மாலத்தீவு யூடியூபர்ஸ்



நம்முடைய திரை பிரபலங்கள் அடிக்கடி விசிட் அடிக்கும் ஓர் இடம், மாலத்தீவு. சுமார் 5.59 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தத் தீவுக்கு வருடந்தோறும் வருகை புரிகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடும்.
கொரோனா லாக்டவுனால் மாலத்தீவின் சுற்றுலாத் துறையும் பாதிப்புக்குள்ளானது. இப்போது பழைய நிலை திரும்பியுள்ளது. ஆம்; கடந்த சில நாட்களாக தினமும் 3 ஆயிரம் பேராவது மாலத்தீவுக்கு வருகை புரிகின்றனர். இப்படியான ஒரு தேசத்திலிருந்து வெளியாகும் சிறந்த  யூடியூப் சேனல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சிம்பாலிக் ரெக்கார்ட்ஸ் (Symbolic Records)

மாலத்தீவில் பதிவு செய்யப்பட்ட முதல் ரெக்கார்ட் லேபிள் நிறுவனம், ‘சிம்பாலிக் ரெக்கார்ட்ஸ்’. சமீப வருடங்களில் மாலத்தீவின் இசைத்துறையில் அதிக பாதிப்பை உண்டாக்கிய நிறுவனமும் இதுவே. குறிப்பாக மாலத்தீவின் உள்ளூர் இசையை வெளி உலகுக்குக் கொண்டு சென்ற நிறுவனமும் இதுதான். ஹிப் - ஹாப் மற்றும் ராப் இசையில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது.

அவ்வப்போது மற்ற இசை வகைமைகளிலும் பாடல்களை வெளியிடுகிறது. உள்ளூரிலிருக்கும் திறமைசாலிகளைக் கண்டுபிடித்து இசை ஆல்பங்களை வெளியிடுவது இதன் தனிச்சிறப்பு.
கடந்த வருடத்தில் மட்டும் 5 ஆல்பங்கள், 50 தனிப்பாடல்கள், 30 வீடியோ பாடல்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறது ‘சிம்பாலிக் ரெக்கார்ட்ஸ்’. இதன் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் இது.

பெஸ்ட், பே, டெடி, அரே... என்னும் மாலத்தீவைச் சேர்ந்த 15 இசைக்கலைஞர்களின் படைப்புகளை இந்தச் சேனலில் கண்டு களிக்கலாம். திவெஹி, அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் பாடல்கள் வெளியாகின்றன. வித்தியாசமான இசை அனுபவம் வேண்டுபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தச் சேனல். மார்ச் 9, 2013ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 34 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியுள்ள வீடியோக்கள் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

மால்டீவியன் ஐடல் (Maldivian Idol)

மாலத்தீவில் பல வருடங்களாக இயங்கி வரும் முன்னணி தொலைக்காட்சி சேனல், ‘டெலிவிஷன் மால்டீவ்ஸ்’. இதில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த ஒரு டெலிவிஷன் ஷோதான், ‘மால்டீவியன் ஐடல்’.  மாலத்தீவிலேயே மிகப்பெரிய பாட்டுப் போட்டியாக கருதப்படுகிறது இந்த நிகழ்ச்சி. இதில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதுவரை 3 சீசன்கள், 35 எபிசோட்கள் என கெத்து காட்டுகிறது ‘மால்டீவியன் ஐடல்’. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாலத்தீவின் இசைத்துறைக்குப் புதிதாக நிறைய கலைஞர்கள் கிடைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகியிருக்கிறது இந்த யூடியூப் சேனல். ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலான எல்லா எபிசோட்களையும் இந்தச் சேனலில் பார்க்கலாம். ஆகஸ்ட் 4, 2015ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 32.7 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதுவரை இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 1.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.

அலி ரமீஸ் (Ali Rameez)

மாலத்தீவின் இசைத்துறையை வழி நடத்தி வந்த ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர் அலி ரமீஸ். உள்ளூரில் உள்ள ஒரு விடுதியில் பாட ஆரம்பித்தார். அந்த விடுதிக்கு வந்தவர்கள் எல்லோரும் ரமீஸின் ரசிகர்களாக மாறினார்கள். திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

திரைப்படங்களில் பாடுவதோடு ஆல்பங்களையும் வெளியிட்டார். வணிக ரீதியாகவும் நல்ல லாபம் ஈட்டும் இசைக் கலைஞராகத் திகழ்ந்தார் ரமீஸ். 2002ம் வருடம் இசைத்துறையை விட்டு முழுமையாக விலகி, இஸ்லாம் சார்ந்து இயங்க ஆரம்பித்தார். இஸ்லாமிய கருத்துகளை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அலி ரமீஸ் ஆரம்பித்த யூடியூப் சேனல்தான் இது.

இந்தச் சேனலில் பாடல் வடிவில் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்கிறார் அலி. இஸ்லாத்தில் ஈடுபாடு உடையவர்கள் தவிர்க்கக் கூடாத ஒரு சேனலாகத் திகழ்கிறது ‘அலி ரமீஸ்’.  
ஆகஸ்ட் 31, 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 29.7 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 72 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.

ஃபன்னி ஃபேஸ் (Funny Face)

சில மணி நேரங்கள் எல்லா கவலை
களையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உடனே ‘ஃபன்னி ஃபேஸ்’க்கு விசிட் அடியுங்கள். மாலத்தீவிலேயே அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனல் இது. முகம்மது ஆரிஃப் என்பவர் இந்தச் சேனலை நிர்வகித்து வருகிறார்.

முழுக்க முழுக்க குழந்தைகளால் நிறைந்திருக்கிறது இந்தச் சேனல். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளின் சேட்டைகள், செல்லப்பிராணிகளுடன் குழந்தைகள் விளையாடுவது, முதல் முதலாக தவளையைப் பார்த்த குழந்தையின் முகம், தூங்கிக்கொண்டே கீழே விழும் குழந்தை, தண்ணீரில் விளையாடும் மூன்று மாதக் குழந்தை, குழந்தைகளின் அழுகை, சிரிப்பு, கோபம்... என அழகான உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது இந்தச் சேனல்.

இதில் வெளியாகியிருக்கும் ஒவ்வொரு வீடியோவும் மொழியைத் தாண்டி பார்வையாளர்களை வசீகரிக்கின்றது.  டிசம்பர் 16, 2016ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 54.4 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

ட்ரீமிங் ஆஃப் மால்டீவ்ஸ் (Dreaming of Maldives)

முதன் முதலாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்கிறவர்களுக்கு மட்டுமல்லாமல், பலமுறை மாலத்தீவுக்கு விசிட் அடித்தவர்களுக்கும் கூட ஆன்லைன் வழிகாட்டியாகத் திகழ்கிறது இந்தச் சேனல். இருபது வருடங்களுக்கு மேலாக மாலத்தீவைச்சுற்றி வந்துகொண்டிருக்கும் ரோஷனின் சேனல் இது. ஒவ்வொரு வருடமும் மாலத்தீவின் சிறந்த பத்து ரிசார்ட்டுகள் குறித்த வீடியோவைப் பகிர்கிறார் ரோஷன்.

இந்தப் பட்டியலைத் தயாரிப்பதற்காக மாலத்தீவிலிருக்கும் எல்லா ரிசார்ட்டுகளிலும் தங்குகிறார். தவிர, மாலத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள், சிறந்த ஹோட்டல்கள், அழகான கடற்கரைகள், ரகசிய தீவுகள், ஷாப்பிங்... என பல பரிந்துரைகளை வீடியோக்களாக வழங்குகிறார். இந்தச் சேனலைப் பார்ப்பதே மாலத்தீவுக்குச் சென்று வந்ததைப் போன்ற ஓர் உணர்வைத் தருகிறது. அக்டோபர் 13, 2009ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 22.9 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 66 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.  

த.சக்திவேல்