பட்டியல் வைத்தால் கட்டணம் குறையுமா?



புலிகேசி ஆஸ்பிட்டல்



பைபாஸ் சர்ஜரி
- ரூ.2 லட்சம்
பைல்ஸ் சர்ஜரி
- ரூ 50 ஆயிரம்
கேட்ராக்ட் சர்ஜரி
- ரூ.30 ஆயிரம்
ஆடித் தள்ளுபடி 20%
அடிஷனல் தள்ளுபடி 10%


இறந்து போன ஒருவருக்கு எட்டு மணி நேரம் ஆபரேஷன் நடக்கும் ‘ரமணா’ படக் காட்சி, வெறும் கற்பனையல்ல. ‘பணத்தாசை நோய்’ பிடித்து ஆட்டுவதால் இன்று பல தனியார் மருத்துவமனைகளில் இதை விட பெரிய கொடூரங்களே அரங்கேறுகின்றன. தறிகெட்ட வேகத்தில் நிகழும் இந்த மோசடிகள், ஆட்சியாளர்களையே பதற வைத்திருக்கின்றன. அதனால்தான், ‘தனியார் மருத்துவமனைகளில் இன்ன சிகிச்சைக்கு இவ்வளவு பணம் என்று, நகைக்கடை போல ரேட் கார்டு தொங்க வேண்டும்’ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. நடைமுறையில் இது சாத்தியமா? இதனால் மக்கள் ஏமாற்றப்படுவது குறையுமா? மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்...

‘‘மக்கள் ஏமாறக்கூடாது; எல்லாம் வெளிப்படையா நடக்கணும்ங்கிற அரசோட நோக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி வச்சுட்டா எல்லாம் முறையா நடந்துடுமா? பிளாட்பாரக் கடையில ரெண்டு ரூபாய்க்கு விக்கிற இட்லி, உயர்தர ஹோட்டல்ல இருபது ரூபா. கேட்டா, ஏ.சியில உட்கார்ந்து சாப்பிடணும்னா தந்தாகணும்பாங்க. அரசோட இந்த அறிவிப்பும் தனியார் மருத்துவமனைகளைத் தரம் பிரிக்கிற வேலையைத்தான் செய்யப் போகுது’’ என்கிறார் கல்பாக்கத்தில் செயல்படும் ‘சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு’வைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி.

‘‘அது மட்டுமில்ல... இந்த நோய்க்கு இந்த பரிசோதனைகள் எடுக்கணும்னு ஒரு மருத்துவமனையில எழுதிப் போட்டிருந்தா, அது சரியா இல்லையாங்கறது மக்களுக்கு எப்படித் தெரியும்? மருத்துவ
மனைகள் சரியான விபரத்தைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் இருக்கா... அது கண்காணிக்கப்படுமான்னும் தெரியல. மருத்துவக் கட்டணம் அதிகமாகறதைத் தடுக்க முதல்ல மருந்து விலையைக் கட்டுப்படுத்தணும். மருந்துப் பொருட்களை விக்கிறப்ப மொத்த விற்பனையாளர்கள் 15 சதவீதத்துக்கு மேலயும், சில்லறை விற்பனையாளர்கள் 35 சதவீதத்துக்கு மேலயும் லாபம் வைக்கக் கூடாதுன்னு அரசு வழிகாட்டும் நெறிமுறையில இருக்கு. ஆனா, அது சட்டமாக்கப்படாததால கொள்ளை லாபம் அடிக்கிறாங்க. அரசாங்கம் அதைச் சட்டமாக்கலாமே?

இன்னொரு விஷயம், ஸ்டாண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட். இன்னிக்கு ஐரோப்பிய நாடுகள்ல ஒரு நோய்க்கு எந்த நேரத்துல என்ன சிகிச்சையை எப்படித் தரணும்னு சட்டம் இருக்கு. அதை மீறினா மருத்துவர்கள் கடுமையா தண்டிக்கப்படுறாங்க. இதனால அந்த மக்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்குது. இங்க அதையும் கொண்டு வர முடியல.
இதையெல்லாம் பண்ணாம, ரேஷன் கடை மாதிரி நோட்டீஸ் போர்டு போடச் சொல்றது தும்பை விட்டு வாலைப் பிடிச்ச கதைதான்’’ என்கிறார் புகழேந்தி.
ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வரும், ‘மக்கள் மருத்துவமனை’ நிறுவனரும் ‘சமாதானத்துக்கான மருத்துவர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவருமான ஜீவானந்தத்தின் கருத்தும் ஏறத்தாழ இப்படியே இருக்கிறது.

‘‘மக்களுக்கு நல்ல சிகிச்சை குறைஞ்ச கட்டணத்துல கிடைக்கணும்னு நினைச்சா, அரசே அதுக்குப் பொறுப்பேத்துக்கணும். இங்கிலாந்துல மருத்துவத் துறையில 80 சதவீதம் அரசு வசம்தான் இருக்கு. இங்கயோ 85 சதவீதம் தனியார்கள் கையில இருக்கு. மருத்துவத் துறையை முழுக்க அரசு எடுத்துப் பண்றப்பதான் கடைசிக் குடிமகனுக்கும் தேவையான சிகிச்சை முழுசா கிடைக்கும். இங்க அது நடக்கறது காலத்தோட கையில இருக்கு.



அதே போல தனக்குக் கிடைக்கிற ட்ரீட்மென்ட் பத்தி ஏ டூ இசட் தெரிஞ்சுக்குற உரிமை நோயாளிக்கு நிச்சயம் இருக்கு. உண்மையான டாக்டர்கள் அதை நோயாளிக்குத் தெரியப்படுத்திடுவாங்க. மத்தபடி ஏற்கனவே கஷ்டத்தோட வர்ற மக்கள்கிட்ட பொய், பித்தலாட்டம் பண்ணி மனசாட்சி இல்லாம நடந்துக்குறது வைத்தியமே கிடையாது’’ என்கிறார் ஜீவானந்தம்.

மருத்துவமனைகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளுமா? ‘அசோசியேஷன் ஆஃப் சர்ஜன்’ அமைப்பின் பொருளாளர் ரத்தினசாமியிடம் பேசினோம்.
‘‘இது சாத்தியமே இல்லை. காரணம், இன்னிக்கு இருக்கிற நோய்களைப் பட்டியலிட்டா பத்தாயிரத்துக்கு மேல தாண்டும். வருங்காலத்துல புதுசு புதுசாக்கூட ஏதாச்சும் நோய் வரலாம். அது எல்லாத்துக்கும் ஒரு பட்டியல் தயாரிக்க முடியுமா?
அதோட, ஒவ்வொரு நோயும் உடல்வாகு, நோய் ஆரம்பிச்ச காலம்னு பல விதங்கள்ல மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசப்படும். குடல்வால் ஆபரேஷனை ஆரம்ப கட்டத்துல சிம்பிளா பண்ணலாம். அதுக்கு சார்ஜஸ் கம்மியா இருக்கும். அதே குடல்வால் ஆபரேஷனை கொஞ்சம் லேட்டா பண்ணுனா செலவு ஜாஸ்தியாகலாம். அதனால ஒரு சிகிச்சைக்கு இதுதான் கட்டணம்னு நிர்ணயிக்கிறது கஷ்டம். ஒரு சில டாக்டர்கள் தப்பு பண்றாங்கங்கறதுக்காக அரசு இப்படி மொத்தமாப் போட்டு குழப்ப நினைக்கக் கூடாது. தவறுகள் நடக்காம தடுக்க வேற வழிகளைத் தேடணும்!’’ என்கிறார் ரத்தினசாமி.
- அய்யனார் ராஜன்