பழங்களை தயிராக மாற்றி பருகலாம்!



பழங்களை ஜூசாக செய்து குடிக்கலாம் அல்லது அப்படியே நறுக்கி சாப்பிடலாம் அல்லது சாலட் ஆகவும் செய்து உண்ணலாம்.

தயிராக மாற்றி பருக / உண்ண முடியுமா?

முடியும் என செய்து காட்டுகிறார் அப்துல் மனாஃப். ஆம். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழங்களை தயிராக மாற்றி அதில் முசிலி மற்றும் ஐஸ்கிரீம் சேர்த்து ஒரு புது வித அனுபவத்தைக் கொடுத்து வருகிறார். சென்னை, காதர் நவாஸ்கான் சாலையில் ‘ப்ரூட்பே’ (Fruitbae) என்ற பெயரில் பழங்களுக்கான சிறப்பு பார் அமைத்துள்ளார்.‘‘பொதுவாக காபி மற்றும் டீக்குதான் சிறப்பு உணவகங்கள் உள்ளன. பழங்கள் சார்ந்த உணவுகளுக்கு தனிப்பட்ட உணவகங்கள் இல்லை என்பதால்தான் இதைத் தொடங்கினேன்...’’ புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அப்துல் மனாஃப்.

‘‘நான் ஐடி துறையைச் சேர்ந்தவன். கேரளா, கொச்சின்தான் பூர்வீகம். கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஐடி துறையில்தான் இருக்கிறேன். அந்த அனுபவத்தில், தனிப்பட்ட பிராண்ட் ஒன்றினை அமைக்க திட்டமிட்டேன். பொதுவாக ஐடி துறையில் இருப்பவர்கள் அவர்கள் தனியாக பிராஜெக்ட் ஒன்றை எடுத்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்குவார்கள். ஆனால், ஏற்கனவே செய்யும் வேலை என்பதால் எனக்கு அதையே மறுபடியும் செய்வதில் விருப்பமில்லை. மாறாக எனக்குப் பிடித்த உணவு சார்ந்து ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க நினைத்தேன்.

காரணம், நான் ஒரு ஃபுட்டி. எனக்கு பலதரப்பட்ட உணவுகளை சுவைக்கப் பிடிக்கும். அதன் அடிப்படையில்தான் ‘டேஸ்டி ஸ்பாட்ஸ்’ என்ற ஒரு பிராண்டை அமைத்தேன். இதில் நாங்கள் உணவு எல்லாம் சப்ளை செய்ய மாட்டோம். கேரளாவில் உள்ள சின்ன ரோட்டுக் கடைகளில் பரிமாறப்படும் சிறப்பு உணவுகளைத் தேடிப் பிடித்து அது குறித்த வீடியோ மற்றும் அங்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து எங்களின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வோம்.

எங்களுக்கு பெரிய உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்ய விருப்பமில்லை. அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருப்பார்கள். ஆனால், சாதாரண தெருவோரக் கடைகளில் உணவுகள் சுவையாகவும், தரமாகவும் இருந்தாலும், அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் எங்களின் டார்கெட் இவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களின் வளைத்தளத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், இதிலிருந்து வருமானம், முதலீடு, நிதியுதவி எல்லாம் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால் எங்களால் அதை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. கடந்த சில வருடங்களாக எங்கள் இணையதளம் ஆக்டிவாக இல்லை. இது என்னுடைய டிரீம் புராஜெக்ட். அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட ஆரம்பித்தேன்.

அப்போதுதான் எதற்காக நாம் மற்றவர்களுக்கு ‘இந்த சாப்பாட்டுக் கடைக்கு போங்க’ என்று சுட்டிக் காட்டவேண்டும்... நாமே ஓர் உணவகம் அமைத்து ‘எங்க கடையில் சாப்பிட வாங்க’ என்று அழைக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் 2018ம் ஆண்டு ‘ப்ரூட்பே’ உருவானது. மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே மூன்றே வருடங்களில் கேரளா, சென்னை, பெங்களூரூ ஆகிய மூன்று இடங்களையும் சேர்த்து 28 கிளைகளாக விரிந்திருக்கிறது.

ஆம். சென்னையில் ஒன்று, பெங்களூரில் மூன்று... கேரளாவில் 24... என 28 கிளைகள் உள்ளன. கேரளாவில் முதலில் 20 சதுர அடிக்கு ஒரு சிறிய அவுட்லெட்டாகத்தான் தொடங்கினோம். எங்களின் இந்த கான்செப்ட்டுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் இவ்வளவு கிளைகளை இந்தக் குறுகிய காலத்தில் நாங்க ஆரம்பிக்க காரணம்...’’ என உற்சாகமாகச் சொல்லும் அப்துல் மனாஃப், சென்னையில் தன் கிளையைத் தொடங்கியபோது அது சூடு பிடிக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று நினைத்தாராம்.

‘‘ஆனால், கடை திறந்த மூன்று மாதங்களிலேயே மக்கள் எங்களைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். எனவே, ஓஎம்ஆர், பெசன்ட் நகர் மற்றும் ஈசிஆர் சாலையில் மேலும் கிளைகள் திறக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். கடந்த வாரம்தான் பெங்களூரில் எங்களின் மூன்றாவது கிளையும் திறந்திருக்கிறோம்...’’ என்றவர் ப்ரூட்பே என்று பெயர் வைத்த காரணத்தையும் தெரிவித்தார்.

‘‘எங்கள் கடையின் கான்செப்ட் முழுக்க பழம் என்பதால் ப்ரூட் பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்து இந்த உணவகத்தை காபி மற்றும் டீ ஷாப்புக்கு ஒரு மாற்றாக அமைக்க வேண்டும் என விரும்பினோம். அதாவது ஸ்டார்பக்ஸ், காபிடே போன்ற கடைகளில் ஒரு கப் காபி வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் மீட்டிங் நடக்கும். அது பிசினஸ் மீட்டிங் மட்டுமல்ல நண்பர்கள் சந்திக்கும் ஜாயிண்டாகவும்தான் இருக்கின்றன.

அதுபோல்தான் எங்கள் கடை. காபி மட்டும்தான் குடிக்க வேண்டுமா என்ன..? ஐஸ்கிரீம், ஃப்ரூட் பவுல், ஸ்மூத்தீஸ், ஃபலூடா... போன்றவற்றைக் கூட நண்பர்களுடன் இணைந்து சாப்பிடலாமே என்ற எண்ணத்தில்தான் ஃப்ரூட்டுடன் ‘பே’ (bae) என்ற வார்த்தையை இணைத்தோம். பே... இன்றைய தலைமுறையினர் இதயத்துக்கு நெருக்கமான தோழன், தோழியர்களை அழைக்கும் விதம்...’’ என்றவர் தங்களின் உணவகத்தில் நண்பர் / நண்பியுடன் என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பற்றியும் விவரித்தார்.

‘‘எங்கள் கடையின் முக்கிய சிக்னேச்சர் டிஷ் ‘பெரி அப்’. நான் இந்த பெயர் மற்றும் இந்த ரெசிபியினை பதிவு செய்திருக்கிறேன். அதாவது இதை நாங்கள்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கிறோம் என்பதால் இந்த உணவையோ அதன் பெயரையோ மற்றவர்கள் யாரும் காபி அடித்து விற்கக்கூடாது. இதை முழுக்க முழுக்க பிளாக்பெரி, ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ்பெரி என பலவித பெரி பழங்கள் மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கிறோம். இவை எல்லாம் புளிப்புச் சுவை கொண்ட பழங்கள்.

நம்மூர் மக்களுக்கு இந்தப் சுவை புதுசு என்பதால் இந்த பழங்களைக் கொண்டு புதுவித டெசர்ட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தோம். அதே சமயம் அந்த டெசர்ட் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டோம்.
இதில் ஐஸ்கிரீம் இருந்தாலும், பெரும்பாலும் ஃப்ரூட் யோகர்ட்தான் (பழச்சுவையில் தயாரிக்கப்படும் தயிர்) அதிகம் இருக்கும்.

அடுத்து முசிலி (தானியங்கள், உலர்ந்த பழங்கள், விதைகள், ஓட்ஸ், நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கிய உணவு) மற்றும் பெரி பழங்களின் சாஸ்.இவை அனைத்தையும் லேயர் லேயராக அடுக்கி டம்ளர் போன்ற குடுவையில் தருகிறோம்.

அந்த டம்ளரின் கீழ்ப் பகுதி மூடப்பட்டு இருக்காது. இதனை அப்படியே மேலே உயர்த்தினால் உள்ளே லேயராக இருக்கும் அனைத்தும் அழகாக தட்டில் வழிந்து வரும். அனைத்தையும் மிக்ஸ் செய்து அப்படியே சாப்பிட வேண்டும். புளிப்பு, இனிப்பு மற்றும் முசிலியின் மொறுமொறுப்புத் தன்மையைச் சேர்த்து சாப்பிடும் போது சுவை வித்தியாசமாக இருக்கும்.  

அடுத்து ஃப்ரூட் ஷாட்ஸ். பொதுவாக பழச்சாறுகள் என்றால் அதில் பால், தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்ந்துதான் தருவார்கள். இந்த ஷாட்ஸ் அப்படி இல்லை. மெல்லிய நீளமான டம்ளரில் பழங்களை அப்படியே பிழிந்து சாறு எடுத்து... அதில் வேறு எதுவும் சேர்க்காமல் அப்படியே கொடுக்கிறோம்.

இதில் திராட்சை, அன்னாசிப்பழம், ஆரஞ்ஜ் மற்றும் தர்பூசணி... என அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழங்களின் சாறுகளை வழங்கி வருகிறோம். பஃபே-இது முழுக்க முழுக்க பெரிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டெசர்ட். இதில் ஐஸ்கிரீம் மற்றும் முசிலி இருக்காது. மாறாக, பெரியின் யோகர்ட், பெரி சாஸ் மற்றும் நறுக்கிய பழத்துண்டுகளை லேயராக அளிக்கிறோம்.

அதன்பிறகு ஸ்மூத்தி பவுல். பழங்களில் ஸ்மூத்தி தயாரித்து அதனுடன் மற்ற பழங்களைப் பொடியாக நறுக்கி உடன் விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து அழகாக அலங்கரித்து சின்ன கிண்ணத்தில் வழங்கப்படும். அடுத்து எங்களின் மற்றொரு ஃபேமஸ் டிஷ் பலூடா. பலூடா என்றால் பழங்கள், ஐஸ்கிரீம், சேரியா, சப்ஜா விதைகள்... என்றுதான் கிடைக்கும்.

அதை நாங்கள் கொஞ்சம் இண்டியனைஸ் செய்திருக்கிறோம். பெரிய ஹோட்டல்களில் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமுடன் குலாப் ஜாமூன் அல்லது கேரட் அல்வா சேர்த்துத் தருவார்கள். அதையே நாங்கள் பலூடா ஸ்டைலில் தருகிறோம். இதில் இளநீர், காபி, கேரமல் பனானா, ஷாஹி துக்டா... என 13 ஃபிளேவர்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.

இவை தவிர ஹனிகேக், ஐஸ்கிரீம் சண்டே, மில்க் ஷேக்ஸ், பழச்சாறுகள், ப்ரூட் காக்டெயில், சாண்ட்விச், டீ வகைகளும் உண்டு.எங்களின் மெயின் கிச்சன் கேரளாவில்தான் உள்ளது. ஸ்ட்ராபெரி பழங்களை இந்தியாவில் இருந்தும் மற்ற பெரிகளை கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருந்தும் டன் கணக்கில் இறக்குமதி செய்கிறோம். இவை அனைத்தும் கேரளாவில் கோல்ட் ஸ்டோரேஜில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கிறோம். அதேபோல் ஹனிகேக் தினமும் கேரளாவில் தயாரித்து இரவு சென்னை மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கிறோம்.

எங்களுக்கு ஃபிரான்சைஸ் கொடுக்கும் எண்ணம் இல்லை. எல்லா கிளைகளையும் எங்களின் நிறுவனம் மட்டுமே ஆபரேட் செய்யும். சுவை மற்றும் தரம் மாறக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருக்கிறோம். பெங்களூர், சென்னையைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை... என தமிழகம் முழுக்க பல கிளைகளை நிறுவும் எண்ணம் உள்ளது. அதன்பிறகு துபாய் மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகள் ஆரம்பிக்க இருக்கிறோம்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் அப்துல் மனாஃப்.

செய்தி:ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்