அயோத்திதாசர் தொடங்கிய தென்னிந்திய பெளத்த சபை இதுதான்!



அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், தலாய்லாமா... என பல தலைவர்கள் வருகைதந்த சபை இது

‘‘தமிழ்நாட்டுல கி.பி.13ம் நூற்றாண்டு வரை பௌத்தம் செழித்தோங்கி வளர்ந்திருக்கு. அப்புறம் அரசர்களின் ஆதரவு குறைஞ்சதாலும், பௌத்தர்களின் சேவை மனப்பான்மை குறைஞ்சதாலும் பௌத்தம் மங்கத் தொடங்குது. பிறகு 19ம் நூற்றாண்டுல தியாசஃபிக்கல் சொசைட்டியை நிறுவிய அமெரிக்க அறிஞர் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும், ரஷ்யாவைச் சேர்ந்த பிளாவட்ஸ்கி அம்மையாரும் பௌத்தத்தை வளர்க்க தங்களாலான பணிகளைச் செய்றாங்க.

அப்ப பன்முக ஆளுமை கொண்ட அறிஞர் அயோத்திதாச பண்டிதர் அவங்களுடன் இணைகிறார். பிறகு பௌத்தத்திற்கு மாறிய பண்டிதர் இந்தக் கோயிலை தோற்றுவிக்கிறார்.
இது 124 ஆண்டுகள் பாரம்பரியமும், பழமையும் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் கோயில்...’’ ஆச்சரியமான வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்கியபடி அமைதியாகப் பேசுகிறார் கௌதமன். சென்னை பெரம்பூரில் உள்ள தென்னிந்திய பௌத்த சபையின் இப்போதைய தலைவர்.

சென்னையில் நூற்றாண்டுகளைக் கடந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களும், இடங்களும் இருக்கின்றன. அதைப்போலவே பழமை கொண்டது இந்தச் சபையும் கோயிலும்! ஆனால், ஏனோ பரவலாக வெளிஉலகிற்குத் தெரியவராமலேயே உள்ளது. பெரம்பூரின் நெல்வயல் தெருவில் இருக்கிறது இந்தச் சபை.
‘தென்னிந்திய பௌத்த சபை - நிறுவனர் க.அயோத்திதாசர் 1900ம் ஆண்டு’ என்கிற பெயர்ப் பலகையும், ‘மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்கிற புத்தர் ஓவியத்துடன் கூடிய வாசகமும் பலரையும் வரவேற்கிறது. கூடவே, புத்தரின் பஞ்சசீல கொள்கைகளை வலியுறுத்தும் கொடிகள் சுற்றிலும் கட்டப்பட்டிருக்கின்றன.

நுழையும் இடத்திலேயே ஆண்டுகளைக் கடந்து நிற்கும் நாகலிங்க மரமும், அதன் பூவின் வாசமும் மனதைத் தொட்டு இதமளிக்கின்றன. ‘‘இதுவும் ரொம்ப ஆண்டுகளா இருக்கிற மரம். இதுக்கு பக்கத்துல அரச மரமும் முன்னாடி இருந்தது...’’ என்கிற கௌதமன் நம்மை கோயிலுக்குள் அழைத்துச் செல்கிறார். உள்ளே ஒரே அறைதான். அதன் மையத்தில் மூன்று புத்தர் சிலைகள். ஒவ்வொரு சிலைக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.   

‘‘1898ல் அயோத்திதாச பண்டிதர் சாக்கிய பௌத்த சங்கம் தொடங்குறார். இந்தச் சங்கத்துல கன்னட, தெலுங்கு, மலையாள மொழி பேசுபவர்கள் அதிகமா இருந்ததால இதனை ‘தென்னிந்திய பௌத்த சங்கம்’னு பெயர் மாற்றினார். பிறகு சென்னை, மாரிக்குப்பம், கோலார் தங்கவயல், ஹூப்ளி, சேம்பியன் ரீப்ஸ்னு பல தென்னகப் பகுதிகள்ல இதன் கிளை உருவானது.
அடையாறுதான் இதன் பூர்வீகமா முதல்ல இருந்திருக்கு.

ஆனா, அன்னைக்கு அடையாறுக்கு குதிரை வண்டியில்தான் போகணும். அப்புறம், எளிய மக்கள் பெரும்பாலும் மெட்ராஸ்னு சொல்லப்படுற இந்தப் பகுதியிலேயே வசிக்கிறாங்க. துறைமுகம், செயின்ட்ஜார்ஜ் கோட்டையை சுற்றிதான் இருக்காங்க. அதுக்காகவே அயோத்திதாச பண்டிதர், சபைக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

இந்த கோயில்ல நடுவில் உள்ள சிலை பண்டிதர் பர்மாவிலிருந்து கொண்டு வந்த பஞ்சலோக சிலை. பர்மிய ஸ்டைல்ல இருப்பதைப் பார்க்கலாம். 1910ம் ஆண்டு பர்மாகாரர்களுடன் பண்டிதர் இந்தச் சிலைமுன் புகைப்படம் எடுத்திருக்கார்...’’ என அந்தப் புகைப்படத்தைக் காட்டியவர், கோயில் கட்டப்பட்ட வரலாற்றுக்குள் வந்தார்.‘‘1898ம் ஆண்டிலிருந்து 1914 வரை பண்டிதர்தான் இந்தச் சங்கத்தின் தலைவர். அப்ப, இந்தக் கோயிலுக்கு சொந்த நிலம் கிடையாது. இந்தப் பகுதியில் ஒரு குடிசை போட்டு சிலை வச்சிருக்காங்க.  பண்டிதர் இறந்தபிறகு 1918ல் இதன் தலைவரா பேராசிரியர் லட்சுமி நரசு வர்றார்.

இந்தக் கோயிலுக்கான நிலம் கிடைக்க 1893ல் சிகாகோவில் நடந்த உலக சமய மாநாடே முக்கிய காரணம். அந்த மாநாட்டுல இந்து மதத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தரும், பௌத்தத்தைப் பற்றி  இலங்கையைச் சேர்ந்த புத்தபிக்கு அனகாரிக தர்மபாலவும் பேசுறாங்க. அப்ப அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்டர் அம்மையார் பௌத்தத்தால் ஈர்க்கப்படுறாங்க. பிறகு அவங்க தன்னுடைய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இந்தியாவில் பௌத்தம் தழைத்தோங்கவும் பரவவும் கொடுக்குறாங்க. இந்தத் தகவல் இங்குள்ள, ‘த மெயில்’ பத்திரிகையில் விளம்பரமா வந்திருக்கு.

இதை அப்ப தலைவரா இருந்த லட்சுமி நரசு கவனிச்சிருக்கார். உடனே, லட்சுமி நரசும், ம.சிங்காரவேலரும் மற்ற பௌத்த உறுப்பினர்களும் சேர்ந்து அனகாரிகவுக்கு கடிதம் எழுதுறாங்க. அனகாரிகதான் சென்னை எழும்பூர்ல இருக்கிற மகாபோதி சொசைட்டியின் நிறுவனர். அவர் கடிதத்தைப் பார்த்திட்டு, ‘தகுந்த இடத்தை குறைந்த விலையில் முடிவு செய்து தெரிவித்தால் நான் நேரில் வந்து இடத்தைப் பார்த்துவிட்டு கட்டடம் கட்ட பணம் தருகிறேன்’னு பதில் கடிதம் எழுதுறார்.

அப்ப பெரம்பூர்ல சபையைச் சேர்ந்த சி.துரைசாமி அவர்களும், அவர் தம்பி சி.மாணிக்க உபாசகரும் அவர்களுடன் இன்னும் சிலரும் சேர்ந்து சபை உறுப்பினராக இருந்த சி.சபாநாதன் என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை பேசி முடிக்கிறாங்க. 51 சென்ட் நிலத்தை 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. அனகாரிக தர்மபால இடத்தைப் பார்த்திட்டு 3 ஆயிரம் ரூபாய் பணத்தை சங்கத்திற்குக் கொடுத்திட்டு போறார். இந்த 250 ரூபாய் நிலத்தொகை போக மீதியுள்ள 2,750 ரூபாயில் கோயில் எழுப்புறாங்க. ஆனா, பணம் போதல. அதனால, மறுபடியும் அன
காரிகவுக்குக் கடிதம் எழுதுறாங்க. ஆனா அவர், ‘இந்தக் கோயிலுக்கு 3 ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. மேற்கொண்டு வந்தால் நீங்களே நிதி திரட்டிக் கட்டுங்கள்’னு சொல்லிடுறார்.
 
 இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் விளிம்புநிலை மக்கள். எல்லோருமே பின்னி மில்லில் வேலை செய்ற தொழிலாளிகள். இருந்தும் எல்லோர்கிட்டயும் கொஞ்சம் வசூல் செய்து 5 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டுறாங்க. அப்படியாக இந்தக் கோயில் ஐம்பது அடி நீளமும், முப்பது அடி அகலமும் கொண்டு இங்க எழுப்பப்பட்டது. அதனால்தான், இந்த அறைக்கு நாங்க ‘பாஸ்டர் ஹால்’னு பெயர் வச்சிருக்கோம்.

அப்ப ஆயிரத்து 500 பேருக்கு மேல் உறுப்பினர்கள் இருந்தாங்க. கோயில் எழுப்பினபிறகு புத்த பூர்ணிமா, பௌர்ணமினு முக்கிய நிகழ்வுகள் எல்லாம் கொண்டாட ஆரம்பிச்சாங்க. 1950க்கு பிற்பாடு மருத்துவ கேம்ப் எல்லாம் நடத்தியிருக்காங்க...’’ என்கிற கௌதமன், முக்கிய தலைவர்களின் வருகை பற்றி குறிப்பிட்டார். ‘‘1952ம் ஆண்டு ‘குடியரசுக் கட்சி’யின் கூட்டத்தில் கலந்துக்க வந்த டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியாரை சந்திக்கிறார். அப்ப பெரியாரும், அம்பேத்கரும் சேர்ந்து இந்தக் கோயிலுக்கு வந்திருக்காங்க. அவங்களுடன் சென்னை மேயரா முன்னாடி இருந்த சிவராஜும் வந்திருக்கார். இதன்பிறகு சிவராஜ் இந்தச் சபையின் தலைவரா இருந்தார்.

அம்பேத்கர் ரெண்டுமுறை வந்ததாக வரலாறு இருக்கு. ஆனா, பெரியார் நிறைய முறை வந்திருக்கார். 1956ல் தலாய் லாமா சென்னைக்கு வந்தப்ப இங்க வந்திருக்கார். அந்தப் புகைப்படமும் வச்சிருக்கோம். இந்தக் கோயில் ஆரம்பத்துல ஓஹோனு இருந்திருக்கு. பிறகு பொருளாதார சிக்கல் வரவும் மங்கியிருக்கு. அதாவது மில் இருந்தவரை நல்லா இருந்திருக்கு. பின்னி மில் மூடினதும் 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்தாங்க.

அங்க வேலை செய்தவர்கள் இங்க பொறுப்புல இருந்தாங்க. அவங்களால முக்கிய நிகழ்வுகள் சிறப்பா முன்னெடுக்கப்பட்டிருக்கு. அதுல எங்க அப்பா சுகுணனும் ஒருவர். அவரும் இந்தச் சங்கத்தின் தலைவரா இருந்தார். பௌத்தத்தின் மேல் இருந்த அதீத ஈடுபாட்டால் எங்க எல்லோருக்குமே பௌத்த பெயர்களே சூட்டினார். அவர் கடந்த ஜனவரி மாசம் தவறிட்டார்.

அவர் இறப்பதற்கு முன்னாடி, ‘கோயிலை இப்படியே விட்டுடாதீங்க. புத்த பிக்குகள் வந்து தங்குவதற்கு ஒரு இடம் கட்டுங்க’னு சொன்னார். ஏன்னா, கடந்த ஆண்டு வரை கோயில் ரொம்ப மோசமா சிதலமடைஞ்சு கிடந்துச்சு. அப்பாகிட்ட சரினு சொன்னோம். உடனே சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவஞானம் அய்யாவுடன் சேர்ந்து பேசினோம். அப்ப இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வரும் பாலாஜி என்பவர் மூலம் ஒரு நன்கொடையாளரை பார்த்தோம். அவர் ‘கோயிலுக்கு வரலாறு இருக்கா’னு கேட்டார். காட்டினோம். சிலைகளின் வரலாற்றை நான் சொன்னேன்.

பிறகு, பல நன்கொடையாளர்கள் நிதி கொடுத்தாங்க. குறிப்பா பாஸ்கர், பாலாஜி, குமார், ரவிச்சந்திரன்னு ஒரு பெரிய குழுவோடு சேர்ந்துதான் இந்தக் கோயிலை கடந்த ஆண்டு புனரமைச்சோம். இப்ப ஒவ்வொரு மாசமும் பௌர்ணமி விழா கொண்டாடுறோம். 150 பேருக்கு அன்னதானம் போடுறோம்.நிகழ்ச்சிகளை சென்னை பாடியநல்லூர்ல இருக்கிற பர்மா புத்தபிக்குகள் வந்து சிறப்பிச்சு தருவாங்க. அவங்களுக்கு இங்கே ஒரு கட்டடம் கட்டி தங்க வைக்க முயற்சிகள் செய்றோம். ஆனா, போதுமான இடம் இல்ல.

ஆரம்பத்துல வாங்கின அளவு இடம் இப்ப இல்ல. குறைவான இடம்தான் இருக்கு. அதுல  கோயில் இருக்கு. இதுக்குள்ள என்ன விஷயங்களை செய்யமுடியுமோ அதை செய்திட்டு வர்றோம்...’’ என்கிற கௌதமன் சில கோரிக்கைகளை முன்வைத்தார். ‘‘இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் பொருளாதார சிக்கல்ல ரொம்பப் பின்தங்கி இருக்கு. நூறு உறுப்பினர்கள்தான் இருக்காங்க. இதுல எல்லோரும் நன்கொடை அளிக்கிற நிலையில் இல்ல.

இது சிறுபான்மை கோயில். ஆனா, எல்லா மக்களும் வரலாம். யாரும் வணங்கலாம். இந்தக் கோயிலை சிறுபான்மை நல அமைப்பு எடுத்துக்கிட்டு மாதம் அன்னதானம் வழங்க மட்டும் உதவினால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறோம். தவிர, தமிழக அரசு அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை வைக்கப் போறதா சொல்லியிருக்காங்க. அதை அவர் ஆரம்பிச்ச இந்தச் சபை பக்கத்துல வைச்சால் இன்னும் நல்லாயிருக்கும். அவருடன் சிங்காரவேலருக்கும் இங்கே சிலை வைத்தால் இந்த பாரம்பரிய வரலாற்று இடம் மேலும் சிறப்படையும்...’’ என்கிறார்  கௌதமன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்