அடிக்கும் வெயிலில் புல் ஓவர் (Pullover) ஃபேஷனா?!



Pull...Over...Pull...Over..

உங்கள் கேள்வி நன்றாகவே கேட்கிறது. பெரும்பாலும் இது குளிர்கால உடைகளாகவே இருக்கும். ஆனால், இப்போதுதான் எங்கும் ஏசி, எதிலும் ஏசி என ஆகிவிட்டது போலவே நம்மூர் வெப்பநிலைக்கு ஏற்ப புல் ஓவர்கள் காட்டன் மற்றும் லினென் மெட்டீரியல்களில் கூட வரத் தொடங்கிவிட்டன. தவிர சம்மர் வெகேஷன் என குளிர்ப் பிரதேசங்களுக்கு படையெடுக்கும் நிகழ்வுகளும் இருப்பதால் இந்த ஃபேஷன், சம்மர் டிரிப் போகும் மக்களுக்கும் பொருந்தும். ரைட்... அதென்ன புல் ஓவர் ஃபேஷன்..? விளக்குகிறார் ஃபேஷன் டிசைனர் மற்றும் ஃபேஷன் ஆய்வாளர் நந்தா அமிர்தா.  

‘‘புல் ஓவரை ஸ்வெட்டர் அல்லது ஜம்பர்ன்னு சொல்வோம். பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய பெயர்தான் புல் ஓவர். அமெரிக்க ஸ்டைல்ல ஸ்வெட்டர்ன்னு சொல்வாங்க. வுல்லன், அல்லது பின்னப்பட்ட ஸ்டைல்களாதான் ஸ்வெட்டர் இருக்கும். அதுவும் கதகதப்பு தரக்கூடியதா இருக்கும். புல் ஓவர், அதாவது மேல்புறத்தில் இழுத்துவிடுவது எனில் போட்டிருக்கும் உடைக்கு மேலே ஸ்வெட்டராக பயன்படுத்துற ஸ்டைல். கையால பின்னப்படுறதால கழுத்து டிசைன் பெரும்பாலும் முழுக்க கவர் செய்தும், இல்லைன்னா ‘V’ நெக் டிசைன்லயும் இருக்கும். காரணம், கையால பின்னும்போது இந்த ரெண்டு டிசைன்கள்ல முடிக்கறதுதான் சுலபம்.

புல் ஓவர், மொத்தம் மூணு ஸ்டைல்ல இருக்கு. முழு ஸ்லீவ் இருந்தா அதுதான் பக்கா புல் ஓவர். அதிலேயே ஸ்லீவ்லெஸ் ஆக இருந்தா ஸ்வெட்டர் வெய்ஸ்ட். சட்டை போல பட்டன் போடும் முறையில் இருந்தால் அது கார்டிகன். இதிலே ஆண்களுக்கு உயரம் ஒரே ஸ்டைல்தான். இடுப்பு வரை இருக்கும். பெண்களுக்கு உயரம் மாறும். கிராப் டாப் புல் ஓவர் ஸ்டைல்ல மேல் வயிறு வரையான அளவு தொடங்கி பின்பகுதி மறைப்பு வரையிலுமான அளவுகள் இருக்கும். இதுதான் பொதுவான அளவு.

இப்ப பெண்களுக்கு சில வகைகள்ல தொடைப்பகுதி, ஏன் முட்டி வரை கூட வருது. ஆண்களுக்கு ஒரே ஸ்டைல் முழுக்கைதான். பெண்களுக்கு ரெண்டு ஸ்டைல் ஸ்லீவ் இருக்கும். ஒண்ணு முழுக்கை, இன்னொண்ணு முக்கால் கை...’’ என்னும் நந்தா, புல் ஓவர் பூர்வீகம் குறித்து ஃபுல் டீடெய்ல் கொடுத்தார். ‘‘அமெரிக்க நாடுகள்லதான் இந்த ஸ்டைல் ஆரம்பிச்சது. காரணம் அதிக குளிர். 2000 வருஷங்களுக்கு முன்பே விலங்குகளின் தோலில் ஆரம்பிச்ச இந்த ஸ்டைல் அப்படியே கம்பளி, கம்பளி துணியில் உடலை மூடின உடைகள்னு ஆரம்பிச்சு 15ம் நூற்றாண்டு காலத்திலேதான் முழுமையான வடிவம் கிடைச்சு ஸ்வெட்டர்களா மார்க்கெட்டுக்கு வர ஆரம்பிச்சது.

ஆரம்பத்திலே விளையாட்டு வீரர்களுக்கான புல் ஓவர்களா வெளியாச்சு. அப்புறம் மெல்ல மெல்ல கடல் மாலுமிகள், கடல் வணிகம் செய்கிற ஆண்கள் ஆகியோருடைய மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆசையா கையால் பின்ன ஆரம்பிச்சாங்க. அப்படியே அன்பானவர்களுக்கான அன்பளிப்பா மாற ஆரம்பிச்சது. 15ம் நூற்றாண்டு காலங்கள்ல கம்பளி மெட்டீரியல்கள்ல வந்ததால் தனியா புல் ஓவர் உடைகளைப் போட்டுக்க முடியாது. காரணம் அப்போதைய கம்பளி குத்தும்.

அதை சரிசெய்ய வேண்டி ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்து அதிலே அப்டேட் செய்தவர்தான் பெஞ்சமின் ரஸ்ஸல் (Benjamin Russel). ஸ்வெட்டர்களா, கம்பளிகளா வந்துட்டு இருந்த இந்த புல் ஓவர்களை காட்டன் நூல்கள்ல செய்து ஸ்வெட்ஷர்ட் ஆகக் கொடுத்தார் பெஞ்சமின்.

நம்மூர்ல ஜெர்சி எனில் அங்கே புல் ஓவர்தான் பயன்படுத்துவாங்க. குளிர்காலம்னா தலைய கவர் செய்துக்கற ஹூட்டி இணைச்சு வரும். சம்மர் எனில் ஹூட்டி இல்லாம வரும்...’’ என்னும் நந்தா, நம்மூர் காலநிலைக்கு புல் ஓவர் எப்படி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தார். ‘‘இங்கே காட்டன் 40% அக்ரிலிக் 60% கலந்து வருது. காட்டனே ரொம்ப திக்காக இருக்கும். உடன் அக்ரிலிக் சேரும்போது மெட்டீரியல் ஷைனிங்கா இருக்கும். எத்தனை முறை துவைச்சாலும் கலர் மங்காம அப்படியே ஃபிரஷ் லுக்ல இருக்கும்.

போலவே நம்மூர்ல காட்டன், லினென் என நுனிப்பகுதியில் சாதாரண எலாஸ்டிக் முறையில் இந்த ஸ்டைல் வர ஆரம்பிச்சிடுச்சு. இதனை ஃபேஷன் காப்பியாக ஸ்வெட்டரா இல்லாம ஜீன் டாப்கள், ஸ்கர்ட் மேலே உடைகளா போட்டுக்கறாங்க. எந்த மேலை நாட்டு ஃபேஷனும் நம்மூர் மக்களுக்கு வரும்போது இங்கே இருக்கற ஸ்டைல் மற்றும் காலநிலைக்கு ஏற்ப மாறிடும். தவிர நம்மூரில் குளிர்காலத்திலும், சம்மரில் வெகேஷனிலும் இந்த புல் ஓவர் தேவை இருந்துக்கிட்டேதான் இருக்கும். அதிலும் கோடை காலத்தில் புல் ஓவர் வாங்கி வைப்பது புத்திசாலித்தனம். விலையும் குறைவா இருக்கும்...’’ என்கிறார் நந்தா அமிர்தா.

ஷாலினி நியூட்டன்