சிறுகதை - ஈரச் சுமை



அந்தப் பேருந்தில் நான் ஏறி அமர்ந்தபோது மிக மென்மையான தூறல் தொடங்கி இருந்தது. எந்த ஒரு அவசரமும் இல்லாததால் என்னால் அந்த சாரலை ரசிக்க முடிந்தது. எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது இப்படி டவுன் பஸ்சில் தனியாய் அமர்ந்து.
பளபளப்பான சில்வர் வண்ணத்தில் பச்சையோ, சிவப்போ, நீலமோ,எதோ ஒரு நிறத்தில் ஜரிகை கட்டியது போன்ற வெளிப்புறமும், நிறைய இடம் விட்டு சின்னச் சின்ன சீட்டுகள் அமைந்த உள்புறமும் கொண்ட இந்த பேருந்துகள் மேல் சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய பிடித்தம் உண்டு.  

சீட் கிடைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்கும். அப்படி உட்கார வழி இல்லாமல் நின்று கொண்டே வந்தால் கூட ஏனோ அலுப்பே தெரியாது. வேடிக்கை பார்த்துக்கொண்டே நிற்கும் கொஞ்ச நேரத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விடும். இந்த டவுன் பஸ்ஸுகள் பெரும்பாலும் ஊருக்குள்ளேதான் சுற்றும். திருநெல்வேலி ஒன்றும் அவ்வளவு பெரியது இல்லையே.
பேருந்து நகரத் தொடங்கியது. அடுத்த நிறுத்தத்தில் கைக்குழந்தையுடனும், ஐந்து வயது பையனுடனும் ஒரு இளம் தாய் ஏறினாள். எனக்கு எதிர்த்த இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவள் அதில் அமர்ந்து கொண்டு என்னருகில் மகனை உட்கார வைத்தாள்.

என் அருகில் தயக்கத்துடன் அமர்ந்திருந்த அந்தச்  சிறுவனின் கண்ணில் லேசான பயம் மிச்சமிருந்தது. நான் அவனைப் பார்த்து மென் புன்னகை சிந்தவும் பதிலுக்கு சிரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் என்னைப் பார்த்தான். எனக்குள் என்னையும் அறியாமல் ஒரு பதற்றம் வந்து அமர்ந்துகொண்டது. அந்த சிறுவனின் முகம் எனக்குள் வேறு ஒரு முகத்தை என் நினைவுப் படிமங்களில் இருந்து இழுத்து வந்தது. அது கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாய் மறக்கவே முடியாத முகம். மழை வலுக்கத் தொடங்கியது.

அப்போது நான் திருநெல்வேலி டவுனில் இருக்கும் குஞ்சரம் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு அரையாண்டு பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டிருந்தார்கள். அந்த முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்த தாத்தா தன் வீட்டிற்கு என்னை அழைத்துப் போக என் அப்பாவிடம் அனுமதி கேட்டார். தாத்தா வஞ்சகமில்லா தேகம் படைத்தவர். நல்ல பூசினாற் போன்ற நீள் வாகு முகம். எப்போதுமே சிரிப்புடன் பவனி வருவார். என் அம்மா வழியில் தூரத்துச் சொந்தம். அவர் இருக்கும் இடங்களில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.

கொலுவுக்கு எங்கள் குடும்பத்தை அழைக்க வந்தார். எனக்கு கொலுவென்றால் கொள்ளைப் பிரியம். தாத்தா வீட்டின் நீண்ட பட்டாசாலில் நான்கு வரிசையில்  பெரிய கொலுவாய் வைப்பார்கள். சீரியல் லைட் எல்லாம் போட்டு வெகு ஜோராய் கொண்டாடுவார்கள். நாளெல்லாம் அந்த கொலுவின் முன்பு அமர்ந்து பொம்மைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னாலும் நான் தயார்தான்.

குஞ்சரம் தாத்தாவை ஏதோ ஒரு விதத்தில் என் அப்பாவிற்கு பிடிக்கும் என்பதால் என்னை அவர்கள் வீட்டிற்கு அனுப்பச் சம்மதித்தார். எங்கள் ஊரான வீரவநல்லூரில் இருந்து திருநெல்வேலி டவுன் ஒன்றும் பெரிய தூரம் இல்லை என்றாலும் எனக்கு புதிதாய் வேறு ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல், சித்தி, சித்தப்பா என்று நெருங்கிய உறவுகளும் இல்லாத ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்குவது விசித்திரமான விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தாத்தாவின் வீட்டிற்கு நான் போனபோதே கொலு பொம்மைகளை அடுக்கியிருந்தார்கள். அப்போது எனக்கு ஒரு பத்து பதினோரு வயதிருக்கும். நான் மிகவும் ரசிக்கும் விதத்தில் பிளாஸ்டிக் மிருகங்களின் பொம்மைகளை வைத்து பார்க் எல்லாம் செய்திருந்தார் சிவகாமி ஆச்சி. அந்த பார்க்கில் சின்னச் சின்னதாய் முளைவிட்டிருந்த பயிர்களைக் கொண்டு புல்வெளியைப் போல அமைத்திருந்ததை நான் மிகவும் ரசித்தேன். ஒவ்வொன்றையும் எப்படிச் செய்கிறார் அந்த ஆச்சி என்று பார்க்க தோதாய் அவர் பின்னோடே அலைந்தேன்.

இந்த கொலு பொம்மைகள் மேல் உள்ள ஆர்வம் ஒரு புறமிருக்க இன்னொரு புறம் குஞ்சரம் தாத்தாவுக்கு சென்ட்ரல் டாக்கீஸில் இருந்த செல்வாக்கும் நான் அவர் வீட்டிற்குப் போக ஒரு காரணம். அப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மட்டுமே சினிமா பார்க்க முடியும். தாத்தா வீட்டிற்குப் போனால் அடிக்கடி தியேட்டர் கூட்டிக்கொண்டு போவார். சென்ட்ரல் டாக்கீஸை வெறும் தியேட்டர் என்று சொல்லிவிட முடியாது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், பிரமாண்டமான அந்த திரையரங்கும் எனக்கு எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்திடும். படம் போடுவதற்கு முன்பு ஸ்க்ரீனை உயர்த்துவதற்கு போடப்படும் இசையே என்னை குஷிப் படுத்தும்.

தாத்தா வீட்டில் இருந்தால் பெரும்பாலும் மாலை ஷோக்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். பாக்ஸில் அமரவைத்துவிட்டுப் போய்விடுவார். அவருடைய பேரன், பேத்திகள், நான் என்று பெரிய பட்டாளமே இருப்போம். எங்களுக்கு துணைக்கு அவர்கள் வீட்டுச் சித்தி இருப்பார். இடைவேளைகளில் அங்கு வேலை செய்யும் அண்ணன்கள் எங்களுக்கு முறுக்கு, கோன் ஐஸ், பாப்கார்ன் முதலிய பண்டங்களைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். ஒரே ராஜ உபசாரமாகத்தான் இருக்கும்.

அந்த மாலை ஆச்சி நைவேத்தியம் செய்து கொடுத்த பூம்பருப்பு சுண்டலைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் தாத்தாவுடன் சென்ட்ரல் டாக்கீஸுக்குக் கிளம்பினோம். அப்போதே வானம் லேசாய் இருட்டிக்கொண்டுதான் வந்தது. சிவகாமி ஆச்சி எதுக்கும் குடை எடுத்துப் போகச் சொன்னாள். தாத்தா ‘‘அதெல்லாம் வேணாம். மழை பெஞ்சா நாங்க ஆட்டோல வந்துக்கிடுறோம்...’’ என்று சொல்லிவிட்டார்.

சென்ட்ரல் டாக்கீஸுக்கு டிக்கெட் எடுத்துவிட்டு அமர்ந்திருந்தோம். மழை தூவானமாய் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக் கொண்டே வந்தது.
நான் ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஜன்னல் கம்பி வழி வழியும் நீரில் விரலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் எனக்குள் ஒரு ஜாக்கிரதை உணர்வு எழ தாத்தாவைப் பார்த்துக் கொண்டேன்.

அன்று நாங்கள் கிளம்பியிருந்தது கமலஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திற்கு. எனக்கு கமல் படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பதால் நான் உற்சாகமாக இருந்தேன். ஒருவேளை ஆச்சி போகவேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று நான் கவலைப்பட்ட மாதிரி இல்லாமல் ஆச்சி போக அனுமதித்ததே எனக்கு பெரிய விஷயமாய்ப் பட்டது.
மொத்தம் ஆறு நிறுத்தங்கள் கடந்தால் சென்ட்ரல் டாக்கீஸ் வந்துவிடும். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் மிச்சமிருந்தது. அப்போது எங்களுடன் வந்த சந்திரா சித்தி அமர்ந்திருந்த இருக்கையில் அவர் அருகில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் முழித்து எழுந்து அழத் தொடங்கினான்.

எதற்காக அழுகிறான் என்று விவரம் புரியாமல் தடுமாறிய சித்தி சற்று நேரத்தில் அவன் பெற்றோர் அவனைத் தவறவிட்டுவிட்டு இறங்கிவிட்டதை உணர்ந்து கொண்டாள்.
இரண்டு நிமிட இடைவெளியில் அந்தச் சிறுவனின் நிலையை அந்த முழு பேருந்தும் உணர்ந்து கொண்டது. சித்தியிடமிருந்து விஷயமறிந்த குஞ்சரம் தாத்தா நடத்துநரையும் ஓட்டுநரையும் அழைத்து விவரம் சொன்னார். அவர்கள் திகைத்தபோதும் மீண்டும் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் அவனது பெற்றோரைத் தேடிப் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.

நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது. மழை சற்றே வலுத்திருந்தது. தியேட்டர் வாசலிலேயே பஸ் நிற்கும் என்ற போதும் நனையாமல் உள்ளே நுழைந்து விட முடியாது.
தவிப்புடன் அழுதுகொண்டிருந்த அந்தச் சிறுவனின் முகம் என் மனதில் அழுத்தமாய் பதிந்து போனது. அவனை அவன் வீட்டில் தேடியிருப்பார்களா... திரும்ப அழைத்துப் போயிருப்பார்களா... அவனுக்கு என்ன நடந்திருக்கும்... என்று ஒரே கவலையாய் இருந்தது. கூடவே நாமும் இப்படி தொலைந்து விடுவோமோ என்கிற கவலையும் வந்தது.

சந்திரா சித்தியின் கரங்களை நான் விடவே இல்லை. எனக்கு மிகவும் பிடித்த கமல் அன்று அந்நியப்பட்டுப் போனார். என்னால் படத்தில் ஒன்றவே முடியவில்லை. தாத்தா ஏன் அந்தப் பையனை எங்களுடன் கூட்டி வந்திருக்கக் கூடாது என்று தோன்றியது. தியேட்டருக்குள் நுழையும்முன்பு கிட்டத்தட்ட முழுவதுமாய் நனைந்துவிட்ட உடைகளின் ஈரம் உலராமல் அப்படியே இருந்தது. அந்த ஈர உடைகளின் சுமையைக் காட்டிலும் மனம் கனத்துக் கிடந்தது.

அன்று தாத்தாவும் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். நிறைய காட்சிகளை அவர் சிரித்துச் சிரித்து ரசித்துப் பார்த்தது எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.
அந்தச் சிறுவன் அவன் பெற்றோருடன் சேர்ந்திருப்பானா என்று என் மனதின் மூலையில் அரித்துக்கொண்டே இருந்தது. கொலு பொம்மைகளும், சென்ட்ரல் டாக்கீஸும் பொலிவிழந்து போனதாக உணர்ந்தேன்.

மறுநாள் என் அப்பா என்னைப் பார்க்க வந்தபோது அவருடனேயே கிளம்பிவிட்டேன். ‘‘பேத்திக்கு அம்மையைத் தேடுது போல...’’ என்று சொல்லிக் கொண்டார் குஞ்சரம் தாத்தா.
மழை விட்டிருந்தது. அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்க வேண்டும். ஆனால், அப்படி இறங்கினால் என்னால் நிம்மதியாக இன்று தூங்க முடியாது. அதற்கடுத்து  வந்த மூன்றாவது நிறுத்தத்தில் அந்த இளம் தாய் இறங்கினாள். அவளுக்கு முன்பே இறங்கி அந்தச் சிறுவனைத் தூக்கி இறக்கி விட்டேன்.ஒரு நன்றியுடன் என்னைக் கடந்து போன அந்தப் பெண்ணின் குரலில் என் முப்பது வருட ஈரச் சுமையின் கனம் சற்றே குறைந்திருந்ததாகத் தோன்றியது.

இந்துமதி கணேஷ்