நான் ஐபிஎஸ் ஆக லிங்குசாமி காரணம்! புன்னகைக்கிறார் ராம்



தெலுங்கு சினிமா கொண்டாடும் லவ்வபிள் ஹீரோ ராம் பொத்தினேனி. ஆக்‌ஷன், காமெடி, காதல் என எந்த ஜானர் படமாக இருந்தாலும் அதற்கு பொருந்திப் போகும் லட்சணமான முகம்.

தெலுங்கில் 18 படங்கள் பண்ணியவர் தன்னுடைய 19வது படமான ‘வாரியர்’ படத்தை கோலிவுட் இயக்குநர் லிங்குசாமியுடன் பண்ணியுள்ளார்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் ‘பேட்டி வேணும்’ என்றதும் ‘வாங்க பிரதர்’ என தமிழில் உடனே வாட்ஸ் அப் வந்தது!நேரில் பேசும்போது தமிழர்கள் தோற்றுப்போகுமளவுக்கு சுத்தத் தமிழில் பொளந்துகட்டுகிறார்.

எப்படி... இவ்வளவு  நன்றாக தமிழ் பேசுறீங்க?

எனக்கு தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் நல்லாவே தெரியும். 92ல் நாங்கள் குடும்பமாக சென்னைக்கு ஷிப்ட் ஆனோம். யுகேஜி டூ லெவந்த் வரை இங்குதான் படிச்சேன். ரொம்ப சின்ன வயசுலேயே நடிக்க வந்துட்டேன். தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமான ‘தேவதாஸ்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு வயது 15. என்னுடைய அறிமுகம் தமிழில் ஹிட் அடித்த ‘காதல்’ படத்தில் நடப்பதாக இருந்தது. ஏனெனில், நான்தான் முதலில் ‘காதல்’ படம் பண்ணுவதாக இருந்தது.

‘தேவதாஸ்’ எடுத்த செளத்ரி சார் தெலுங்கில் பெரிய தயாரிப்பாளர் கம் இயக்குநர். என்னுடைய ஷார்ட் ஃபிலிம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்து நான்தான் உன்னை லாஞ்ச் பண்ணுவேன் என்று அழைத்துச் சென்றுவிட்டார்.  

சினிமா இண்டஸ்ட்ரியே ‘வாரியர்’ பற்றிதான் பேசுகிறது. ‘வாரியர்’ உருவாகிய விதம் குறித்து சொல்லுங்க..?

தமிழ்ப் படம் பண்ணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைக்கு வயது 15. சினிமாவில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தாலும் எல்லாம் சரிவர அமைந்தால் மட்டுமே படம் பண்ண முடியும். ‘வாரியர்’ பண்ணக் காரணமே லிங்குசாமி சார். நான், தமிழ்ப் படம் பண்ணணும்னு நெனைச்ச நேரத்துல லிங்குசாமி சார் தெலுங்கு படம் பண்ணணும்னு நெனச்சிட்டிருந்தார். இரண்டு பேர் வேவ்லெங்த்தும் சரியா இருந்தது. அசந்து போகும் விதமா அவர் சொன்ன கதை இருந்தது. உடனே படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.இது டப்பிங் படம் அல்ல. ஒரு ஷாட் தமிழ், ஒரு ஷாட் தெலுங்கு என்று எடுத்த நேரடி படங்கள். கரெக்ட்டா சொல்வதாக இருந்தால் ஒரே சமயத்துல இரண்டு படங்கள் எடுத்தோம்.

படத்துல வரும் சத்யா ஐபிஎஸ் கேரக்டர்ல என்ன ஸ்பெஷல்..?

எல்லாமே! இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும் அதற்குள் ஒரு ஆன்மா இருக்கும். அப்பா டாக்டர் என்ற காரணத்தாலேயே மகனும் டாக்டராகிவிடும் நிலை இருக்கும். இன்னொரு பக்கம் சமூகத்துக்கு சேவை செய்யணும் என்ற நோக்கத்துடன் டாக்டரானவர்களும் இருப்பார்கள். இருவருமே டாக்டராக இருந்தாலும் காரணங்கள் வேறு.

அதுமாதிரி இதுல ஹீரோ ஏன் போலீஸ் அதிகாரிஆனார் என்று சொல்லும்போது அதுல நியாயம் இருக்கும். காப் ரோல் கதைகள் எனக்கு பல முறை வந்துள்ளது. ஸ்டீரியோடைப் என்பதாலேயே ஆர்வம் காண்பிக்காமல் இருந்தேன். இது போலீஸ் கதையாக இருந்தாலும் மனதைத் தொடுமளவுக்கு இருக்கும். காப் ரோல் பண்ணுவது இதுதான் முதல் முறை. போலீஸ் கதைக்கு என்று இருக்கும் நியதி என்னவோ, கதை என்ன கேட்டதோ அதை மட்டுமே பண்ணியிருப்பேன். ரசிகர்களை என்டர்டெயின் பண்ணுவதுதான் நோக்கம். அதைத் தவறில்லாமல் பண்ணியிருக்கிறோம்.

லிங்குசாமி..?

ஒரு ரசிகனாக லிங்குசாமி சாரின் ‘ரன்’, ‘வேட்டை’,‘சண்டக் கோழி’ உட்பட எல்லா படங்களையும் பார்த்து ரசித்துள்ளேன். லிங்குசாமி சார் கதை சொல்லும்போதே எனக்குள் படம் பார்த்த ஃபீல் கிடைச்சது. லிங்குசாமி சார் கதை சொல்லும்போது ரீ-ரிக்கார்டிங்குடன் சொல்வார். அதுவே படம் பார்த்த மாதிரி இருக்கும். அந்த வகையில் அவர் சொல்லும் கதையும் நன்றாக இருக்கும். கதை சொல்லும் விதமும் நன்றாக இருக்கும்.  

போலீஸ் கதை நிறைய வந்தது. எல்லாத்தையும் ஸ்கிப் பண்ணியிருந்தேன். அந்த சமயத்துலதான் லிங்குசாமி சார் போலீஸ் கதையுடன் வந்தார். உள்ளுக்குள் ‘போலீஸ் கதையா’ என்ற சிறிய தயக்கம் இருந்தாலும் கதை சொல்லி முடித்ததும் கதைக்குள் போய்விட்டேன். போலீஸ் கதை பண்ணக்கூடாது என்று இருந்த என்னை போலீஸ் கதையில் நடிக்க வைத்துவிட்டார். 

லிங்குசாமி சார் லொகேஷன்ல காம் பெர்சனாக இருப்பார். ஹாட் சிச்சுவேஷனாக இருந்தாலும் ஆர்ட்டிஸ்டுகளை கம்ஃபோர்ட்டா வைத்திருப்பார். ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர். படம் ஆரம்பிச்சபோது, கோவிட் வந்தது, எனக்கு காயம் ஏற்பட்டது. அவ்வளவையும் சமாளித்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தார். இயக்குநராக மட்டுமல்ல, பழகுவதிலும் இனிமையானவர்.

கீர்த்தி ஷெட்டி...?

கீர்த்திக்கு இது தமிழில் முதல் படம். இப்போது சூர்யா சார் படம் பண்றார். ‘வாரியர்’ விழாவில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உட்பட ஏராளமான இயக்குநர்கள் வந்தார்கள். இந்தியாவில் அப்படி ஒரு விழா நடந்திருக்குமா என்பது சந்தேகம். அவ்வளவு இயக்குநர்கள் விழாவுக்கு வந்ததைப் பார்க்கும்போது கீர்த்தி மட்டுமல்ல, நானும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக நினைக்கிறேன்.

உங்களுடைய கதைத் தேர்வு கதையை மையமாக வைத்து இருக்குமா அல்லது முந்தைய படங்களை ஒப்பிட்டு இருக்குமா?

கண்டிப்பாக ரிப்பீட் வராத மாதிரி பார்த்துக்கொள்வேன். சமீபத்துல ‘ரெடி’ என்ற படம் பண்ணினேன். பெரிய ஹிட். இந்தியில் சல்மான்கான் பண்ணினார். தமிழில், தனுஷ் நடிக்க ‘உத்தமபுத்திரன்’ ஆக வந்தது. அந்தப் படம் டிரெண்ட் செட் படமாக அமைந்தது. அதன் பிறகு என்னிடமும் அதே மாதிரி கதையுடன் வந்தார்கள். ‘நான்தான் அந்தக் கதை பண்ணினேன். எங்கிட்டயே மறுபடியுமா’ என்று நினைத்துக்கொண்டேன்.

உங்கள் ஷார்ட் ஃபிலிம் 2002ல் வெளியானது. இப்போது பல படங்களில் நடித்துள்ள நிலையில் என்ன மாதிரியான முன்னேற்றம் சினிமா மற்றும் ஆடியன்ஸ் மத்தியில் எழுந்துள்ளது?
கரெக்டா வருஷம் ஞாபகம் இருக்கே! ‘அடையாளம்’ ஷார்ட் ஃபிலிம் பற்றி சொல்வதாக இருந்தால், 2002ல் ஷார்ட் ஃபிலிம் என்றாலே பலருக்கு அது என்ன என்று தெரியாது. இப்போது இருக்கிற மாதிரியான கையடக்க கேமரா அப்போது இல்லை. சினிமாவை எப்படி ஷூட் பண்ணுவாங்களோ அப்படித்தான் ஷூட் பண்ண முடியும்.

என்னுடைய நண்பர்கள் பலர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேட்டார்கள். எனக்கு சிரிப்பாக வரும். காரணம் யாருக்கும் புரியல. விருது  விழாக்களுக்கு அனுப்புவோம் என்று சொல்லும்போதுதான் கொஞ்சம் புரியும்.

இப்போது ஷார்ட் ஃபிலிம் என்றால் எல்லாருக்கும் தெரியும். யூடியூப் லாஞ்ச் 2004ல்தான் நடந்தது. அந்த ஷார்ட் ஃபிலிமுக்கு சுவீஸ் படவிழாவில் விருது கிடைத்தது. அது கொடுத்த வெளிச்சத்துலதான் சினிமா வாய்ப்பு வர ஆரம்பித்தது. இப்போது டெக்னாலஜி வளர்ந்துள்ளதே தவிர கதையில் உள்ள எமோஷன்ஸ் மாறவில்லை. 80களில் இருந்த அதே எமோஷனல் கதைகள் இப்போதும் வருகிறது. ‘கைதி’யில் எவ்வளவுதான் டெக்னிக்கல் அம்சங்கள் இருந்தாலும் அப்பா - மகள் எமோஷன்ஸ்தான் கதைக்கு வேல்யூ கொடுத்தது.

அந்த மாதிரி எமோஷனல் கதையில் கனெக்ட்டாகவில்லை என்றால் எவ்வளவு பெரிய டெக்னிக்கல் படமாக இருந்தாலும் ஓடாது. அன்று உள்ளதுபோல் ஹியூமன் எமோஷன்ஸ்  அப்படியே இருக்கிறது.

பாலிவுட் போகும் ஐடியா இருக்கிறதா?

என்னுடைய படங்கள் இந்தியில் ‘டப்’ஆகி வெளியாகியுள்ளன. அடுத்து ஒரு பான் இந்தியா படம் பண்றேன். இப்போது பாலிவுட், கோலிவுட் என்று தனியாக எதுவுமில்லை. எல்லாமே இந்தியன் படமாக மாறிவருகிறது. தமிழ்ப்படமோ, தெலுங்குப் படமோ, ரீச்சானால் பாலிவுட் போகும்.

தமிழில் அடுத்த வாய்ப்பு வருவதாக இருந்தால் எந்த இயக்குநருடன் வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்கள்?

ஒருவர் பேரை மட்டும் சொல்லமுடியாது. ‘வாரியர்’ நிகழ்ச்சிக்கு வந்த எல்லா இயக்குநருடனும் படம் பண்ணணும். அதைப் பண்ணவே இருபது வருடங்கள் தேவைப்
படும்!

எந்த நடிகையுடன் ஜோடி சேர ஆசை?

பதினைந்து வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் சிம்ரன் என்று சொல்லியிருப்பேன்.

விக்ரம், சூர்யா மாதிரி ரிஸ்க் ரோல்  வருகிறதா?

‘ஐஸ்மார்ட் சங்கர்’ல (iSmart Shankar) ரிஸ்க் ரோல் பண்ணியிருப்பேன். அதுவரை நான் அப்படிப் பண்ணியதில்லை. அதுல என்னுடைய லுக் வேற மாதிரி இருக்கும். கஷ்டமான வேடம், ஈஸியான வேடம் என்பது நாம் பண்ணும் வேடங்களில் இல்லை. கேரக்டர் டிசைனிங்ல இருக்கணும். பாய் நெக்ஸ்ட் டோர் கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டரை சரியாக வடிவமைக்காவிட்டால், இயக்குநர் அதை சரியாக எழுதாவிட்டால் அது கஷ்டமான ரோலாக மாறிவிடும். எல்லாவற்றுக்கும் ஸ்கிரிப்ட் முக்கியம்.

தெலுங்கு சினிமாவில் நெப்போடிஸம் அதிகமாக இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

ஒருவர் நடிக்க வருகிறார் என்றால் ஏன் நடிகராக வேண்டும் என்பது முக்கியம். என்னுடைய விஷயத்தில் சின்ன வயதிலேயே நான் ஹீரோவாகப் போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டேன்.

தெலுங்கு சினிமாவில் என்னுடைய பெரியப்பா பெரிய தயாரிப்பாளர். ‘பெரியப்பா தயாரிப்பாளர் என்பதால் ஹீரோவா நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டியா’ என்று அம்மா கேட்டார். அது எனக்கு அவமானமாக இருந்தது. என்னுடைய லட்சியத்தை அலட்சியம் பண்ணுகிறார்களே என்று நினைத்தேன்.

அப்போதே அம்மாவிடம், நான் பத்து படம் பண்ணிவிட்டு எனக்கு படம் இல்லாத நிலை வரும்போது பெரியப்பா படம் பண்றேன் என்றேன். சில படங்கள் பண்ணியபிறகு என்னுடைய பெரியப்பா தயாரித்த ‘ரெடி’ பண்ணினேன். இதுல நெப்போடிஸம் எங்கு வந்தது..? இண்டஸ்ட்ரியில் பெரிய ஹீரோவாக இருப்பார். அவருடைய வாரிசுக்கு ஆர்வம் இல்லையென்றாலும் சினிமாவுக்கு தள்ளிவிட்ருவாங்க. சினிமா யாரிடமும் இல்ல. சினிமா ஆடியன்ஸ்கிட்ட இருக்கு.

எஸ்.ராஜா