சக்கம்மா





பூ, பழம், வெத்தல, பாக்கு எல்லாம் வச்சி தேங்கா உடைச்சி சாமி கும்பிட்டு முடிச்சதும், கருணாகரன் அம்மன்சிலை அடிக்க(வடிக்க) அந்த கருங்கல்லத் தொட்டான். அவன் மனசு துறுதுறுன்னு இருந்துச்சி. அந்தக் கன்னங்கரேல் கல்லுல அவன் உளி ‘கன்... கன்...’னு தாளத்தோட ஓடிக்கிட்டிருந்துச்சி.
ஊருக்குள்ள இந்த அம்மனுக்காக கோயில் வேலைக நடக்குது. வார சித்திர மாச பௌர்ணமியில இந்த அம்மன் சிலைய கோயிலுக்குள்ளார வச்சி, பட்டி தொட்டியெல்லாம் கூட்டி ‘கும்பாவிசேசம்’ வைக்கப் போறதா ஜமீன்தாரே கருணாகரன்கிட்ட சொல்லியிருந்தாரு. அதுக்கு இன்னும் மூணு மாசம் கெடக்கு. அதனால மெள்ள செஞ்சாலும் நல்லபடியா செஞ்சிரணும்னு மெனக்கெட்டுக் கெடந்தான் அவன்.

தெய்வ காரியம் செய்யறவனுக்கு ஏதும் சீக்கு வந்து தடங்கலாகிடக் கூடாதே! அதனால அவனுக்கு அம்புட்டு கவனிப்பு. மழைத் தூறல் வந்தாக் கூட கருணாகரன் நனையாம இருக்கணும்னு ஆத்தங்கரைக்குப் பக்கத்துல ஒரு வேப்பமரத்தை ஒட்டி இடம் ஒதுக்கி, அவன் தலைக்கு நேரே தென்னைக் கிடுகுல கூரை வேஞ்சிருந்தாக.

தை மாச அறுப்பு முடிஞ்சு வரப்பு பச்சை தவிர மத்த இடமெல்லாம் ஈரம் போர்த்திக் கிடந்துச்சி. தன் வேலையிலயே கவனமா இருந்த கருணாகரனுக்கு உடம்பெல்லாம் வியர்வையில குளிச்சிருந்தாலும், மேகாத்து அப்பப்போ வந்து தொடும்போது சொகமா இருந்துச்சி.

இன்னைக்கோட அவன் சிலை அடிக்க உளியெடுத்து ஒரு மாசம் ஆகிருச்சி. ஜமீன்தாரோட ஆளுக அடிக்கடி அவன்கிட்ட வந்து, ‘ஏதாச்சிலும் தேவையா... என்ன?’ன்னு பணிவா கேட்டுப் போகும்போது பெருமையா இருந்துச்சி அவனுக்கு.

வேறெந்த நெனப்பும் இல்லாம தனியா சிலை செதுக்கும்போது, குருவி, மயில், கொக்கு, நாரைகளும், அதுக போடுற சத்தமுந்தான் அவனுக்குத் துணை. அன்னைக்கும் அப்படித்தான் அவன் வேலையே கவனமாயிருந்தான். ‘ம்... மே’ன்னு ஆடு கனைக்கிற சத்தமும், அதை ‘ச்சூ... சூ...’ன்னு விரட்டுற சத்தமும் கேட்டு நிமிர்ந்தான். அப்பத்தான் அவளைப் பார்த்தான்.

ரெண்டு கை கொள்ளாத முடியை அவ சாய்வு கொண்டையாப் போட்டிருந்தா. குவிஞ்ச நாடி, லவுக்க போடாத உடம்பு, சேலைக்குள்ள வெள்ளைக்கோடா அவ தோல் நெறம் மின்னிச்சு.
‘தே... தே...’ன்னு அவனைச் சுத்தியிருந்த ஆடுகளை ஓட்டினா அவ.

‘‘உனக்கு ஆடு மேய்க்க எடமே கிடைக்கலையாக்கும்..? அம்மன் சிலைய அடிச்சிக்கிட்டு இருக்கிற இடத்தில வந்து ஆடு மேய்க்கிறே!’’ன்னு கேட்டான் கருணாகரன்.
அவ, ‘உக்கும்’மின்னு கழுத்தை வெட்டிக்கிட்டே, ‘‘அம்மனுக்கு ஆடு ஆவுமாக்கும்... அது மேயறது மட்டும் ஆவாதாக்கும்’’மின்னு சொல்லிச் சிரிச்சா.
கருணாகரனும் சும்மா இல்லை. ‘‘வெள்ளா மைய விளைய வச்சித்தான் சாப்பிடுறோம்... அதுக்காக வெள்ளாமைக்குள்ளயா போயி குடியிருக்குறோம்?’’னு கேட்டான்.
அவ திரும்பவும் சிரிச்சா. அவன அப்படியே கிறங்க வச்சது அந்த சிரிப்பு. ‘‘நீரு இப்ப என்ன வீட்டுலயா குடியிருக்கீரு... ராவும் பகலும் இங்கதானே கெடக்கீரு? பெறவு, ஒரு விசயம்...’’ன்னு அவ இழுத்தா.


‘‘என்ன?’’ன்னு படபடப்பா கேட்டான் கருணாகரன்.
‘‘அம்மன் சிலைய அடிக்கிறவரு ‘வாய்த்துணி’ கட்டிக்கிட்டு சுத்த பத்தமா அடிக்கணும். இப்படி சும்மா தொணதொணங்கக் கூடாது’’ன்னு துடுக்கா சொல்லிட்டுக் கௌம்பினா அவ.
‘‘இந்தா புள்ள... உன் பேர சொல்லிட்டுப் போ’’ன்னு அவன் கேக்க, ‘‘சக்கம்மா’’ன்னு சொல்லிட்டு ஆடுகளைப் பத்திக்கிட்டுப் போனா அவ.
அவ போனாலும், அவ முகமும் குரலும் மறையல. உளி செதுக்கற ‘கன்... கன்...’ சத்தத்தைத் தாண்டி, சக்கம்மாவோட குரல்தான் கருணாகரன் காதுக்குள்ள கேட்டுக்கிட்டு இருந்துச்சு.

அம்மன் சிலை நல்ல வடிவா வந்ததுல கருணாகரனுக்கு சந்தோசம். இதுக்கு முன்ன அவனும் அம்புட்டு சிலைகள பல ஊருகள்ல செஞ்சிருக்கான். ஆனா, அதுக்காக அவனை யாரும் பாராட்டினதோ, சீராட்டினதோ இல்ல. எல்லாம் சின்னச்சின்ன சிலைக. ஏழை, பாழைக சேர்ந்து கட்டின கோயிலுக்குள்ள அவன் அடிச்ச சிலை கண்ணுக்கே தெரியாது. பூசாரியத் தவிர வேற ஓராளும் அதை நல்லா பார்த்திருக்காது. பட்டும் மாலையும் மறைச்சது போக அம்மனோட நெத்தி குங்குமம் மட்டுந்தான் வெளிய இருந்து பாக்குறவுகளுக்குத் தெரியும். அப்புறம் எங்க இருந்து அவனுக்கு மரியாதை கிடைக்கும்?

ஆனா, இந்த சிலை ஆறடி ஒசரத்துல ஓங்கு மாங்கா கண்ணுக்கு நெறஞ்சி இருந்துச்சு. இந்த அம்மனுக்காக விசாலமான கோயிலும், பீடமும் காத்துக் கெடக்கு. கும்பாவிசேசத்துல ஊருமக்க வெறும் திருநூறோட போவக்கூடாதுன்னு ஜமீன்தார் அன்னதானத்துக்கும் ஏற்பாடு பண்ணியிருந்தாரு. அவரு மட்டும் இதப் பார்த்தாருன்னா, வச்ச கண்ணு வாங்க மாட்டாரு. இம்புட்டு அழகா சிலை அடிச்ச கருணாகரன தலையில தூக்கி வச்சி கொண்டாடுவாரு. நினைக்கறப்போ அவனுக்குப் பெருமையா இருந்துச்சு.

சித்திரை பிறக்கப் போகுது. ஜமீன்தார் நாளைக்கே சிலையைப் பார்க்க வாரதா சொல்லியிருந்தாரு. ஆனா... இம்புட்டு அழகா அம்மன் சிலைய அடிச்ச கருணாகரன், இன்னும் முகத்தை மட்டும் அடிக்கல. இன்னிக்கு ராவுக்குள்ள முகத்தை அடிச்சு, கண்ணையும் தொறந்துப் புடணும். இல்லன்னா இவன் உசுரு தப்பாது. கருணாகரன் கைகள் ஓட்டமெடுத்துச்சு.
வெள்ளாம முடிஞ்ச வெறுங்காட்டுல வெள்ளாடுக மேஞ்சிக் கெடந்துச்சி. சக்கம்மா கருணாகரன் தோளுல சாஞ்சிக் கெடக்கா. ரெண்டு பேரும் என்னைக்கோ மனசு விரும்பி பழக்கமாயிட்டாகளே. இருட்டு மூடின பெறவும் கருணாகரன் உளிச் சத்தம் அங்க கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அன்னைக்கு சக்கம்மாளும் அவன் கூடவே இருந்தா.

மறுநாளு ஜமீன்தார் வந்தாரு. கருணாகரன் அதுக்குள்ள சிலைய முழுசா
முடிச்சுட்டான். நினைச்சது போலவே ஜமீன்தார் அந்தச் சிலையில வச்ச கண்ணு வாங்கல. ஆனா, முகத்தை கிட்ட நெருங்கி வந்து பார்த்தவரு, ‘‘கருணாகரா’’ன்னு உறுமினாரு. ஏன்னா, அம்மனோட இடதுபக்க உதட்டுல சின்னதா மச்சம் ஒண்ணு உருண்டு திரண்டிருந்துச்சி.
‘‘அம்மனோட முகத்துல எப்படிடா
மச்சம் வந்துச்சு?’’ன்னு அவரு கண்ணு செவக்க கேட்டாரு.
‘‘அது... அது... வந்து...’’ன்னு இழுத்தான் கருணாகரன்.
இதுக்காகவே காத்திருந்த மாதிரி, சக்கம்மாளோட அத்தை மகன் ஒருத்தன் முன்னாடி வந்தான். ‘‘இவன் அம்மன் உருவத்த அடிக்கல எசமான்... சக்கம்மான்னு ஒரு பொட்டப்புள்ள சகவாசத்துல கொட்டம் அடிச்சி, அவ உருவத்த அடிச்சிருக்கான்’’னு சொன்னான்.
தெய்வ காரியத்துல அசுத்தம்
பண்ணிட்டான்னு ஜமீன்தார் கொந்தளிச்சாரு. கருணாகரனை மாறு கால், மாறு கை வாங்கச் சொல்லி கட்டளை போட்டாரு. இம்புட்டையும் மறைஞ்சு பார்த்துட்டு நின்ன சக்கம்மா ஓடிவந்தா. கருணாகரன் கைபட்ட உளியை எடுத்து, அவ தன்னையே குத்திக்கிட்டு செத்துப் போனா. இன்னிக்கும் அந்த ஊரு சனங்க ராஜபாளையம் பக்கத்துல சத்திரப்பட்டி போற வழியில சக்கம்மாளுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வாராக.     றீ



‘‘தன்மேல வீசப்பட்ட செருப்பை, வீசினவன் மேலேயே குறி பார்த்து திரும்ப எறியறாரே நம்ம தலைவர்... ஏன்?’’
‘‘அவரோட கால் அளவுக்கு சரியில்லாத செருப்பை வீசினானாம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஊறுகாய் வியாபாரி பொண்ணோட ஜாதகத்தை தரகர் குடுத்ததும், மாப்பிள்ளை ஓகே சொல்லிட்டாரா... எப்படி?’’
‘‘சைட் டிஷ் செலவு மிச்சம் ஆச்சே..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.