பயோ டேட்டா- நம்பி நாராயணன்



பெயர் : நம்பி  நாராயணன்.

செல்லப்பெயர்கள் : ராக்கெட் மேன், நம்பி.

பிறந்த இடம் மற்றும் தேதி : ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு  உட்பட்ட பகுதியான நாகர்கோவிலில் வசித்து வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தில், டிசம்பர் 12, 1941-ல் பிறந்தார் நம்பி.

படிப்பு:  நாகர்கோவிலில் உள்ள டிவிடி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு மதுரையில் உள்ள தியாகராஜர் காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங்கில் பி.டெக் (மெக்கானிக்கல்) படித்தார். ராக்கெட் தொழில்நுட்பத்தில் நம்பிக்கு இருந்த திறமையை அங்கீகரிக்கும் விதமாக நாசாவின் ஃபெல்லோஷிப் கிடைக்க, அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பிரின்ஸ்டனில் கெமிக்கல் ராக்கெட் புரொபல்ஷன் குறித்த ஆராய்ச்சிப் படிப்பைப்  படித்தார்.

பல மேதைகளை உருவாக்கிய பல்கலைக்கழகம் இது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பாடம் நடத்திய இப்பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இங்கே படித்ததால் நம்பிக்கு அமெரிக்காவில் வேலையும், குடியுரிமையும் தேடி வந்தது. ஆனால், தாய்நாட்டுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று இந்தியா திரும்பினார். ஆனால், அவருக்குக் கிடைத்ததோ தேசத் துரோகப் பட்டம்.

விருது: பல அவமதிப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் பிறகு 2019ம்  வருடம் இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் நம்பியைத் தேடி வந்தது. தனக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுகிறார் நம்பி.

திரைப்படங்கள் : சமீபத்தில் வெளியான மலையாளப்படமான ‘ஜன கண மன’வில் வருகின்ற முக்கிய கதாபாத்திரம் வழக்கறிஞர் அரவிந்த் சுவாமிநாதன். ஒரு வழக்கின்போது ஊடகத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் நோக்கில் ஓர் உதாரணத்தைச் சொல்வார் அரவிந்த். நம்பி நாராயணனுக்கு நிகழ்ந்த அநீதிகளைப் பற்றியது அந்த உதாரணம்.

அடுத்து நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி, நடிகர் மாதவன் இயக்கியிருக்கும் படம், ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இதில் மாதவனே நம்பியாக நடித்திருக்கிறார். இப்போது  திரையரங்குகளில்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம். தமிழ், ஆங்கிலம், இந்தியில் காணலாம்.

சிறப்பு : இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு அடித்தளம் இட்டவர்களில் ஒருவர். பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் இயங்குவதற்கான விகாஸ் எஞ்சினை வடிவமைத்த குழுவின் தலைவர்.

அடையாளம் : ராக்கெட் விஞ்ஞானி.

திருமணம் : மனைவியின் பெயர் மீனா நம்பி. மீனா - நம்பி தம்பதியினருக்கு சங்கரகுமார் நாராயணன் என்ற மகனும், கீதா அருணன் என்ற மகளும் உள்ளனர்.

வழக்கு : நம்பியின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட சம்பவம் இது. அவரது ராக்கெட் சிந்தனைகளைவிட, இந்த வழக்கு மூலமாகவே பலருக்கு அறியப்படுகிறார்.
1994ம் வருடத்தின் இறுதியில் இந்தியாவின் ராக்கெட் ரகசியங்கள் குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்ற தேசத் துரோக வழக்கு நம்பியின் மீது தொடுக்கப்பட்டது. சிலர் ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டார் என்றும் சொன்னார்கள்.

எந்தவித விசாரணையும், புலனாய்வும் இல்லாமல் கேரள போலீசார் நம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்கள் கடுமையான சிறைத் தண்டனையை அனுபவித்தார் நம்பி. உடலாலும், மனதாலும் பல சித்ரவதைகளுக்கு ஆளானார்.  நம்பியைச் சார்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளானார்கள். பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை நம்பி விற்றார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தெரிய வந்தது.  

ஒருவேளை வெளிநாட்டுச் சதியாக இருக்கலாம் என்று நம்பியே பல நேர்காணல்களில் சொல்லியிருந்தார். இருந்தாலும் விசாரணை தொடர்ந்தது. சிபிஐ களத்தில் குதித்தது.
சிபிஐக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் வழக்கை முடித்துவிட பரிந்துரை செய்தது சிபிஐ. ஆனால் நம்பியோ, ஊடகங்களால் தேசத்துரோகியாக அடையாளம் காணப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார்.

1998ல் நம்பியின் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபணமானது. இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டின் பாதிப்பு ஒரு நிழல் போல அவரைத் தொடர்ந்தது. ஆம்; இஸ்ரோவில் அவரது தகுதிக்கு உண்டான பொறுப்பு தரப்படவே இல்லை. ஓய்வு காலம் வரை அவரது தகுதிக்குக் குறைவான பதவியிலேயே இருந்தார். சமீபத்தில் அவர் மீதான பொய் குற்றச்சாட்டுகளுக்கு நஷ்ட ஈடு கிடைத்தது தனிக்கதை. இன்னமும் அவர்மீதான பொய் குற்றச்சாட்டுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மை வெளிப்படவில்லை.

பதவிகள்: எஞ்சினியரிங் படிப்பு முடித்தபிறகு 1966ம் வருடம் இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். நம்பியின் திறமைக்கு நாசாவின் ஃபெல்லோஷிப் கிடைக்க, பிரின்ஸ்டனுக்குப் பறந்தார். அங்கே ராக்கெட் இயங்குவதற்கான திரவ எரிபொருள் குறித்து நிபுணத்துவம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார். அப்போது இஸ்ரோவின் ராக்கெட்டுகள் திட எரிபொருள் சார்ந்தே இருந்தது. திரவ எரிபொருள்தான் ராக்கெட்டின் எதிர்காலம் என்று உறுதியாக நம்பினார் நம்பி. அதனால் இஸ்ரோவில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன.

ஃபிரெஞ்ச் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இயங்கிய குழுவுக்குத் தலைவர், இஸ்ரோவின் மூத்த அதிகாரி என்ற முறையில் கிரையோஜெனிக் துறைக்குப் பொறுப்பாளர், பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலை, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி, திரவ எரிபொருள் புரொபல்ஷன் துறை என இஸ்ரோவின் முக்கிய துறைகளில் எல்லாம் பதவி வகித்திருக்கிறார்.  

வாழ்க்கை : “விண்வெளி குறித்த ஆராய்ச்சிகள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றால், எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நான் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் என் வாழ்க்கையின் இன்னொரு பகுதி...” என்று தன் வாழ்க்கை குறித்து சொல்கிறார் நம்பி.

புத்தகங்கள் : Ormakalude Bhramanapadham : An Autobiography by Nambi Narayanan; Ready To Fire: How India and I Survived the ISRO Spy Case.  

த.சக்திவேல்