பிட்டு துணிகள்தான் என் மூலதனம்! காலரை உயர்த்துகிறார் ஸ்ரீநிதி உமாநாதன்



பொதுவாக டெய்லர் கடைகளிலும், டெக்ஸ்டைல் நிறுவனங்களிலும் வேஸ்ட்டாகும் புதுத் துணிகளை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி எறிவார்கள். அல்லது எரித்துவிடுவார்கள்.
ஆனால், இந்தக் கழிவுத்துணிகளைப் பயன்படுத்தினால் என்ன? இந்த ஒற்றைக் கேள்விதான் ஒரு மாணவியின் வாழ்க்கை வரைபடத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது.
ஆம். அந்தக் கழிவுத்துணிகளைத் தன்னுடைய ஐடியாவால் மறுபயன்பாட்டுப் பொருளாக்கி, இன்று சிறந்த தொழில்முனைவர் எனப் பெயரெடுத்திருக்கிறார் ஸ்ரீநிதி.  

டெய்லர் கடைகளிலும், ஹோல்சேல் டெக்ஸ்டைல் நிறுவனங்களிலும் வீணாகும் கழிவுத் துணிகளில் தலையணை உறை முதல் பொக்கே வரை பல்வேறு பொருட்களை விதவிதமாக, பல வண்ண கைவேலைப்பாடுகளுடன் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார் நிதி. இவரின் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
 ‘‘இந்த ஐடியாவுக்கு காரணம் நான் படிச்ச காவேரி மகளிர் கல்லூரிதான். அங்க பி.காம் படிக்கிறப்பவே இடீசினு சொல்லப்படுற தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான பிரிவில் படிச்சேன். ரெண்டாமாண்டே என் நிறுவனத்தைத் தொடங்கி சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துல சிங்கிள் உரிமையாளர்னு பதிவு செய்திட்டேன்...’’ என உற்சாகமாகப் பேசும்
நிதிக்கு இந்த ஐடியா எப்படி உதயமானது?

‘‘சொந்த ஊர் திருச்சி. அப்பா உமாநாதன் டைமண்ட் பாலீஷ் பிசினஸ்ல இருக்கார். அம்மா மீரா ஹவுஸ் வொய்ஃப். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பாவும், அம்மாவும்தான் எனக்கு பெரிய சப்போர்ட்.ஆறாம் வகுப்பு படிக்கிறப்பவே ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. பிளஸ் டூ முடிச்சதும் என்ஐஎஃப்டிக்கு நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனா, அது சரியா இருக்குமானு பயம். அதனால, காவேரி கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். காலேஜ் மூன்றரை மணிக்கு முடிஞ்சிடும். அதன்பிறகு நமக்கு பிடிச்ச விஷயங்களை செய்துக்கலாம்.

அப்பாவின் பிசினஸ் இடம் மார்க்கெட் பகுதியில் இருக்கு. அப்பாவின் கடை இருக்கிற தைரியத்துல காலேஜ் முடிஞ்சதும் சுத்தியுள்ள கடைகளுக்கு தோழிகளுடன் போவேன். அப்பதான் டெய்லர் கடைகள்ல வேஸ்ட்டாகும் துணிகளைப் பார்த்தேன். புதுத் துணிகளைத் தைச்சபிறகு வேஸ்ட்டாகும் பிட் துணிகள். இதுமாதிரி துணி வேஸ்ட் நிறைய இருக்குதுனு தெரிஞ்சது.

இதேபோல டெக்ஸ்டைல் நிறுவனங்கள்ல விற்பனை செய்ததுபோக கடைசியா உள்ள துணிகள் வேஸ்ட்டாகும். இங்கேயும் நிறைய வேஸ்ட் துணிகள் இருப்பதைத் தெரிஞ்சுகிட்டேன்.
இதுல எதாவது செய்ய முடியுமானு யோசிச்சேன். அப்படிதான் இந்த நிறுவனத்தை உருவாக்கினேன். காலேஜ் முதலாமாண்டு படிக்கிறப்பவே இதுக்கான வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டேன். ஆனா, ரெண்டாமாண்டுதான் நிறுவனமா பதிவு செய்தேன்.

அந்நேரம், ரோட்ராக்ட் கிளப்ல ஒரு கேம்ப் நடத்தினாங்க. அங்க போனபிறகு பிசினஸ்னா லோகோ கொடுக்கணும், ஐடியாவிற்கு ஒரு ரூபம் தரணும்னு தெரிஞ்சது. பிறகுதான் என் நிறுவனத்துக்கு ‘ரீ டெய்லர்ஸ்’னு பெயர் வச்சேன். டெய்லர் கடைகள்ல வேஸ்ட்டாகிற துணிகளை மறுபயன்பாடு செய்றதால இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து வச்சேன்.

என் பெரியப்பா பையன் எங்களுடன் இருக்கார். நாங்க கூட்டுக்குடும்பம். அவரால் கேட்கவோ, பேசவோ முடியாது. அவர் திருச்சியில் ஒரு பள்ளியில் படிச்சிட்டு இருந்தார். அங்க அவங்களுக்கு கிராப்ட் வொர்க் பயிற்சி கொடுப்பாங்க. அப்ப ஒரு நாள் அவரைப் பார்க்கப் போனப்ப மேடம் பயிற்சி கொடுக்குறதை கவனிச்சேன்.

அப்பதான் ஏன் வேஸ்ட் துணியில் இந்த கிராப்ட்டை புகுத்தக்கூடாதுனு தோணுச்சு. அப்படியாக கைவேலைப்பாடுகள் செய்தோம். இந்த பிசினஸுக்கு மூலதனம் கிடையாது. அந்த வேஸ்ட் துணிகளை சேகரிக்க நமக்குதான் அந்த நிறுவனங்கள் பணம் தருவாங்க. ஏன்னா, கழிவுத்துணிகளை கார்ப்பரேஷன் எடுத்துக்கிறதில்ல. ஆனா, நான் அவங்ககிட்ட பணம் வாங்கறதில்ல. எனக்கு துணிகள் போதும்னு சொல்லிடுவேன். அதனால, இந்தத் தொழிலைப் பொறுத்தவரை என் ஐடியாதான் மூலதனம்.

முதல்ல கால்மிதியும், தலையணை உறையும்தான் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம், ஐடியாவை பெரிசு பண்ண நினைச்சு மணிபர்ஸ், பேக்ஸ், துணிப்பைகள்னு இதுல எவ்வளவு வெரைட்டி கொடுக்க முடியுமோ அவ்வளவு விஷயங்கள் செய்தேன்.அப்புறம், டர்க்கி டவல் வேஸ்ட் துணியில் டெடி பியர்ஸ் பண்ணினோம். ஸ்வெட்டர் பண்ற துணியில் பொம்மைகள் செய்தோம். சில்க் வேஸ்ட் துணியை வெட்டி தோடுகள், ஜிமிக்கி, கம்மல் உருவாக்கினோம்.

இப்ப பூக்களுக்கு பதிலா துணிகள்ல பொக்கே செய்றோம். அதாவது கர்ச்சீப்களை பொக்கேவா மாத்துறோம். பூக்கள் அன்றே வாடிப்போயிடும். ஆனா, இந்த கர்ச்சீப்களை ஒருமுறையாவது அவங்க முகம் துடைக்க பயன்படுத்திக்கலாம். இதுவும் ஒரு ஐடியாதான். இதுக்கு இப்ப நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்கஎன்னால் தனியா ஆர்டர் எடுக்க முடியும். ஆனா, கைவேலைப்பாடுகள் செய்றது, தைக்கிறதுனு எல்லா வேலைகளையும் என் ஒருத்தியால் செய்ய முடியாது. அதனால, திருச்சி பிஹெச்ஈஎல் பக்கத்துல உள்ள மகிளா சம்மேளனம்கிட்ட பேசினேன்.

அவங்க மூலம் கிராமங்கள்ல உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வேலைகள் செய்ய கொடுத்தேன். என் ஐடியாவை சொல்லி, இப்படி தைக்கணும்னு எல்லாம் சொல்லிடுவேன். அப்புறம், திருநங்கைகள் சிலருக்கு இந்த வேலைப்பாடுகளைச் சொல்லிக் கொடுத்து அவங்களுக்கும் வேலைகள் கொடுக்குறேன்...’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘இதுக்கிடையில் அடுத்த லெவல் என்ன செய்யலாம்னு பார்க்கிறப்ப இன்டீரியர் டிசைன் பத்தி யோசிச்சேன். என்னுடைய தோழி குல்ஷியானு இருக்காங்க. அவங்க பி.காம் படிக்கிறப்ப சைடு கோர்ஸா இன்டீரியர் டிசைன் படிச்சாங்க. அவங்களால இன்டீரியர் டிசைன் பண்ணமுடியல. காரணம், பெண்களுக்கே உள்ள தடைதான். இந்த ஐடியாவை இதனுள் புகுத்தினால் என்னனு யோசிச்சேன்.

உடனே சமூக வலைத்தளங்கள்ல பதிவிட்டேன். அப்படியாக எனக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைச்சார். மூன்றாமாண்டு படிக்கிறப்ப நானும் குல்ஷியாவும் சேர்ந்து அவருக்கு இன்டீரியர் டிசைன் பண்ணிக் கொடுத்தோம். பெயிண்டிங்கிலிருந்து லைட் செலக்‌ஷன் வரை எல்லாமே செய்தோம். அதேமாதிரி நிறைய பேரின் வீடுகளை இன்டீரியர் டெகரேட் செய்தோம். அப்புறம், நிறைய ரெஸ்டாரண்ட், ஆபீசஸ்னு பண்ணினேன். இதுக்குள்ள எங்க வேஸ்ட் துணிகள் டிசைனும் வரும்.

எங்க பிசினஸ் முழுவதும் ஆன்லைன்லதான் நடக்கும். சமூக வலைத்தளங்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களைப் பிடிச்சோம். குறிப்பா, கோவிட் காலத்துலதான் நாங்க சிறப்பா வந்தோம். அப்பதான் நிறைய வாடிக்கையாளர்கள் நெட்ல இருந்தாங்க. அந்நேரம், வேஸ்ட் துணிகளாலான துடைப்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.இப்ப மும்பை, தில்லி, ஆக்ரா, பாட்னானு பல மாநிலங்கள்ல பிசினஸ் செய்றோம். மும்பையில் மேலே போடுகிற கோட் நிறைய விரும்புறாங்க. அவங்களுக்கு பல வண்ண பிட் துணிகளை வெட்டி ஒட்டி தைச்சு, வேலைப்பாடுகளுடன் உருவாக்கிக் கொடுக்குறோம். பாட்னா பக்கம் தலையணை உறையும், திரைச் சீலையும் விரும்பி கேட்பாங்க. அதை செய்து அனுப்புறோம்.

இதுல தலையணை உறையில் ஆரி வொர்க் செய்து சிலர் கேட்பாங்க. அந்த தலையணை உறை மட்டும் 3 ஆயிரம் ரூபாய் வரும். அதை பண்ணிக் கொடுக்குறோம். அந்தமாதிரியான மேல்தட்டு வாடிக்கையாளர்களும் இருக்காங்க.இதுதவிர கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு நிறைய பவுச் செய்து அனுப்புறோம். அதாவது வேஸ்ட் வெல்வெட் துணிகள்ல கம்ப்யூட்டர் பிரிண்டிங்ல இந்த பவுச் தயாராகும். இதை அங்குள்ள கல்லூரி மாணவர்கள் விற்பனை செய்றாங்க. கூர்க் டூரிஸ்ட் ஏரியா என்கிறதால இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கு.

பொதுவா, நான் நிறுவனங்களுக்கு என் புராடக்ட்டை கொடுத்திடுவேன். அவங்க விற்பனை செய்துப்பாங்க. என் பிசினஸ் பெரும்பாலும் சோஷியல் மீடியாவுலதான். எங்க புராடக்ட் அமேசான், ஃபிலிப்கார்ட்ல விற்பனையில் இருக்கு. அதை நிறுவனங்கள் போட்டு சேல் செய்றாங்க. எனக்கு பத்து ரூபாய் கிடைச்சால் போதும்னு நினைக்கிறேன். நிறுவனங்கள் அதை எவ்வளவு ரூபாய்க்கு விற்றாலும் அது அவங்க சாமர்த்தியம்.

கடந்த ஆண்டு எனக்கு தமிழ்நாடு ஸ்டூடண்ட் இன்னொவேட்டர்ஸ் விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் கிடைச்சது. அப்புறம், திருச்சி சிஐஐ சிறந்த தொழில்முனைவர் விருது வழங்கி கௌவரவிச்சாங்க. இதெல்லாம் எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன். என் குறிக்கோள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்திலிருந்து சிறந்த  தொழில்முனைவர் என்கிற அங்கீகாரத்தை வாங்கணும் என்பது தான். புராஜெக்ட்டைப் பொறுத்தவரை ஃபர்னிச்சர் வேஸ்ட்ல  ரீசைக்கிள் ஃபர்னிச்சர் பண்றது பத்தி யோசிச்சு அதை நோக்கி பயணிச்சிட்டு இருக்கேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்ரீநிதி.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்