மாப்பிள்ளையானார் மாநில முதல்வர்!



ஆம். பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மானுக்குதான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. மாநில முதல்வர் ஒருவர் தன் பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொண்டிருப்பது சமீபத்தில் நடந்த அரிய நிகழ்வு.அரிய என்றால் நிஜமாகவே அபூர்வ நிகழ்வுதான். ஏனெனில் இவருக்கு நடைபெற்றது முதல் திருமணமல்ல. இரண்டாவது திருமணம். முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டுதான் 2வது திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார்.

கருத்து வேற்றுமை காரணமாக கணவனும் மனைவியும் பிரிவதும், விவாகரத்து பெறுவதும், பின்னர் மறுமணம் புரிந்து கொள்வதும் மெல்ல மெல்ல இயல்வாகி வரும் இந்த நேரத்தில் இந்திய மாநிலம் ஒன்றின் முதல்வர் மறுமணம் செய்துகொண்டிருப்பது உண்மையிலேயே முக்கியத்தும் வாய்ந்ததுதான்.பகவந்த் மானின் முன்னாள் மனைவியின் பெயர் இந்தர்பிரீத் கவுர். இந்த தம்பதிக்கு தில்ஷன் மான் என்ற மகனும் சீரத் கவுர் மான் என்ற மகளும் உள்ளனர். 2015ல் மான் - இந்தர்பிரீத் தம்பதி சட்டபூர்வமாக பிரிந்தனர். இப்போது பிள்ளைகள் இருவரும் தங்கள் தாயுடன் வசித்து வருகிறார்கள்.

முதல் திருமணம் முறிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணம், தேசிய அளவில் பேசும் பொருளாகியிருக்கிறது. மருத்துவராகப் பணிபுரியும் மணப்பெண்ணின் பெயர், குர்பிரீத் கவுர். இவரின் தந்தை பெயர் இந்தர்ஜித் சிங். தாயார் ராஜ் கவுர். இவர்களின் சொந்த ஊர் குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவா தாலுகாவில் உள்ள மதன்பூர்.

மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழட்டும் என வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகராக இருந்த பகவந்த் மான், மாநில முதல்வராக இந்த ஆண்டு தொடக்கத்தில் பொறுப்பேற்ற வரலாறு, சுவாரஸ்யமானது மட்டுமல்ல; இத்தருணத்தில் அறிந்து கொள்ள வேண்டிய சரித்திரமும் கூட.இந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவும், அரசியலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. திரையில் ஜொலித்தவர்களை அரசியல் பதவியில் அமரவைத்து முதன்முதலில் அழகு பார்த்தவர்கள் உலகளவில் இந்தியர்கள்தான். அப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரானார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான்.

1973ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்த பகவந்த் மானின் தந்தை மகிந்தர் சிங், அரசு ஆசிரியர், தாய் ஹர்பால் கவுர் இல்லத்தரசி. சங்ரூரில் உள்ள சுனாம் ஷஹீத் உதம் சிங் கல்லூரியில் படிக்கும்போது, நகைச்சுவை மற்றும் கவிதைப் போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல வெற்றிகளைச் சுவைத்தார். இந்த வெற்றிகளே அவரை தொழில்முறை நகைச்சுவைக் கலைஞராக்கியது.அவரது முதல் நகைச்சுவை மற்றும் நையாண்டி பாடல்கள் அடங்கிய ஒலிநாடா, 1992ம் ஆண்டு, ‘கோபி தி ஏ கச்சியே வியாபர்னே’ என்ற பெயரில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. என்ட்ரியே மாஸ் ஆக இருந்ததால் அடுத்தடுத்து நிற்க நேரம் இல்லாத அளவுக்கு பிசியானார். இதனால் அவரது படிப்பு பாதியிலேயே நின்றது.

1992 முதல் 2013 வரை 25 நகைச்சுவை ஆல்பங்களை வெளியிட்டுள்ள பகவந்த், ஐந்து பாடல்களின் டேப்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே சினிமா மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பஞ்சாபி திரையுலகின் பிரபல பாடகரான கரம்ஜித் அன்மோல், இவரது கல்லூரி நண்பர். அவர் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பகவந்துக்கு கிடைத்தது.

அரசியல் நையாண்டி நகைச்சுவைகள் மூலம் பிரபலமான பகவந்தை பஞ்சாபின் நகைச்சுவை மன்னராக மக்கள் கொண்டாடினார்கள். ‘ஜூக்னு’, ‘ஜண்டா சிங்’, ‘பீபோ புவா’, ‘பப்பு பாஸ்’... என பகவந்த் மான் ஏற்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள், அவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கின. ஜக்தார் ஜக்கி, ராணா ரன்பீர் ஆகியோருடன் சேர்ந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்துள்ள இவர், ‘ஜூக்னு மஸ்த் மஸ்த்’ போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘நோ லைஃப் வித் வைஃப்’ போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
பிசியான நகைச்சுவை நடிகராக வலம் வந்த பகவந்த், அரசியலுக்கு வந்தது தனிக்கதை.

தனது நகைச்சுவை ஒலி நாடாக்கள் மூலம், அரசியல் மற்றும் சமூகத்தின் பிரச்னைகளை நையாண்டி செய்து வந்த அவர், 2009 - 2010ல் செய்தித்தாள்களுக்கு சிறப்புக் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார்.அப்போது, ஃபாசில்கா பகுதியில் சிறுமிகளை வினோதமான நோய் தாக்கும் செய்தி அவரது கவனத்திற்கு வந்தது. அடுத்த நாளே நேரடியாக அந்த கிராமங்களுக்குச் சென்று பார்த்தார் பகவந்த். அப்போது, அந்தப் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் அவதிப்படுவதைத் தெரிந்து கொண்டார்.

உடனே தனது வெளிநாட்டு நண்பர்கள் சிலரது உதவியுடன், அப்பகுதியில் ஒரு கிணற்றை உருவாக்கினார். சமூக மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த சிலரைக் கொண்டு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து இந்த விஷயத்தை நாடறியச் செய்தார். சமூகம் சார்ந்த இத்தகைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, நல்ல தலைவராகவும் அடையாளம் காணப்பட்டார் பகவந்த்.

இந்த சூழ்நிலையில் ஜலந்தரில் நடந்த பிரபல விவசாய விஞ்ஞானி சர்தார் சிங் ஜோஹல் தலைமையிலான, ‘பஞ்சாபின் பிரச்சனைகள்’ குறித்த மாநாட்டில், பிரகாஷ் சிங் பாதலின் சகோதரர் மகனும், அப்போதைய நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதலைச் சந்தித்தார் பகவந்த். அப்போது, பகவந்த்தை தீவிர அரசியலில் நுழையுமாறு தூண்டினார் மன்பிரீத்.அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் குதித்தார் பகவந்த். அரசியலில் குதித்ததுமே, இனி நடிக்கப் போவதில்லை, முழு நேர அரசியல்தான் என முடிவு செய்தார்.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் ‘பஞ்சாப் மக்கள் கட்சி’யில் (பிபிபி) இணைந்தார். 2012 பிப்ரவரியில், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் லெஹ்ராகாகா தொகுதியில் பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீந்தர் கவுரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.இச்சூழலில் அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் மத்தியில்  பெரும் ஆதரவு கிடைத்தது. எனவே 2014ல் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களமிறங்கினார். சங்ரூர் மக்களவைத் தொகுதியில் அகாலி தள தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை தோற்கடித்தார்.  

அடுத்த சில ஆண்டுகளிலேயே பஞ்சாபின் அரசியல் சூழல் மாறியது. 2017 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சியும் பிரிந்தது. சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர, மூன்றாவது கட்சியில் இருந்து சங்ரூரில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்த ஒரே தலைவர் பகவந்த் மட்டுமே. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவராக பகவந்த் உருவெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு மே 8 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவு தலைவராக பகவந்த் மான் நியமிக்கப்பட்டார். ஆனால், சிறிது காலத்திலேயே தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அகாலி தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதால் வருத்தம் அடைந்து இந்த முடிவை அவர் எடுத்தார். ஆனாலும் தொடர்ந்து அக்கட்சியிலேயே செயல்பட்டு வந்தார்.

அந்த விசுவாசத்துக்கு கிடைத்த பரிசுதான் முதல்வர் வேட்பாளர் என்ற அடையாளம். ஆம். பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில மக்களிடமே ஒப்படைத்தார். போன் மூலம் நடைபெற்ற இந்த சர்வேயில் சுமார் 2.15 மில்லியன் பேர் கலந்து கொண்டு பதிலளித்தனர். அதில், 93%க்கும் அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது! இதனால் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பகவந்த்.தேர்தலில் வெற்றி பெற்று இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல்வராகவும் பதவியேற்றார். இதோ இப்போது மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். மணமக்களுக்கு வாழ்த்துகள்.

ஜான்சி