பிரண்டை மற்றும் யாவற்றையும் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக, துவையலாக அரைத்து தாளிக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலையுடன் கலந்து இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சூட்டைத் தணிக்கும் மருந்து குணமுடையது.
குறிப்பு: செங்கல்பட்டு அருகில் உள்ள நெம்மேலியில் அமாவாசை அன்று அக்கத்து பக்கத்தில் இருக்கும் பக்தர்கள் பெருமானுக்கு படைத்த பொங்கலும், பிரண்டை துவையலும் தான் பிரசாதம். இதைதான் யாவருக்கும் பரிமாறுவார்கள்.

கீர்/மக்னா பாயசம்

வட இந்தியர்கள் பிரசாதமாக செய்யும் கீர் இது. மக்னா (விணீளீலீஸீணீ) என்பது தாமரை காயிலிருந்து தயாரிக்கப்படுவது. தாமரை காயை தோல் உரித்து உலர்த்திப் பதப்படுத்தி வைப்பார்கள். பிறகு பொடித்து பலகாரம் செய்யப் பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. மிக விசேஷமானது.
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர், சர்க்கரை - 50 கிராம், உடைத்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கேற்ப, விவீறீளீ விணீவீபீ (டின் பால்) - 1/2 டீஸ்பூன், குங்குமப் பூ - தேவைக்கேற்ப, ஏலக்காய் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
மக்னா வட்ட, வட்டமாக தக்கையாக இருக்கும். அலசி வைத்துக் கொள்ளவும். பாலை கொதிக்க விட்டு சுண்ட காய்ச்சவும். திக்காக வரும்போது, இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். இது கொதித்து பாயசம் பதம் வரும் போது மக்னாவை சேர்த்து கொதிக்க வைக்கவும். இது பாலில் கொதித்து வெந்து வந்ததும் (5 நிமிடம் கொதித்தால் போதும்) ஏலக்காய் தூள், கரைத்த குங்குமப் பூ, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை மில்க் மெய்டு சேர்த்து கலந்து இறக்கி படைக்கவும்.

வெண்ணெய் தயிர் சாதம்

என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப், தண்ணீர் - 2 கப், பால் - 2 கப், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பொடித்த கொத்தமல்லித் தழை - சிறிது, தயிர் - 1/2 கப், கேரட் துருவல் - 1/4 கப், விருப்பப்பட்டால் பச்சை திராட்சைப்பழம் - சிறிது.
தாளிப்பதற்கு :
கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பொடித்த இஞ்சி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பு - 10.
எப்படிச் செய்வது?
அரிசியைக் களைந்து நீர், பால் சேர்த்து குழைய வேக விடவும். வெந்த சாதத்தில் உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். சாதம் ஆறியதும் கொத்தமல்லித்தழை தயிர் சேர்த்து கிளறவும். சாதம் குழைய இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் மேலும் பால் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பதற்கான பொருட்களை சேர்த்து அதை சாதத்தில் கொட்டி மீண்டும் கிளறவும். கடைசியாக கேரட்டை துருவி சேர்த்து படைக்கவும்.

சந்திரலேகா ராமமூர்த்தி

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்