உலகின் வயதான பெண் சைக்கிளிஸ்ட்!



சுமார் 65 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாள் லினியா சல்வோ. அப்போது லினியாவுக்கு வயது 5. எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட, அன்றிலிருந்து லினியா சைக்கிளைத் தொடவில்லை. காலங்கள் ஓடுகின்றன. நன்றாகப் படித்து முனைவர் பட்டத்தைப் பெறுகிறார். பிசினஸிலும் சாதிக்கிறார். திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்து, குடும்பப் பெண்மணியாகவே மாறிவிட்டார் லினியா.

50 வயதைத் தாண்டிய லினியா, ‘பதின்பருவத்தில் சைக்கிளில் அமெரிக்காவை வலம் வந்தவர்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை ஒரு நாளிதழில் வாசித்தார். மீண்டும் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். சமீபத்தில் சைக்கிளில் அமெரிக்காவைச் சுற்றிவந்து சாதனை புரிந்திருக்கிறார் லினியா. 3,300 கிலோ மீட்டர் தூரத்தை 43 நாட்களில் கடந்துவிட்டார். இதன்மூலம் அமெரிக்காவை சைக்கிளில் வலம் வந்த அதிக வயதான பெண், உலகின் வயதான பெண் சைக்கிளிஸ்ட்...என பல பெருமைகளைத் தன்வசமாக்கிவிட்ட லினியாவின்
வயது 72.

த.சக்திவேல்