தச்சுத்தொழில் செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பெண்கள்!



இன்றைய பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். இதற்கு தச்சுத்தொழிலும் விதிவிலக்கல்ல என்கின்றனர் சேலத்தைச் சேர்ந்த பெண்கள்.
சேலம் ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் பத்து பெண்கள் தச்சுத்தொழிலில் ஈடுபட்டு வருவது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் கூட்டுகிறது. பொதுவாக பெண்கள் தச்சுத்தொழிலில் ஈடுபடுவதில்லை. அதை மாற்றி, மரப்பலகைகளை ரம்பத்தைக் கொண்டு அறுப்பதும், அதில் ஆணி அடித்து பொருட்கள் செய்வதுமாக இருக்கின்றனர்
இந்தப் பெண்கள்.

குறிப்பாக பெட்டிக்கடை, கூண்டுகள், சாக்பீஸ் பாக்ஸ் என மரத்தில் செய்யக்கூடிய பொருட்கள் பலவும் தயாரிக்கின்றனர்.   இவர்களுக்கு இந்தத் தொழிலைக் கற்றுக் கொடுத்து கண்காணித்து வருபவர் கந்தசாமி தாத்தா. ‘‘எனக்கு 82 வயசாகுது. சின்ன வயசுல இருந்தே இந்தத் தொழில்ல இருக்கேன். இப்ப என் மனைவி, மருமகள்கள், மகள்கள்னு என் குடும்பத்திலுள்ள பெண்கள் எங்ககூட வேலை செய்றாங்க.

முதல்ல நான் செய்றதை கவனிச்சு பார்த்தாங்க. அப்புறம், அவங்களே வேலைகளை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நான் ஆர்டர் எல்லாம் வாங்கி வேலைகள் செய்றதில்ல. பொருட்கள் தேவைப்படுறவங்க அவங்களா வந்து வேலைகள் கொடுப்பாங்க. செய்து கொடுப்போம். இப்ப புறாக்கூண்டு, நாய்க்கூண்டு, கோழிக்கூண்டு, டேபிள்னு மரப்பலகையில எல்லா பொருட்களும் செய்றோம்.

சைஸுக்கு ஏற்ப பணம் வாங்கிக்கிறோம். வாடிக்கையாளர்கள் கேட்குறதை மட்டுமே செய்றோம். நாங்க தயாரிச்சு விலைக்கு வைக்கிறதில்ல. இப்ப தொழிலும் முன்னமாதிரி இல்ல...’’ என்கிறார் கந்தசாமி தாத்தா. ‘‘இன்னைக்கு சூழல்ல ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போனாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும்.

எங்க கணவர்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்றாங்க. நாங்க குடும்பத்துக்கு கூடுதல் வருமானத்தை ஈட்ட இந்த வேலையில் ஈடுபடுறோம். எங்களுக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல ஊர்கள்ல இருந்து ஆர்டர் தந்து பொருட்கள் வாங்கிட்டு போறாங்க...’’ என உற்சாகமாகச் சொல்கின்றனர் இந்தப் பெண்கள்.

செய்தி: பி.கே.

படங்கள்: ஜெகன்