COFFEE TABLE



ஜூனியர் ஜெயம்

தமிழ் சினிமாவில் பெண் தயாரிப்பாளர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் சுஜாதா விஜயகுமார். இவர் ‘ஜெயம்’ ரவியின் மாமியார். மருமகனுக்காக இவர் தயாரித்த ‘அடங்க மறு’ பெரிய ஹிட். இப்போது ‘ஜெயம்’ ரவியின் மகனும் தன்னுடைய பேரனுமான ஆரவ்வை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறார். இது குழந்தைகளுக்குப் பிடித்த ‘சோட்டா பீம்’, ‘மோட்டு பட்லு’ மாதிரியான குழந்தைகள் படமாக இருக்குமாம்.

குரு - சிஷ்யன்

விபத்து, கொரோனா போன்ற பல காரணங்களால் ‘இந்தியன் - 2’ படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. இப்போது தெலுங்கில் ராம்சரண் படத்தில் பிஸியாக இருக்கிற காரணத்தால், கமல் போர்ஷனை மட்டும் ஷங்கர் இயக்கவுள்ளாராம். மீதமுள்ள போர்ஷன்களை அவருடைய நம்பிக்கைக்குரிய சிஷ்யர் வசந்தபாலன் இயக்கவிருப்பதாகத் தகவல்.

ஹரி கறி

‘யானை’ அடம் பிடிக்காமல் வெற்றிகரமாக ஓடியதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் ஹரி. தீவிர அசைவப் பிரியரான ஹரி, படம் இயக்கும்போது மட்டும் சுத்த சைவத்துக்கு மாறிவிடுவார். காரணம், அசைவம் சாப்பிடும்போது ஒருவித மந்தநிலை ஏற்படுவதுடன் செரிமானப் பிரச்னையும் இருக்கும் என்பதால் இந்த முன்னேற்பாடு.

உஷா உதுப் 50

பிரபல பின்னணிப் பாடகி உஷா உதூப்புக்கு சினிமாவில் இது பொன்விழா ஆண்டு. அதையொட்டி, ‘த குயின் ஆஃப் இண்டியன் பாப்’ என்கிற புத்தகம் வெளியாகியுள்ளது.
இதில் உஷாவின் பல ஷாக்கிங் நியூஸ்களும் இடம் பிடித்துள்ளன. ‘டிஸ்கோ சிங்கர்’ என்ற அடையாளம் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லையாம். இவர் உச்ச ஸ்தாயியில் பாடுபவர் என்பதால் பல கேலி, கிண்டல்கள் வருமாம். அதையெல்லாம் தன் குரலால் நொறுக்கித் தள்ளி பார் போற்றும் பாடகியாகி இருக்கிறார் உஷா.

கார்களுக்கு தடை!

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் நகரங்களுக்கு புத்துயிர் அளிக்க அங்குகார்களை தடை செய்தால் எப்படி இருக்கும்?

கற்பனை எல்லாம் செய்யவேண்டிய அவசியமில்லை. பல நகரங்கள் கார்களை தடை செய்யத் தொடங்கிவிட்டன. நார்வேயில் தலைநகரம் ஒஸ்லோவை ‘கார்களிடம் இருந்து மீட்டு மக்களிடம் கொடுப்போம்’ என அறிவித்து,  நகரின் மத்தியில் கார்கள் வருவதை முழுமையாகத் தடை செய்தார்கள். நகருக்குள் இருந்த 760 கார் பார்க்கிங் பகுதிகளை அகற்றினார்கள். பார்க்கிங் செய்ய முடியாவிட்டால் எப்படி கார்களை ஓட்டி வருவார்கள்?

சாலைகளை கார்களுக்கு லேன்கள் அமைக்க விரிவுபடுத்துவதற்கு பதில் சைக்கிள்களுக்கு லேன்கள் அமைத்தார்கள். சாலையோரங்களில் மரங்களை நட்டு பூங்காக்களை அமைத்தார்கள்.
கார்கள் இல்லாததால் நடந்தும், சைக்கிளிலும், பேருந்துகளிலும் மக்கள் சென்றார்கள். இதனால் கடைகளுக்கு வணிகம் பெருகியது. முக்கியமாக கார்களில் அடிபட்டு இறக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை பூஜ்யம் எனும் அளவுக்குக் குறைந்தது.

பாரிஸ் நகரிலும் ‘15 நிமிட பாரிஸ்’ எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 15 நிமிட பாரிஸ் என்றால் நகர மக்களுக்கு 15 நிமிட சைக்கிள் / நடை பயணத் தூரத்தில் எல்லாமே கிடைக்கவேண்டும் என்பதே. பள்ளி, அலுவலகம், மளிகை, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு... எல்லாமே 15 நிமிட நடை / சைக்கிள் பயண தூரத்தில் கிடைத்தால் அவர்கள் ஏன் கார்களில் ஏறிக்கொண்டு தொலைதூரம் செல்லவேண்டும்?

இதன்படி கட்டடங்கள் மல்டி பர்ப்பஸ் கட்டடங்களாக மாற்றப்படும். பள்ளிகளை மாலையில் மூடுவதற்கு பதில் அங்கே மாலையில் காய்கறி / உணவு விற்கும் டிரக்குகளை நிற்க அனுமதிக்கலாம். ஜிம்களில் மதியம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தலாம். 2024ல் பாரிஸின் முக்கிய பகுதிகளில் இருந்து கார்கள் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுவிடும் என குறிக்கோள் வைத்துள்ளனர்.

பத்து மாத குழந்தைக்கு ரயில்வே பணி

சத்தீஸ்கரில் விபத்தில் பெற்றோரை இழந்த பத்து வயது பெண் குழந்தைக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சலுகையை ஒரு குழந்தைக்கு அளிப்பது சத்தீஸ்கர் மாநில வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. இந்தக் குழந்தையின் தந்தை ராஜேந்திர குமார், பிலாய் நகரில் உள்ள ரயில்வே யார்டில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மனைவியுடன் சென்றபோது இருவருமே சாலை விபத்தில் இறந்தனர்.

இதனால், தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் கருணை நியமனத்திற்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு கருணை அடிப்படையிலான பணி நியமினம் வழங்கப்பட்டது. இந்தக் குழந்தை 18 வயதைத் தொட்டவுடன் தேசிய டிரான்ஸ்போர்ட்டர் பணியில் சேரலாம். இதற்காக ரயில்வே பதிவேடுகளில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்வதற்காக குழந்தையின் கைரேகைகளை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வில்லன் ராஜராஜ சோழன்!

பொன்னியின் செல்வன் என்கிற அருண்(ள்)மொழிவர்மன் என்கிற ராஜராஜ சோழன், தமிழகத்துக்கு ஒரு பெரிய ஹீரோ. ஆனால், கர்நாடகாவில் வில்லன்! ஆம். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்வெட்டு அப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.Pottiyur (now called as ‘Hottur’) herostone inscription made by the Village gavundas in North Karnataka’s Dharwad district mentions the atrocities and praises Chalukya Satyashreya as ‘Tigula mari’ meaning Slayer of tamils.

‘ஸ்திரீ வத பால வத பிராமண வதெகளாம் கெய்து பெண்டிரம் பிடித்து ஜாதி நாசமாடி...’அதாவது பெண்கள், குழந்தைகள், பிராமணர்களை கொடுமைப் படுத்தி... பெண்களை மானபங்கப்படுத்தி ராஜராஜ சோழன் அராஜகம் புரிந்ததாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திரைப்படமாகும் வாஜ்பேயி!

2024ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் நூற்றாண்டு தொடங்குகிறது. இதனை ஒட்டி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது 99ம் ஆண்டை ஒட்டி ‘அடல்’ திரைப்படம் வெளியாகிறது.‘The Untold Vajpayee: Politician and Paradox’ புத்தகத்தை தழுவி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. இந்தித் திரையுலகைச் சேர்ந்த வினோத் பனுசாலி இப்படத்தை தயாரிக்கிறார்.பான் இந்தியா படமாக உருவாகும் இந்த சினிமாவில் வாஜ்பேயியாக பங்கஜ் திரிபாதி நடிக்கிறாராம்.

தொகுப்பு: குங்குமம் டீம்