Must Watch



த பிரின்சஸ்

ஒரு நல்ல, தரமான ஆக்‌ஷன் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான சாய்ஸ், ‘த பிரின்சஸ்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். பிரமாண்டமான அரண்மனையையும், அதைச் சுற்றிய பகுதிகளையும் ஆட்சி செய்து வரும் அரசருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மக்களால் இளவரசி என்று அன்புடன் அழைக்கப்படுகிறாள் மூத்த மகள். தற்காப்புக் கலைகளில் கெட்டிக்காரியாக வளர்கிறாள் இளவரசி. தனக்கு ஆண் வாரிசு இல்லை. தான், இறந்த பிறகு ராஜ்ஜியத்தைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் வேண்டும். அதற்காக தனது மகளை ஜூலியஸ் என்பவனுக்கு கட்டிக்கொடுக்க திட்டமிடுகிறார் ராஜா.

ஜூலியஸ் மோசமானவன் என்பதை அறிந்த இளவரசி திருமணத்தை நிறுத்திவிடுகிறாள். அரண்மனையை அபகரிக்கும் நோக்கில் இருந்த ஜூலியஸ் பெரும் படையுடன் வந்து இளவரசியையும், அவளது குடும்பத்தையும் சிறைப் பிடிக்கிறான். மக்களைத் தாக்குகிறான். அரண்மனையைக் கைப்பற்றுகிறான்.

இந்நிலையில் இளவரசி எப்படி இழந்த ராஜ்ஜியத்தை மீட்கிறாள்... தனி ஒரு மனுஷியாக எப்படி ஜூலியஸின் படையை எதிர்கொள்கிறாள்... என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. இளவரசியாக ஜோயி கிங் ஆக்‌ஷனில் விளையாடியிருக்கிறார். எங்கேயும் நிற்காமல் ஜெட் வேகத்தில் செல்லும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் லீ- வான்  கியட்.

பக

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மலையாளப்படம், ‘பக’. ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. கேரளாவில் உள்ள ஒரு நதியை ஒட்டிய ஒரு ஊர். அந்த நதியில் அடிக்கடி ஒரு பிணம் கிடைக்கும். அப்படி பிணம் கிடைக்கும்போது கடமைக்காக காவல்துறை அங்கே வரும். குற்றவாளியைக் கண்டுபிடிக்க எந்த முனைப்பும் காட்டாது. அதனால் இந்தச் சம்பவம் ஒரு தொடர்கதை போல தொடர்கிறது.

இந்நிலையில் அங்கே வசித்துவரும் ஜானியின் குடும்பத்துக்கும், ஜோயியின் குடும்பத்துக்கும் தீராத பகை. இரு பக்கமுமே ஆணாதிக்கவாதிகளாக இருக்கின்றனர். ஜோயியின் குடும்பத்தைச் சேர்ந்தவரை ஜானியோ அல்லது அவனைச் சாந்தவர்களோ கொலை செய்து நதியில் வீசுவதும், ஜானியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஜோயியோ அல்லது அவனது ஆட்களோ சேர்ந்து கொலை செய்து நதியில் வீசுவதும் வழக்கம்.  

இந்த தீராத பகை தீர்ந்ததா... என்பதே எதார்த்த திரைக்கதை. கேரளாவின் இன்னொரு முகத்தை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம்.
படத்தின் இயக்குநர் நிதின் லூகோஸ்.

அந்தே சுந்தரனிகி

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘அந்தே சுந்தரனிகி’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம். அக்மார்க் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் சுந்தர். நடிகனாக வேண்டும் என்ற அவனது சிறு வயது கனவு, பள்ளிப்பருவத்திலேயே உடைந்து போகிறது.

அமெரிக்கா போக வேண்டும் என்ற ஆசையும் தகர்கிறது. தவிர, வீட்டில் அவனுக்குப் பல கட்டுப்பாடுகள். ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்துவருகிறான். இன்னொரு பக்கம் அக்மார்க் கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவள் லீலா. குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞராக இருக்கிறாள். லீலாவும், சுந்தரும் பள்ளிப்பருவத்து நண்பர்கள்.

சுந்தருக்கு லீலாவின் மீது காதல். அவள் வேறு ஒருவனைக் காதலிப்பதால் சுந்தர் தன் காதலைச் சொல்வதில்லை. இந்நிலையில் காதல் முறிவு ஏற்பட்டு தனியாக இருக்கிறாள் லீலா. அப்போது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான் சுந்தர். லீலாவுக்கு சுந்தர் மீது காதல் மலர்கிறது. பிராமணப் பையனுக்கும், கிறிஸ்துவப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணத்தில் முடிந்ததா என்பதே திரைக்கதை. சுந்தராக நானியும், லீலாவாக நஸ்ரியாவும் பட்டையைக் கிளப்பியிருக்கின்றனர். நல்லதொரு ரொமாண்டிக் காமெடி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.