அடிப்பாவி..! இப்படி கோர்த்து விட்டிருக்காளா?!



‘‘நல்ல நடிகைன்னு நிரூபிக்க விரும்பறேன். அதுக்காகத்தான் ரொம்ப ரிஸ்க்கான கேரக்டர்களா செலக்ட் செய்யறேன்...’’ தனது டிரேட் மார்க் புன்னகையைச் சிந்துகிறார் சாய் பல்லவி.
வித்தியாசமான கதைகள், கடினமான கதாபாத்திரங்கள் என தனக்கென தனி பாணியிலும், பாதையிலும் செல்லும் நடிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர் சாய் பல்லவி. இதோ இப்போதும் நீதிமன்ற கதைக்களம் சார்ந்த ‘கார்கி’ படத்தின் ரிலீஸ் மும்முரத்தில் இருக்கிறார்.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.எந்த படத்துக்கும் நீங்க இவ்வளவு அதிகமா பேசினதோ அல்லது பேட்டி கொடுத்ததோ இல்ல... ஏன் ‘கார்கி’ ஸ்பெஷல்?

மத்த படங்கள்ல நான் இல்லைனாலும் புரமோஷன்கள், படத்தைப் பற்றிய பேச்சு எல்லாமே தானாகவே நடக்கும். நம்மைவிட பளிச்சென ஹீரோவே இருப்பார். ஆனால், ‘கார்கி’யைப் பொறுத்தவரை பேச வேண்டிய அல்லது படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கக் கூடிய ஒரே ஆள் நான்தான். நான்தான் இறங்கி வேலை செய்தாகணும். இந்தப் படத்திலே கலர்ஃபுல் பாடல்களோ, ஆக்‌ஷன் அதிரடியோ எதுவும் கிடையாது. நல்ல கதை, எனக்கும் நல்ல கதாபாத்திரம். அதனால்தான் நானே இறங்கி மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க நினைச்சேன்.

இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் கதை சொல்லும்போதே அவ்வளவு சுவாரஸ்யமா இருந்தது. எனக்கு இதிலே நடிக்க அவ்வளவு வாய்ப்பு இருக்கறதைப் புரிய வைச்சார்.
என் கூட வக்கீலா காளி வெங்கட். கிட்டத்தட்ட ஹீரோ அவர்தான். அவ்வளவு அருமையா செய்திருக்கார். படத்திலே தோழியா நடிச்சதுடன் தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா லட்சுமி ரொம்பப் பெரிய சப்போர்ட் செய்திருக்காங்க.

தெலுங்கு சினிமா உலகத்திலேயே தங்கிட்டீங்களே?

எனக்கு மொழி ஒரு தடையே கிடையாது. நான் நல்ல டான்சர்னு எல்லாருக்கும் தெரியும். அதை இனிமே நான் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலே இல்ல. ஆனா, நல்ல நடிகைனு நிரூபிச்சாகணும். அதுக்கு நான் நல்ல கதைகளையும், நல்ல கதாபாத்திரங்களையும் தேர்வு செய்யணும். அதனால் மொழி எதுவா இருந்தாலும் சரி, நான் எதிர்பார்க்கற நல்ல கதைகள் கிடைச்சா நிச்சயம் எல்லா மொழியிலும் நடிப்பேன். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அப்படியான கதைகள் அமைஞ்சது. நடிச்சேன்; நடிக்கறேன்.

இந்தப் படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் நீங்களே டப்பிங் பேசியிருக்கீங்களே..?

மிகப்பெரிய கிஃப்டா பார்க்கறேன். எந்த நடிகைக்கு அமையும் இப்படி ஒரு வாய்ப்பு! இந்த மூணு மொழிகளிலும், அதிலும் கதை, வசனம் சார்ந்த படத்தில் என்னால் டப்பிங் பேச முடியுதுன்னு நினைக்கும்போது பெருமையாகவும், என்னுடைய மிகப்பெரிய பலமாகவும் நினைக்கிறேன்.

யார் இந்த ‘கார்கி’?

மிடில்கிளாஸ் டீச்சர். தன் அப்பாவுக்கு ஒரு பிரச்னை. அதிலே இவளும் பாதிக்கப்படறா. அதைச் சார்ந்து நடக்குற நீதிமன்றக் கதைல எப்படி ‘கார்கி’ ஜெயித்தாள் என்பதுதான் கதைக்களம். நிச்சயம் ‘கார்கி’ ஒவ்வொரு மகளுக்குள்ளேயும், பெண்ணுக்குள்ளேயும் உள்ள தைரியத்தைத் தட்டும்.

என்றைக்காவது உங்களுக்குள் இருக்கும் மருத்துவரை மிஸ் செய்திருக்கீங்களா..?

சின்ன வயசிலே இருந்தே எனக்கு உலகமே டான்ஸ்தான். அதனுடைய இன்னொரு வெர்ஷன்தான் சினிமா ஆர்வம். எக்காலத்திலேயும் சினிமாவுக்குள் வந்ததை நினைச்சு வருத்தப்படவே மாட்டேன். ஆனா, எனக்குள்ள இருக்கற டாக்டரை நிறையவே மிஸ் பண்றேன். குறிப்பா கொரோனா காலத்திலே வீட்டிலே இருக்கும்போதுதான் ‘நான் ஒரு டாக்டர்... ஆனா, வீட்ல உட்கார்ந்துட்டு என்ன செய்யறேன்... எனக்கு அந்த வேலை தெரியும்... ஆனா, சும்மா உட்கார்ந்திருக்கோமே’ன்னு தோணுச்சு.

என்னுடைய ஃபிரண்ட்ஸ் சிலபேருக்கு மெடிக்கல் படிக்கிறப்ப பல சப்ஜெக்ட்டுகளை நான் கத்துக் கொடுத்து புரிய வைச்சிருக்கேன். அவங்களே இப்ப அதே சப்ஜெக்ட்டை கேட்கும்போது பேந்தப் பேந்த முழிக்கறேன்... இதுக்காக அழக்கூட செய்திருக்கேன்.என்ன செய்ய... நடிகையாகிட்டேன்... இதுக்கு சின்சியரா இருக்கணும்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். எனக்குள்ள இருந்த மருத்துவரை இப்படித்தான் மெளனமாக்கியிருக்கேன்.

உங்களுக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கறதா உங்க தங்கை பூஜா பல்லவி சொல்லியிருக்காங்களே..?

அடிப்பாவி! இப்படி கோர்த்துவிட்டிருக்காளா?! அந்த ஆசை இருக்கு. ஆனா, அதைவிட அதிகமா இயக்குநர் சேர் மேலே ஒரு பயமும் இருக்கு. எதுக்கு தேவையில்லாத பிரஷர்னு இப்ப தோணுது. இந்த எண்ணம் மாறுமா தெரியலை! பார்க்கலாம். கமல்ஹாசன் புரொடக்‌ஷன் - சிவகார்த்திகேயன் ஹீரோ... எப்படி இந்த ‘மாவீரன்’ மேஜிக்
நடந்துச்சு?

எனக்கே தெரியலை! உண்மையாகவே அது மேஜிக்தான். திடீர்னு ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொன்னாங்க. இதோ நான் ‘மாவீரன்’ பட நாயகி! சீக்கிரம் நிறைய தகவல்கள் அதிகாரபூர்வமா வரும். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியீடு பற்றி சொல்லுங்க?

திடீர்னு ஒரு நாள் பட டீம் ஒரு சின்ன பிரஸ் மீட்னு கூப்பிட்டாங்க. அப்ப நான் தெலுங்கு ‘விராட பர்வம்’ பட புரமோஷன்ல இருந்தேன். பிரஸ் மீட்னு போனா அது ஒரு வீடு. அப்பவே தெரிஞ்சிருச்சு அது சூர்யா சார் வீடுன்னு. செம ஷாக். போட்டோ ஒண்ணு எடுக்கலாம்னு சொல்றாங்க... திடீர்னு ஜோதிகா மேம் நிக்கிறாங்க... செம ஹேப்பி. ஃபேன் கேர்ள் மொமெண்ட்னு கூட சொல்லலாம். தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்கிறாங்க. நல்ல படங்களுக்கு சப்போர்ட் செய்யறாங்க. அந்த வகையிலே இந்தப் படத்த ரிலீஸ் செய்ய முன்வந்தது ‘கார்கி’ய இன்னொரு லெவலுக்குக் கொண்டு போயிடுச்சு. முதல் அறிவிப்பே அந்த குரூப் போட்டோ மூலமாதான் நடந்துச்சு. கூடவே ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ், அதுவே
நல்ல ஆரம்பம்.

‘கார்கி’ என்ன கொடுக்கப் போகிறாள்?

படம் முடிஞ்சு வெளியேறும் போது எல்லோரும் சோகமா போவாங்க அல்லது மனசு பாரமா போவாங்க, இல்லை சந்தோஷமா போவாங்க... இதெல்லாம் ஆடியன்ஸ் எமோஷன்ஸ். ஆனா, அதையெல்லாம் மீறி நிச்சயம் படத்தைப்பத்தி நாலு பேரைக் கலந்து பேச வைப்பா... பேசி பல விஷயங்களை தங்களுக்குள்ளேயே புரிஞ்சுக்க வைப்பா! அந்த நம்பிக்கை
எனக்கிருக்கு.  

ஷாலினி நியூட்டன்