இந்தியால திருடுறது பெரிய விஷயமில்ல!



சரஸ்வதி மகால் நூல்நிலைய திருட்டின் பின்னணி

பழைய இரும்பு, எவர்சில்வர், ஈயப் பாத்திரத்துக்கு பேரீச்சம் பழமாவது கிடைக்கும். ஆனால், தமிழில் முதன்முதலில் அச்சான ஒரு தமிழ் நூல் தமிழர்களுக்கு ஒரு பைசா பெறாமல் போனது கடந்தவார செய்தி ஒன்றால் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.1707ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் தரங்கம்பாடியில் தரை இறங்கினார். பிரசாரம் செய்யவேண்டுமென்றால் மொழி தெரியவேண்டுமே... கற்க முனைந்தார். ஆனால், தமிழ் இவரை உள்ளிழுத்துக்கொண்டே சென்றது. நிறுத்தவில்லை பாதிரியார். தலைகீழாக தமிழைக் கரைத்துக் குடித்தார்.

தமிழ் மொழியையும், அதில் உள்ள பொக்கிஷங்களையும் உணந்துகொண்டார். சமயப் பரப்புரைக்குப் பதிலாக தமிழின் பழமையான சுவடிகளை எல்லாம் தேடித் தேடி சேகரித்து தொகுக்க ஆரம்பித்தார். அவர் சுவடிகளாக இந்த நூல்களைத் தொகுத்திருக்காவிடில் தொல்காப்பியமோ, திருவாசகமோ, கம்பராமாயணமோ நமக்குக் கிடைத்திருக்காது. பிறகு தன் மதக் கடமைக்காக பைபிளையும் தமிழில் மொழிபெயர்த்தார். நூலின் பெயர் ‘வேத ஆகமம்’. இது பைபிளின் இரண்டாம் புத்தகமான புதிய ஏற்பாடு.

இந்தப் புத்தகத்தைத்தான் தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலையத்திலிருந்து சில பத்தாண்டுகளுக்கு முன் சில புல்லுருவிகள் லவட்டிக்கொண்டு போய்விட்டார்கள். சுமார் 300 வருட பழமையானது இந்தப் புத்தகம். தமிழகத்தின் முதல் அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்தது, தமிழின் முதல் அச்சுப் புத்தகம் எனும் பெருமையுள்ள இந்தப் புத்தகத்துக்கு சொந்தக்காரர் சீகன் பால்கு என்ற பாதிரியார்.

தமிழக தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டைக்குப் பின் இந்தப் புத்தகம் லண்டன் நூல்நிலையத்தில் பாதுகாப்பாக இருப்பதாகக் கடந்தவாரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலையத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும், புத்தக திருட்டுகள் குறித்தும் இது தொடர்பான தமிழறிஞர்களைப் பிடித்துக் கேட்டோம். பெயர் வெளியிட விரும்பாத ஒரு முன்னாள் நிர்வாகி இன்ட்ரோ கொடுத்தார்.

‘‘இந்த நூல்நிலையம் தஞ்சையை 1550களில் ஆண்ட நாயக்கர் காலத்தில் அரண்மனை நூல் நிலையமாக முதன்முதலில் தொடங்கப்பட்டது. நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயரகுநாத நாயக்கர் எல்லாம் இந்த நூல்நிலையத்தில் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் சிலர் புலவர்கள்கூட. அப்போது இந்த நூல்நிலையத்துக்குப் பெயர் ‘சரஸ்வதி பண்டாரம்’. நாயக்கர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டதால் அதிகம் தெலுங்கு ஓலைச் சுவடிகளைத்தான் சேகரித்தார்கள். அதன்பிறகு மராட்டியர்கள் தஞ்சையைப் பிடித்துக்கொண்டனர். இது நடந்தது 1700களில்.

மராட்டிய மன்னர்களில் கடைசியாக வந்த இரண்டாம் சரபோஜிதான் இந்த நூல்நிலையத்தை ‘சரஸ்வதி மஹால்’ என்று பெயர் மாற்றம் செய்து, நூல் நிலையத்தை மேலும் சிறப்புறச் செய்தார். காரணம், சரபோஜி ஆங்கிலம் கற்றிருந்தார். உதாரணமாக, சரபோஜி காலத்தில் அவர்களின் மொழியான மராத்தி மொழியில் இருந்த சுவடிகளை இங்கே அதிகம் சேகரித்தாலும் அவரது சொந்த சேகரிப்பாக ஆங்கிலம், லத்தீன், ஃபிரஞ்சு மொழிகளில் உள்ள 5 ஆயிரம் புத்தகங்களைச் சேகரித்தார்...’’ என்றவர், காணாமல் போகும் பழைய சுவடிகள், புத்தகங்கள் குறித்து சில விவரங்களைப் பகிர்ந்தார்.

‘‘சீகன் பால்கு தமிழில் அச்சடித்த முதல் தமிழ் நூலான வேத ஆகமத்தை சரபோஜிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை நான் மட்டுமல்ல... அங்கிருக்கும் பல ஊழியர்களும் பார்த்திருக்கிறோம்.ஒரு வெளிநாட்டினர் முதன்முதலில் நூலகத்துக்கு வந்தால் இந்தப் புத்தகத்தைத்தான் முதலில் காண்பிப்பார்கள்.

சில வெளிநாட்டினர் ஆவணப்படம் எடுக்க வந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்த சாக்கில் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வார்கள். இப்படி நடந்திருக்கலாம் என்பதைவிட நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே முக்கியம்.

இந்த நூல் நிலையத்தில் இசை, நாட்டியம், மருத்துவம், இலக்கியம் போன்ற நூல்களும் சுவடிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. டாப் ஒன் நூல்கள் என்றால் அது மருத்துவம் சார்ந்த நூல்களாகத்தான் இருக்கும். அடுத்து இசை, நாட்டியம், இலக்கியம்... உதாரணமாக ‘சப்தார்த்த சிந்தாமணி’ என்று ஒரு நூல் இருந்தது. இது முன்னிருந்து படித்தால் இராமாயணம் மாதிரி கதை இருக்கும். பின்னே இருந்து படித்தால் கண்ணன் கதை சொல்லும் பாகவதமாக இருக்கும்.

தஞ்சையைச் சேர்ந்த ஒரு வடமொழிப் புலவரால் இயற்றப்பட்ட இந்தப் புத்தகம் வடமொழியில் இருக்கும். இதுபோல ‘மேகமாலா மஞ்சரி’ என்று ஒரு புத்தகம் இருந்தது. மேகக் கூட்டங்களை வைத்து மழையை எப்படி கணிப்பது என்பது பற்றிய ஒரு அனுபவபூர்வமான புத்தகம் இது. உண்மையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகத்தில் 60 ஊழியர்கள் வரை பணிபுரிந்தார்கள். நிர்வாகமும் சிறப்பாக இருந்தது. இப்போது வெறும் பத்து ஊழியர்களே வேலை செய்கிறார்கள்.

நூல்களை அச்சிடவும், சுவடிகளை நூல்களாக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஊழியர் சம்பளத்தை மட்டுமே தமிழக அரசும் கல்வித் துறையும் கவனிக்கிறது. முழுநேர நூலக இயக்குனர்கள் இல்லை. இப்படி சில பல நிர்வாகக் காரணங்களே இந்த நூல்நிலையத்தின் சீர்கேட்டுக்கும், திருட்டு போன்ற சமூகக் குற்றங்களுக்கும் காரணம்...’’ என்று பெயர் சொல்ல விரும்பாத அவர் முடிக்க, தமிழறிஞரான பொ.வேல்சாமி, இந்தியர்கள் திருடவில்லை என்றால்தான் ஆச்சரியம் என்று சூடாக ஆரம்பித்தார்.

‘‘ஆங்கிலேயர்களுக்கு திருடத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் ஆண்டது வரை இந்த நூலகம் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. ஆனால், சுதந்திர இந்தியாவில் இந்தியச் செல்வங்களை நம் ஆட்களே வெளிநாடுகளுக்கு கூவிக் கூவி விற்கும் நிலை வந்துவிட்டது. இந்த நூல்நிலையத்தைப் பொறுத்தளவில் வடமொழி, தெலுங்கு, மராத்தி மொழி சுவடி
களே அதிகம். சரபோஜிக்கு முன்புவரை அச்சுநூல்கள் வரவில்லை.

இதனால் சுவடிகள்தான் அவருக்கு முன் அதிகம் இருந்தன. சரபோஜி 1836வாக்கில் இறக்கிறார். அவர்தான், தான் வாழ்ந்த காலத்தின் கடைசி 5 ஆண்டுகளில் தன் சொந்த சேகரிப்பாக ஆங்கிலப் புத்தகங்களையும், மற்ற மொழி நூல்களையும் சேகரிக்கிறார். நூல்நிலையத்துக்கும் சில புத்தகங்கள் வந்தன. இதில் சில தமிழ் நூல்களும் அடக்கம்.

சரபோஜியின் சொந்த  புத்தகங்கள் அவர் கைப்பட தேதி வாரியாக எழுதப்பட்டு கையெழுத்திடப்பட்டிருக்கும். களவுபோய் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வேத ஆகமத்திலும் சரபோஜியின் கையெழுத்து உண்டு.1870களில் பர்னல் என்ற ஒரு ஆங்கிலேயர், இந்த நூல்நிலையத்தில் இருந்த சுவடிகள், புத்தகங்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு செய்தார். அவர் கணக்கெடுத்த புத்தகங்கள் எல்லாமே இப்போதும் இருக்கின்றன என சொல்வதற்கில்லை.

உதாரணமாக, உ.வே.சா., தன் காலத்தில் ஒரு தனியாரிடம் இருந்த ‘தகடூர் யாத்திரை’ என்ற புத்தகத்தைப் பார்த்ததாக எழுதியிருப்பார். ஆனால், இந்தப் புத்தகம் பிற்பாடு காணக்கிடைக்கவில்லை. இதுமாதிரி இந்தியர்களுக்கும் திருட்டுக்கும் ரொம்பத் தொடர்பு இருக்கிறது. இந்த நூல்நிலையத்தில் இருந்த ஒரு கெளரவ இயக்குநரே பல நூல்களை எடுத்துச் சென்றுவிட்டார் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுமாதிரி எத்தனை பேர் செய்திருப்பார்கள் என்று தெரியாது.

சுவாரசியமான புத்தகங்கள் என்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள பயன்பட்ட இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து போன்ற நூல்களைச் சொல்லலாம். இவை அதன்பின் பலகாலம் மறைந்து கிடந்தன. பின்னர் இந்த நூலகத்தில் கெளரவ இயக்குனராக இருந்த பள்ளியகர கந்தசாமி என்பவரால் கோபால் ஐயர் எனும் முது பெரும் தமிழ் அறிஞரின் மேற்பார்வையில் இந்த நூல்கள் 1940, 50களில் வெளியிடப்பட்டன.

சிவபுராணம் என்று ஒரு புத்தகம். இதை ஏதோ சிவனைப் பற்றிய சமயப் புத்தகம் என்று பலர் நினைத்து படிக்காமலே இருந்தார்கள். உண்மையில் இந்தப் புத்தகம் மராட்டிய மன்னன் சிவாஜி பற்றியது. சிவாஜி காலத்திலேயே அவரது குருவாக இருந்த ஒருவரால் அப்போதே மராத்தி மொழியில் எழுதப்பட்டு உடனடியாக தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல்நிலையத்தால் வெளியிடப்பட்டது.

அடுத்து நூல்நிலையத்தால் வெளியிடப்பட்டு இன்றும் அமோகமாக விற்கப்படும் நூல்கள் சமையல் பற்றியது. தஞ்சை அரண்மனையிலேயே சமையல்காரர்களாக இருந்தவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூல்கள் அவை. சைவத்துக்கு சில... அசைவத்துக்கு சில இதில் உண்டு. ‘போஜன குதூகலம்’ என்ற புத்தகம் அப்படியானது.

அடுத்து ஜோதிட, மருத்துவப் புத்தகங்கள். இறுதியாக இலக்கியப் புத்தகங்கள். ‘யாஷ்கர் நிருத்தம்’ எனும் வேதங்களைப் புரிந்துகொள்வதற்கான புத்தகமும் முக்கியமானது.மோடி ஆவணங்கள் என்று சொல்லப்படும் சுவடிகள் மிகப்பெரிய ஆவணம்.

உண்மையில் இந்த மோடி ஆவணம் என்பது தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓலையில் ஒருவகை மராத்தி கலந்து எழுதப்பட்ட சுவடிகள். மொத்தம் நூறு மூட்டைகள். அதில் வேண்டாம் என்று தள்ளிய சுமார் 10 மூட்டைகளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த வி.அய்.சுப்ரமணியம் ‘மோடி ஆவணங்கள்’ என்று பதிப்பித்தார்.

அந்தக் காலங்களில் பெண்களை எப்படி எல்லாம் விற்றார்கள் என்பதை இந்த ‘மோடி ஆவணங்கள்’ புட்டுப் புட்டு வைக்கின்றன. மீதமுள்ள 90 மூட்டைகளில் உள்ள சுவடிகளையும் பதிப்பித்தால் பலப் பல கொடுமைகள் வெளியாகும். அந்த 90 மூட்டைகளுக்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டுக்காகப் பாடுபட்ட புத்தக சேகரிப்பாளர்களை கெளரவிக்காவிட்டாலும் பரவாயில்லை... அவர்களை தலைகுனிய வைக்கும் விதத்தில் அவற்றை திருடி விற்கும் நடவடிக்கைகள் இனிமேலாவது நடக்காமல் அரசு காப்பாற்ற வேண்டும். இப்போதைய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ என்கிறார் பொ.வேல்சாமி.  

டி.ரஞ்சித்