அரண்மனை குடும்பம்-27



குகைக்குள் அவர்கள் எல்லோரும் உள்ளே ஓடி அடங்கி விட்ட நிலையில், மேலே ட்ரோனும் சில நொடிகளில் கடந்து விட்டதில், அதன் சப்தம் அடங்கிவிட, அதன்பின் மெல்ல வெளியே வந்தார் வாத்தியார்! போதிமுத்துவும், ஜல்லியும் கூட பின்னாலேயே வெளியில் வந்தனர்.“எங்கடா அந்த பரட்டா... எட்றா..?” என்றார் பலத்த குரலில்.
ஜல்லியும் பாலித்தீன் பையை அவர் முன் ஒரு பாறை மேல் வைத்தான். அப்படியே சாராயக் கேனையும் வைத்தான். வாத்தியார் வேகமாய் போய் ஓடை நீரில் கைகால் கழுவிக் கொண்டு அப்படியே முகத்திலும் தண்ணீரை வாரி அடித்துக் கொண்டு, தாடி, மீசையெல்லாம் தண்ணீர் ஒழுக்குடன் திரும்பி வந்தார்.

ஜல்லி தன் தலைப்பாகைத் துண்டை துடைத்துக் கொள்வதற்காக பதவிசாக நீட்டினான். வாத்தியாரும் முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டு அப்படியே கசங்கலாய் ஒரு பந்து போல துண்டை ஜல்லி வசம் தந்துவிட்டு, நல்ல பசிக்காரன் போல பரோட்டா பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கினார்.

போதிமுத்துவுக்கு அக்காட்சி நாக்கில் எச்சில் ஊற வைத்தது.பொட்டலத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள் ஏராளமான கேள்விகள். அப்போது ஜல்லி வேகமாகப் போய் குகைக்குள் நுழைந்து ஒரு செம்புச் சொம்பை எடுத்து வந்து ஓடிப்போய் ஓடை நீரை முகந்து வந்து அள்ளி விழுங்கத் தொடங்கி விட்ட அவர் அருகில் வைத்துவிட்டு போதி முத்துவைப் பார்த்தான்.

போதி பதிலுக்கு, தனக்கும் நல்ல பசி என்பதை வயிற்றைத் தொட்டுக் காட்டினான். பதிலுக்கு ஜல்லியும் அமைதியாக இரு என்பது போல ஜாடை காட்டினான்.வாத்தியாரோ நாலு விழுங்கில் மொத்த பரோட்டாவையும் காலி செய்துவிட்டு, செம்புச் சொம்பு தண்ணீரை நன்கு உயர்த்தி அது வாயினுள் நிரம்ப விழும்படிச் செய்து குடித்தார். பின் ஈரமீசையை ஒரு நீவு நீவிவிட்டுக் கொண்டார். அதற்குப் பிறகு செம்புச் சொம்பில் கேன் சாராயத்தை ஊற்றி அதையும் அதேபோல குடித்து முடித்து திரும்பவும் மீசையை நீவி விட்டுக் கொண்டார்.

போதிமுத்துவுக்கு அவர் செயல்பாடு எல்லாமே கொஞ்சம் முரட்டுத் தனமாகவே தெரிந்தது.‘ஆவ்வ்..!’  என்கிற ஒரு ஏப்ப சப்தம் அவரிடம் வெளிப்பட்ட நிலையில் பாறை ஒன்றின் மேல் போய் அமர்ந்தார். அமர்ந்த நிலை குக்குடாசனம் போல் மாறியது.மார்பில் செருமல்... திரும்ப ஏப்பம்..!“உம் அப்புறம்..?” என்றார் ஜல்லியை நோக்கி. அப்போது திரும்ப ட்ரோன் பறந்து வரும் சப்தம்.

இம்முறை கோபம் வந்தது வாத்தியாருக்கு.“தூத்தேறி பாஞ்சேத்..! இதே பொழப்பா போச்சு இந்த காட்டு போலீசுக்கு... முன்ன காடு முழுக்க நடந்து திரிஞ்சு எல்லாத்தையும் கண்காணிச்சாங்க. இப்ப இப்படி ஒரு இரும்புப் பூச்சியைப் பறக்கவிட்டு வேவு பாக்கறானுங்க. இதே பொழப்பா போச்சு இவனுங்களுக்கு...”என்றபடியே திரும்பவும் குகை நோக்கி ஓடி உள்ளே சுமாரான இருட்டில் ஒரு சாக்கு விரிக்கப்பட்டுக் கிடந்த இடத்தில் அப்படியே போய் காலை விரித்தபடி அமர்ந்து கொண்டார்.

ஜல்லியும், போதிமுத்துவும் அவர்முன் வந்து மௌனமாய் நின்றனர். உள்ளே அக்னி குண்டத்தில் இருந்து மிகக் குறைந்த அளவில் புகையானது கசிந்தபடியே இருந்தது. அதன் நெடி ஒரு மாதிரி இருந்தது. ஆனால், அது நிச்சயம் நல்ல வாசனை எல்லாம் இல்லை.“என்னடா... நான் இப்ப என்ன பண்ணணும்கறே?” என்று ஆரம்பிக்கும்போதே பலமாக ஒரு ஏப்பமும் சேர்ந்து வெளிப்பட்டது.“ஆசானே..! அதான்... யார் அந்த கொலை செய்யச் சொன்னவன்... யாரை கொலை செய்ய குறிவெச்சான்னு தெரியணும்...”“தெரிஞ்சு என்னடா பண்ணப் போறே..?”“அதை நாம முடிச்சுக் கொடுத்தா மொரடா ஒரு தொகை கிடைக்கும்ல..?”“மொரடான்னா..?”

“கோடில...”“கோடிலயா..?” “அதான் ராத்திரியே தெளிவா சொன்னேனே... ஆசானே... போதிக்கே அஞ்சு லட்சம் தரப் பாத்துருக்கான்...”“சரிடா... நான் ஒரு மைய பூசிவிட்டு டப்பி ஒண்ணத் தாரேன். அதை மட்டும் நீ திறந்துடவே கூடாது... என்ன..?”“சரிங்க...”“இங்க மண்டைய ஆட்டி விட்டு, அப்பால டப்பியைத் திறந்தேன்னு வை...” வாத்தியார் இடைவெளி விட்டார். ஜல்லியும் கூர்மையாகப் பார்த்தான்.“டப்பிக்குள்ளார நான் அடக்கி வெச்சிருக்கற ஆங்காரக் கொரளி, ஓடியே போயிடும். அப்பால நான் புதுசா ஒரு கொரளியை வாங்க கேரளா போவணும். இல்லாட்டி நம்ப காக்காயன் சுடுகாட்டுக்குப் போய், நான் சத்ரு பூசை பண்ணி அங்க எதாச்சும் அலைஞ்சு கிட்டிருந்தா அதுல ஒண்ணைப் புடிக்கணும்... அதுக்கு பலகாலம் ஆகும்.

ஆகையால திறக்கவே திறக்காம தலைல தலைப்பாக்குள்ள டப்பியை வெச்சிக்க... பெறவு உனக்கு கொரளி அந்த கொலை செய்யச் சொன்னவன் வீட்டை காட்டிக் கொடுக்கும். அப்பால உன் சாமர்த்யம்...”“ஆசானே... இப்படிச் சொன்னா எப்படி ஆசானே..? அவன் நம்ம பேச்சைக் கேட்டு நடக்கணும். இந்த மாதிரி ஆளுங்க நல்ல காசு பணம் உள்ளவங்களா, நெஞ்சழுத்தம் உள்ளவங்களாதான் இருக்கணும்... அப்படிப்பட்டவன் என் பேச்சைக் கேட்பானா ஆசானே..?”

“ஆங்காரக் கொரளி உன் தலைப்பாக்குள்ள இருக்கற வரைல நீ பேசறதுதாண்டா பேச்சு. நீ ஒருத்தன பார்த்து அவுத்து போட்டுட்டு நில்லுன்னா மறுபேச்சு பேசாம நிப்பான். ஆகையால உனக்கு சாதகமாவே எல்லாம் முடியும்...”“இந்த விசயத்துல நீங்க கூட வந்தா நல்லா இருக்கும் வாத்யரே...”“அட போடா... நீ போய் முதல்ல ஆளைத் தெரிஞ்சிகிட்டு வா. அப்புறமா நாம் அவனை வெச்சி செய்வோம்...”“போதிய கூட்டிக்கிட்டு போவட்டுமா... ஆசானே..?”“நெத்தியிலயும், கண்டாங்குழியிலயும் நான் கொடுக்கற மைய வெச்சிக்க.

இவனுக்கும் வெச்சிவிடு. அதோட எங்க வேணா போய்வாங்க. உனக்கு ஒரு மீட்டருக்குள்ளார யார் நின்னாலும் அவுக மன ஓட்டம் உனக்குத் தெரியவந்திடும். பாத்துரா... எங்க போனாலும் அந்தி சந்திக்கு இருட்டுறதுக்கு முன்னால நீ இங்க வந்துடணும். ஆங்காரனுக்கு நிதமும் படையல் இடணும். இல்லாட்டி நம்ம ரத்தத்தைக் குடிக்க அவன் என்ன வேணா செய்யத் தொடங்கிடுவான்...”என்றபடியே பக்கவாட்டில் இருந்த ஒரு மரப்பெட்டியைத் திறந்து, அதனுள் தந்தத்தால் செய்தது போன்ற ஒரு சிறிய டப்பியை எடுத்து நெற்றி மேல் வைத்து எதையோ மந்திரம் போல் சொல்லி தியானித்து விட்டு ஜல்லிவசம் தந்தார் மாரப்ப வாத்தியார்!

பின் அருகில் வரச் சொல்லி, ஒரு கொட்டாங்கச்சிக்குள் கட்டை விரலை விட்டு மையை எடுத்து அதை இருவர் புருவத்தின் மேலும் பூசிவிட்டவர், பின்பக்கம் திரும்பச் சொல்லி கழுத்துக்கு நடுவில் ரேகைப்பதிவு போல் வைத்து “கௌம்பு...” என்றார்.உடனேயே காலில் விழுந்து வணங்கினான் ஜல்லி. அவன் வணங்குவதைப் பார்த்து போதிமுத்துவும் வணங்கினான். பிறகு பரிவாய் பார்த்தபடியே புறப்பட்டனர்.

அவர்கள் விலகவுமே அப்படியே உடம்பை மல்லாக்கக் கிடத்தி, சாராய போதையோடு வாடை வெளிக் கிளம்ப குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டார் வாத்தியார்.
இருவரும் செம்மநத்தம் செல்லும் பாதை பிடித்து நடக்கத் தொடங்கினர்.“ஜல்லி... தெகிரியமா நாம வெளிய திரியலாமா? அந்த போலீசுகாரன் பாத்தான்னு வைய்யி... புடிக்க மாட்டானா..?” என்று கேட்டான் போதிமுத்து.“அதெல்லாம் இந்த டப்பியும், மையும் இருக்கறவரை ஒண்ணும் புடுங்க முடியாது. நீ தெகிரியமா வா. முதல்ல நாம பரோட்டா கடைல பசியாத்திக்குவோம். மத்ததெல்லாம் பொறவுதான்...”“பரோட்டாவுக்கு உன்கிட்ட காசு இருக்கா?”

“அது எதுக்கு... டப்பி தலைல இருக்குதுல்ல... ஆங்காரன் பாத்துக்கிடுவான்...”
“ஆமா... இவ்வளவு வித்தை தெரிஞ்ச வாத்யார் அந்த பறந்து வர்ற மெசினுக்கு மட்டும் ஏன் பயந்து ஓடி ஒளியறாரு..?”
“அது மெசினு... அதுல ஏது ரத்தம் சதை..?”“அப்ப ரத்தமும் சதையும் இருக்கறவங்களைத்தான் ஆட்டிப் படைக்க முடியுமா?”
“ஆமா... மூச்சுக் காத்தும் முக்கியம்..!”
“அப்படின்னா..?”

“எல்லாத்தையும் நான் ஒவ்வொண்ணா சொல்றேன். எனக்கே கொஞ்சம்தான் இந்த கொரளி வித்தை எல்லாம் தெரியும். வாத்யார்தான் அதுல கிங்கு...”
“அப்படி அவர் என்ன பண்ணுவாரு..?”“கதி கலங்க வெச்சிடுவாரு... ஒரு தடவை என் கண்ணு முன்ன ஒத்த காட்டுயானையை நூறு யானையா காட்டினாரு! அதே போலதான் ஒத்த பாம்பை நூறு பாம்பா காட்றதுங்கறதும்...”

“இதெல்லாம் நெசமா..?”
“அம்புட்டும் கண்கட்டு...”
“அப்படின்னா டூப்புதானே..?”
“டூப்பு இல்ல... அது ஒரு சாமர்த்யம்...”

இருவரும் பேசிக்கொண்டே ஒத்தையடிப் பாதை போன்ற வளைவான மலைத்தளத்தில் நடந்தனர். சில இடங்களில் சில மிருகங்கள் மாமிச பட்சிணிகளுக்கு இரையானதில் அவற்றின் எலும்புகள் கண்ணில் பட்டன. கரடி ஒன்றும் கண்ணில் பட்டது. ஆனால், அது இவர்களைப் பார்த்து விட்டு துரத்தாமல் வேறு பக்கமாகவே போய்விட்டது.“சல்லி... அப்ப நாம இன்னிக்கே அந்த கொலை செய்யச் சொன்னவனைக் கண்டுபிடிச்சிடலாமா..?”“தெரியலை... ஆங்காரன் வழிகாட்டுவான்... நீ தொண தொணக்காம வா...”என்று ஜல்லி, போதிமுத்துவை அடக்கி இழுத்துக்கொண்டு நடந்தான்.

அரண்மனை பங்களாவில் ரத்தியையும், தியாவையும் விட்டுவிட்டு, பின் குளித்து முடித்து டிபனையும் சாப்பிட்டுவிட்டு ஃபேர்லாண்ட்ஸில் இருக்கும் ‘ராஜ்மகால்’ என்கிற ஆபீஸ் அலுவலகத்திற்கு கணேசன் என்கிற கணேசராஜா வந்தபோது பரந்தாமன் என்கிற அந்த ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் காத்துக்கொண்டிருந்தார்.“அடடே... வந்து ரொம்ப நேரமாயிடிச்சோ... வெரி சாரி...” “இருக்கட்டும் சார்... நானும் இப்பதான் வந்தேன்...”“எனக்குதான் கொஞ்சம் பங்களால டைம் ஆயிடிச்சு... அப்பா, அம்மான்னு எல்லாரும் பிடிச்சுக்கிட்டாங்க...”

“பாப்பா உடம்பு இப்ப எப்படி இருக்கு..?”“நல்லா இருக்கா... ஏற்காடு அவளுக்கு ரொம்ப பிடிச்சும் போச்சு...”“சந்தோசம். நானும் எதுக்கு வந்தேன்னு சொல்லிட்றேன். அதுக்கு முந்தி ஒரே ஒரு கேள்வி... கொஞ்சம் பர்சனலா... நீங்க தயங்காம பதில் சொல்லணும்...”“கேளுங்க பரந்தாமன்...”“ஏற்காட்ல உங்க உயிருக்கு ஆபத்துங்கற மாதிரி எதாவது நடந்துச்சா..?”பரந்தாமனின் கேள்வி கணேசனின் பொட்டில் அடித்தது.

(தொடரும்)

அந்த நாகத்தைப் பார்க்கவும் அசோகமித்திரன் சற்று படபடப்பிற்கு ஆளானார். அது நிதானமாக வந்து சிவலிங்கத்தின் மேல் ஏறி, லிங்க உருளை வடிவத்தை தன் நீண்ட உடலால் வளைத்துக் கொண்டு படம் விரித்தபடி காட்சி தரத் தொடங்கியது.இப்படி ஒரு காட்சியை நிறைய கேலண்டர்களில் பார்த்திருக்கும் அசோகமித்திரன், அப்போது அக்காட்சியை நேரிலும் பார்த்தபோது அவரிடம் இனம்புரியாத பல உணர்வுகளின் அலைமோதல்கள்!

வானில் கிரகணம் முழுமையை நெருங்கிக்கொண்டிருந்தது. நிசப்தமென்றால் அப்படி ஒரு நிசப்தம். எதனாலோ அதுவரை சில்லென்று வீசிக் கொண்டிருந்த காற்றிடமும் வீச்சல் இல்லை.சர்ப்பம் லிங்கத்தை வளைத்து நிற்கும் காட்சியைப் பார்த்து சன்யாசி பரவசத்துடன் வணங்கினார். வணங்கியபடியே அசோகமித்திரனைப் பார்க்கவும், அவரும் வணங்கினார்.
அதெல்லாம் கூட ஆச்சரியம்தான்!அசோகமித்திரன் கடவுள் விஷயத்தில் பல கேள்விகள் உடையவர். யாரும் அதற்கு அவர் நிறைவாக ஒப்புக்கொள்ளும் அளவிற்கு விடைகளைச் சொன்னதேயில்லை. சிலர் சொன்ன பதில்கள் அப்போதைக்கு நிறைவைத் தந்து பின் அதுவும் மாறிவிட்டது.

அதில் பிரதானமான கேள்வி - கடவுள்தான் நம் எல்லோரையும் தன் சக்தியால் படைத்தார் என்றால் அவரைப்படைத்தது யார்?-என்பது முதல் கேள்வி.அவர் சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், அதற்குமுன் எதுவுமே இல்லாத நிலையில், இல்லாத ஒன்றில் இருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்?-இது இவரின் அடுத்த கேள்வி.அப்படியே தோன்றிவிட்டார் என்பதை ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும் ஏன் உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஏற்கும் விதமாய் இவர் இல்லை? - இது இவரின் மூன்றாம் கேள்வி.

சர்வ வல்லமை படைத்தவரான கடவுள் ‘ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே வழிமுறை என்று ஒட்டுமொத்த உலகை நிர்வகிக்காமல் பல மதங்கள், பல கடவுள்கள் இருப்பது எதனால்? - இது நான்காம் கேள்வி. கடவுள் அனுபவம் என்பது ஏன் எப்போதும் ஒரு தனிமனித அனுபவமாக மட்டுமே உள்ளது? ஒரு கூட்டம் ஒட்டுமொத்தமாய் உணரும் விதத்தில் ஒரு அனுபவம் கூட இல்லையே, எதனால்?கடவுளை ஒரு கற்பனை என்று கருதி தங்கள் வாழ்வை இயற்கை என்று புரிந்து கொண்டு வாழ்கின்றவர்கள் வாழத்தானே செய்கின்றனர். அவர்களுக்கு எது கிடைக்காமல் போய்விட்டது? உருகி உருகி பக்தி செய்பவர்களுக்கு எது கிடைத்துள்ளது..?- இப்படி அசோகமித்திரனிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன.

அப்படிப்பட்டவரே இப்போது சன்யாசி வில்வ இலைகளைத் தந்து அர்ச்சித்து துதிக்கச் சொல்லவும் அப்படியே செய்து முடித்தார்.அவர் தூவிய வில்வ இலைகள் லிங்கத்தை வளைத்தபடி நிற்கும் சர்ப்பத்தின் மேலும் விழுந்தன. பின் அந்த நாகசர்ப்பம் தன் பிடியைத் தளர்த்திக்கொண்டு லிங்கத்திடம் இருந்து விலகி அருகில் நான்கு மரங்களின் கலப்பாக உள்ள மரத்தில், வில்வ மரத்தின் மேல் ஊர்ந்து ஏறி தன் வாயாலேயே ஒரு வில்வ இலையைக் கவ்விப் பறித்து, பின் கீழிறங்கி வந்து மீண்டும் லிங்க வடிவைப் பற்றிக்கொண்டு அதன்மீது அர்ச்சிப்பது போல் இலையை நழுவவிட்டது. பின் திரும்பவும் கீழிறங்கிச் சென்று ஒரு இலையைப் பறித்து வந்து அதேபோல் செய்தது.

மூன்றாவது முறையும் அப்படியே செய்தது.நாகேந்திரநல்லூர் கோயிலுக்குள் நடக்க வேண்டிய நிகழ்வு ஊருக்கு வெளியே ஒரு தென்னந்தோப்புக்குள், நால்வகை மரங்கள் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்த இடத்தில் நிகழ்ந்து முடிந்ததுதான் விந்தை!அந்த சன்யாசி அடுத்து கற்பூர ஆர்த்தி காட்டி அதை நீட்டவும், பயபக்தியோடு கண்ணில் ஒத்திக் கொண்டார் அசோகமித்திரன்.
அப்போது அந்த சன்யாசி விபூதியை எடுத்து அசோகமித்திரனின் நெற்றியில் பூசிவிட்டார். அதற்குப்பின் அதுவரை எதுவும் பேசாதவர், “சாமி ஆசீர்வாதம் பண்ணுங்க...” என்று மண்டியிட்டு தலை குனிந்து வணங்கினார்.

அந்த நாக சர்ப்பம் லிங்கத்தை விட்டு விலகி வந்து தன் விரிந்த படத்தால் அவர் சிரசை ஒத்தி எடுத்தது. அதன் பின் நிமிர்ந்த சன்யாசி அசோகமித்திரனையும் வணங்கச் சொல்ல, அவரும் அதேபோல ஆனால், சற்று பயத்துடன் வணங்கிய நிலையில் அவர் சிரசின் மேலும் அது தன் விரிந்த படத்தை ஆசீர்வதிப்பது போல ஒத்தி எடுத்தது.

அந்த நொடி அசோகமித்திரனிடம் ஒரு பதற்றக் குரல்!
“ஏய்... நோ...” என்கிற அக்குரல் கேட்டு முதலில் கண்விழித்தவர் கனபாடிகள்தான்!
பிறகு கண் விழித்தவர் அசோகமித்திரன்!

“என்ன சார்... ஏதாவது கனவு கண்டீங்களா? அட
நெத்தியிலகூட விபூதி... எப்ப வெச்சுக்கிட்டீங்க..?”
கனபாடிகள் கேட்ட பிறகே, தான் கண்டது கனவு என்பதில் இருந்து, இனிதான் பொழுது விடிந்து சூரிய கிரகணம் முதல் எல்லாமும் நடக்க இருக்கிறது என்பதும் அவருக்கு தெரியத் தொடங்கியது.மலங்க மலங்க கனபாடிகளைப் பார்த்தார் அசோகமித்திரன். நெற்றி விபூதியில் ஒரு நல்ல வாசம்!

- இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி