வாழ்வளிப்பான் வடபழநி முருகன்



சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் பிறந்த அண்ணாசாமி நாயக்கருக்கு கடுமையான வயிற்று வலி. எந்த மருந்தாலும் பயனில்லை. சாது ஒருவரின் யோசனைப்படி திருப்போரூர் முருகன் கோயிலுக்குப் போகவும், திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தவும், பழநி முருகனை தரிசனம் செய்யவும் தீர்மானித்தார்.

திருப்போரூரில் இவரது உடைமைகள் திருடு போயின. ஆனாலும் இவர் கனவில் தோன்றிய ஒரு பெரியவர்,‘உன் வீட்டிலேயே முருகனை வழிபடலாமே!’ என்றார். அன்று முதல் வீட்டிலேயே முருகனை வழிபடத் தொடங்கினார் அண்ணாசாமி. அடுத்ததாக திருத்தணி சென்ற அவர், காணிக்கையாக என்ன தருவது என யோசித்தார்.

 பளிச் சென்று தனது நாக்கையே அறுத்து ஒரு இலை மீது வைத்து, பலிபீடத்தில் சமர்ப்பித்தார். அவரது பயங்கர பக்தியைக் கண்டு சுற்றி நின்றவர்கள் திகைத்தனர். அவர்களில் ஒருவர் அவருக்கு பக்கத்துக் கடையிலிருந்து ஒரு முருகன் படத்தை வாங்கிக் கொடுத்தார்.

(நாக்கை அறுத்து இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை ‘பாவாடம்’ என்பார்கள். திருத்தணியில் அண்ணாசாமி பெற்ற முருகன் படம் இருந்த இடமே இப்போது ‘பாவாட மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது.) வீட்டில் அந்த முருகன் படத்தை வைத்து வழிபடத் தொடங்கினார். அன்று முதல் அவருக்கு வயிற்று வலி இல்லை.

வெட்டப்பட்ட நாக்கும் மீண்டும் வளர்ந்தது! அண்ணா சாமியின் பக்தி ஊர் முழுக்கப் பரவியது. மக்கள் தங்கள் குறைகளைக் கூறி, தீர்வு கேட்டனர். பக்தர்களின் குறை களைய வழிகள் சொன்னார். அவை பலித்தன.

இந்நிலையில் அண்ணாசாமி நடைப் பயண மாக பழநி சென்றார். முருகனை வழிபட்டுத் திரும்பும்போது ஒரு படக்கடையில், பெரிய முருகன் படத்தைப் பார்த்தார் அதை வாங்கிச் செல்ல விரும்பினார். ஆனால், அவரிடம் பணம் இல்லை. அன்றிரவு கடைக்காரர் கனவில் தோன்றிய முருகன், அந்தப் படத்தை அண்ணாசாமியிடம் தரும்படி கூறினார். அதேசமயம் அண்ணாசாமியின் கனவிலும் தோன்றி, படத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கூறினார் முருகன்.

மறுநாள் பொழுது விடிந்ததும் கடைக்காரர் முருகன் படத்தை அண்ணாசாமியிடம் கொடுத்தார். அண்ணாசாமி அதைக் குறிமேடையில் வைத்து அதன்மேல் கீற்றுக் கொட்டகை அமைத்து கோயிலாக மாற்றினார். குடும்பத்திலிருந்து விலகி துறவு பூண்டார்; அண்ணாசாமி தம்பிரானானார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரத்தினசாமி செட்டியாரின் ஆழ்ந்த முருக வழிபாட்டைக்கண்ட தம்பிரான், தனக்குப் பின் முருக வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய அவரைத் தேர்ந்தெடுத்தார்.

இது நடந்தது 1863ல். ‘பழநி ஆண்டவருக்கான இந்த கீற்றுக் கொட்டகையை பெரிய கோயிலாகக் கட்ட விரும்புகிறேன். உதவி செய்ய இயலுமா?’ என்று அவரிடம் கேட்டார். உடனே சம்மதித்த ரத்தினசாமி, தனக்குத் தெரிந்த ஸ்தபதி மூலம் பழநி ஆண்டவர் சிலையைப் பெற்று, அதை பிரதிஷ்டை செய்து திருப்பணியை மேற்கொண்டார். இதற்கிடையில் அண்ணாசாமி தம்பிரான் முருகனடி சேர, அவர் திருமேனியை குறிமேடை அருகே அடக்கம் செய்தார் ரத்தினசாமி.

இவரும் அண்ணாசாமி போன்றே தனது நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார்; துறவும் பூண்டார்; ரத்தினசாமி தம்பிரானானார். மீண்டும் திருப்பணி தொடங்கி, பழநியாண்டவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் முழுமை பெற்றது. கோடம்பாக்கம் குறிமேடை அன்று முத ல் ‘ வ டபழநி ஆண்டவர் திருக்கோயில்’ என்று அழைக்கப்பட்டது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாக்கிய லிங்க சுவாமி, ரத்தினசாமி தம்பிரானின் மனம் கவர்ந்த சீடரானார்.

இவரும் தம் குருவைப் போலவே துறவு பூண்டார். நாக்கை அறுத்து முருகனுக்குக் காணிக்கையாக்கினார். 1886ம் ஆண்டுவாக்கில்ரத்தின சாமி தம்பிரானும் முருகனடி சேர்ந்தார். இவருக்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு கோயிலை விரிவுபடுத்திக் கட்டினார் பாக்கியலிங்க சுவாமிகள். 1931ம் ஆண்டு இவரும் இறைவனடி சேர்ந்தார். இவரது திருமேனியும் முறைப்படி, இவருக்கு முன்னிருந்த தம்பிரான்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது தான் வடபழநி ஆண்டவர் கோயில் அமைந்த வரலாறு.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலி ருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது வடபழநி. பிரதான சாலையிலிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் கோயிலை அடையலாம். உள்ளே முதலில் தரிசனம் தருகிறார் வரசித்தி விநாயகர். அவரை வணங்கி, ராஜகோபுரம் வழியாக கங்கா தீர்த்தத்தை வலம் வந்து வெளிப் பிராகாரத்தில் தனிச்சந்நதியில் அருள்பரப்பி வரும் சொக்கநாதர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், அங்காரகன், மீனாட்சி அம்மன், கண்ணாடி அறையில் வள்ளி-தெய்வானையோடு அழகுற காட்சி தரும் ஷண்முகன் ஆகியோரை தரிசிக்கலாம்.

தல விருட்சமான அத்தி மரத்தை வணங்கி அருணகிரிநாதர், வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். கருவறையில் அழகன் முருகன் ஒய்யாரமாய் சிரித்துக் கொண்டு நிற்கிறான். தீப வெளிச்சத்தில் கொஞ்சலான புன்னகையோடு நிற்கும் அவனது திருமுகத்தைக் காμம்போது உள்ளம் குழைகிறது. அவனது அழகு முகத்தை மனத்தில் நிரப்பிக் கொண்டு பிராகாரத்தில் உள்ள மூன்று தம்பிரான்களும் அருள்வாக்கு சொன்ன குறிமேடைக்கு வந்து வணங்கலாம்.

 அருகில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து முருகனை தியானிக்கலாம். கோயிலில் இருந்து10 நிமிட தூரத்தில் கோயில் அமையக் காரணமான தம்பிரான்கள் மூவரின் சமாதிகள் இருக்கின்றன. இந்த வடபழநி ஆண்டவர் திருத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. இத்தலம் வரும் அனைவரது வாழ்வும் அழகன் முருகனின் ஆசியால் வளமடைகிறது என்பது பலரது அனுபவம்.

எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்