விரைவில் வருகிறது பப்ஜியையே பின்னுக்குத் தள்ளிய புதுகேம்!



‘கேட்கவே ஆனந்தமா இருக்கு’ என்னும் பப்ஜி ஹேட்டர்களின் குரல் கேட்கிறது. ‘என்னது? வாய்ப்பே இல்லை!’ என அடித்துச் சொல்லும் பப்ஜி லவ்வர்களின் குரலும் சேர்ந்தே ஒலிக்கிறது. ஆம்; ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ என்னும் புது மொபைல் கேம்தான் இப்போது உலக அளவில் அதிகம் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி விளையாடும் போர் கேம்தான் இதுவும் (Multiplayer online battle arena (MOBA)).

டிமி ஸ்டூடியோ குரூப் (TiMi Studio Group) உருவாக்கத்தில் இந்த கேமையும் வெளியிட்டிருப்பது ‘பப்ஜி’ கேம் வெளியிட்டு பலரின் சாபத்தை வாங்கிய டென்சென்ட்(Tencent Games) நிறுவனம்தான்!அதுமட்டுமல்ல; ‘கால் ஆஃப் டியூட்டி’ (Call of Duty), ‘ஃபோர்ட்நைட்’ (Fortnite), ‘ரிங் ஆஃப் எலிசியம்’ (Ring of Elysium), ‘லீக் ஆஃப் லெஜெண்ட்ஸ்’ (League of legends) என உலகப் பிரசித்தி பெற்ற அத்தனை கேம்களையும் கூட வெளியிட்டது இந்த கரகாட்ட கோஷ்டிதான்.

சரி, உண்மையாகவே பப்ஜியைப் பின்னுக்குத் தள்ளிடுச்சா?

ஆமா. குறிப்பாக வருமான வகையில் உலகின் டாப் கேம் ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’தான். இந்தியாவை இன்னமும் தாக்காத இந்த கேம் புயல் மாதந்தோறும் சுமார் 200 மில்லியன் பிளேயர்களால் விளையாடப்படுகிறது. தினமும் 80 மில்லியன் பிளேயர்கள் இதில் பொழுதைக் கழிக்கிறார்கள்.

மொபைல் கேம்களுக்கு என செலவிடும் தொகை மற்றும் மார்க்கெட் நிலவரம் என வருடந்தோறும் சென்சார் டவர் கண்காணித்து டேட்டாக்களைக் கொடுக்கும். இதனை ஆப் ஸ்டோர் ஆப்டிமைசேஷன் என்பர். இதனை மொபைல் அப்ளிகேஷன்கள் மார்க்கெட் எனவும் அழைப்பதுண்டு. இந்த சென்சார் டவர் சமீபத்தில் அதிக வருமானம் ஈட்டிய 10 மொபைல் கேம்களின் பட்டியலை வெளியிட்டதில்தான் இந்த ஆச்சர்யம் காத்திருந்தது!

உலக அளவில் சுமார் 44.1 பில்லியன் பணத்தை இணையவாசிகள் மொபைல் அப்ளிகேஷன்களில் தொலைத்துள்ளனர். அதில் மொபைல் கேம்களில் தொலைத்தது 25.6 பில்லியன். இதில் கூகுள் பிளே ஸ்டோர் கேமர்கள் செலவிட்டது 18.3 பில்லியன். போலவே இதில் ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ 1.4 பில்லியன் வருமானமும், அடுத்த இடத்தில் பப்ஜி மொபைல் கேம் 1.1 பில்லியன் வருமானமும் ஈட்டியிருக்கிறது. மூன்றாவது இடத்தில் ’ஜென்ஷின் இம்பாக்ட்’ கேம், நான்காம் இடத்தில் ‘கேண்டி கிரஷ் சாகா’ கேம் இருக்கின்றன.

பப்ஜிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் இந்த ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ கேமில்?

இதில் இருக்கும் கலர்ஃபுல் போர்க்களம்தான். பப்ஜியைப் பொறுத்தவரை நான்கு பேர், ரெண்டு பேர் அல்லது ஒருவர் என உள்ளே இறங்கியவுடன் போருக்குச் சென்று ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்பர். ஆனால், ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ கேமில் ஒவ்வொரு பிளேயரும் ராஜா, ராணி என தனக்கென தனி ராஜ்ஜியம் அமைத்துக்கொள்ளலாம். அரண்மனை, போர்வீரர்கள், கலர்ஃபுல் போர் உடைகள், நமக்கென தனி நகரம், மக்கள், போர்வீரர்களாக டிராகன், அரக்கர்கள்... என விதவிதமாக கண்கட்டி வித்தை  காட்டும்.

கிட்டத்தட்ட உள்ளே நுழைந்தவுடன் நீ ராஜா அல்லது ராணி, நானும் ராஜா அல்லது ராணி. நாமெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமா ஒரு கிளானில் இருப்போம். பஞ்சாயத்து என்று வந்தால் எனக்கு நீ உதவு, உனக்கு நான் உதவுவேன். சில சமயம் தனியா போர், சில சமயம் கூட்டமா சேர்ந்து கிளான் டூ கிளான் போர், ஓகேவா என்னும் ரகம்தான் இந்த ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’.
இந்த கேமில் ரூம்கள் அமைத்து நண்பர்களையும் அழைத்து விளையாடலாம். டிராஃப்ட் ரூம் என்ற ஒன்றை ஆரம்பித்து நண்பர்களை அழைத்து பேசவும் செய்யலாம். போர் மூண்டால் அதே நண்பர்களிடம் உதவி கேட்டு போர்வீரர்களைப் பெற்றும் எதிரிகள் மேல் படையெடுக்கலாம்.

கிட்டத்தட்ட ‘கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்’ என பப்ஜிக்கு முன் மிகப் பிரபலமாக இருந்த மொபைல் அரேனா கேம் ஸ்டைல்தான் இந்த ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’. இதன் இன்னொரு ஸ்பெஷல் இதில் இருக்கும் கலர்ஃபுல் மேப்ஸ், போர்கள் உட்பட ராஜா கேரக்டர் மட்டுமல்லாமல் பெண் பிளேயர்களைக் கவரும் விதமாக ராணிகள் கேரக்டர்களும் இருப்பதே! அதனால்தான் இந்த கேம் பெண்களிடமும் பிரபலமாகக் காரணம்.

பப்ஜியிலும் பெண் கேரக்டர்களான சாரா, ஆன்னா என இருப்பினும் ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ கேமில் மொத்தம் 22 கேரக்டர்கள்; அதில் 9 கேரக்டர்கள் பெண் அரசிகள் கேரக்டர்களாக உள்ளன. தற்சமயம் சீனா வெர்ஷனாக மட்டுமே உலகம் முழுக்க விளையாடப்படும் இந்த கேம் வேறு வேறு நாட்டில் வேறு வேறு பெயர்களில் கிடைக்கின்றன. ‘அரேனா ஆஃப் வேலர்’, ‘கிங்’ஸ் குளோரி’... என பல பெயர்கள் உண்டு. இன்னமும் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்காத நிலையில் ‘ஹானர் ஆஃப் கிங்ஸ்’ முழுக்க முழுக்க குளோபல் வெர்ஷனாக இந்தாண்டு இறுதியில் ஆண்ட்ராய்டு, ஐபோன்கள் என இரு மொபைல்களுக்குமாக வெளியாகவிருக்கிறது.

எந்த கேமைக் கொடுத்தாலும் ஒரு கை பார்க்கும் இந்தியாவிற்கு இந்த கேமை எப்படி சீனாவுக்குக் கொடுப்பது..? ஏனெனில் உள்ளே உங்கள் பூர்வீகம் எதுவானாலும் இருக்கலாம். எனவே, வெளியே பெயர் ‘மேட் இன் இந்தியா’ என இருக்க வேண்டும் என்பதில் நம் ஒன்றிய அரசு ஒரு முடிவோடு இருக்கிறது.என்னவோ போங்க ஜி... விளையாட்டு வினையாகி யாரும் உயிரை விடாமல் இருந்தா சரிதான்.

ஷாலினி நியூட்டன்