எதையுமே நான் மறைச்சதில்லை!





இந்தியாவில் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தத் திருமணம் இந்த வாரம் நிகழ்கிறது. பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் கரீனா கபூரை மணக்கிறார், அவரது ஐந்து வருடக் காதலர் நடிகர் சைஃப் அலிகான். பட்டோடி மகாராஜா வாரிசான சைஃப், தங்கள் நவாப் பாரம்பரியப்படி அரண்மனையில் திருமணம் செய்துகொள்ள, மும்பையில் இரண்டு ரிசப்ஷன்கள் நடக்கின்றன. தங்கள் திருமணத்தைப் பற்றி கரீனா கபூர் மிக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியிலிருந்து...

எப்போ உங்க கல்யாணம் நடக்கும்னு தெரிஞ்சுக்க எல்லாரும் ஆசைப்படறாங்களே?
ஏன்? என் கல்யாணம் நாடாளுமன்றத்தையோ, பங்குச்சந்தை சென்செக்ஸையோ பாதிக்குதா? நாட்டுக்கு இது ரொம்ப அவசியமான நியூஸா? ஏன் இப்படி பரபரப்பு கிளப்பறீங்க? ஐந்து வருஷத்துல சைஃபும் நானும் பலமுறை எங்கெங்கோ போய் ஹாலிடேவை என்ஜாய் பண்ணியிருக்கோம். அப்படி போன ஏதோ ஒரு ட்ரிப்லகூட நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாம்.

அப்படின்னா உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?
அப்படி யாரு சொன்னது?

கல்யாணத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையில் எதுவும் மாறப் போறதில்லைன்னு ஏற்கனவே ஒருமுறை சொன்னீங்க... அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு லேட் பண்றீங்க?
எங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைதான். ஐந்து வருஷமா சேர்ந்து இருக்கோம். கல்யாணத் தேதியை தள்ளிப் போட நான் எப்பவுமே விரும்பினதில்லை. ஆனா, என் பர்சனல் வாழ்க்கையை மத்தவங்க ஆர்வமா பாக்கறதை நான் விரும்பறதில்லை. தள்ளித் தள்ளிப் போட்டா மத்தவங்களுக்கு ஆர்வம் போயிடும் இல்லையா? அதுக்காகத்தான் லேட் பண்ணோம்.


கல்யாணத்தாலே என் வாழ்க்கையோ, நடிகைங்கற அந்தஸ்தோ பாதிக்காதுன்னு நான் உறுதியா நம்பறேன். ஐந்து வருஷமா சைஃப்கூட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். அதுக்கு முன்னால ஐந்து வருஷம் ஷாகித் கபூரை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். காதலை வெட்கப்பட்டோ, ரகசியம்னு நினைச்சோ மறைக்கிற பெண்ணில்லை நான். மத்த நடிகைகள் போல, ‘ஐயோ! நான் பிஸி. ஸ்டூடியோவுக்கும் வீட்டுக்குமா ஓடிக்கிட்டு இருக்கேன்’னு சொல்லி அலுத்துக்கற டைப் இல்லை இந்த கரீனா. ஷாட் முடிஞ்சதுமே ‘கரீனா’ங்கற நடிகையோட இமேஜ் கலைஞ்சுடும். வீட்டுக்குப் போனதும் செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு கரீனாவா வாழ ஆரம்பிச்சிடுவேன். அப்ப நான் என்ன செய்யறேன்னு யாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை. சினிமாவுல என் நடிப்பை மட்டும் பாருங்க. என் கல்யாண வாழ்க்கையில உங்களுக்கு தெரிஞ்சுக்க என்ன இருக்கு?

ஐந்து வருஷமா காதலிக்கறீங்க... கல்யாணமும் பண்ணிக்கப் போறீங்க... காதல்ல இருக்கற ஆரம்பகட்ட பரவசம் போயிடுச்சா?

இல்லை. இப்பவும் நாங்க நண்பர்களா, காதலர்களா இருக்கோம். இந்தியாவுலதான் இப்படி தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க. காதல், கல்யாணம் எல்லாமே ரெண்டு பேர் இணைஞ்சிருக்கறதையும், சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கறதையும்தான் உணர்த்துது. சைஃப் என்னைவிட 10 வயசு மூத்தவர். அது ரொம்ப நல்ல விஷயம். என்னைவிட அவருக்கு பரந்துபட்ட அறிவு இருக்கு.

கல்யாணத்துக்கு அப்புறமும் நான் நடிக்கறதை அவர் தடுக்க மாட்டார்னு நினைக்கறேன். சொல்லப்போனா, என்னை நடிக்கச் சொல்லி அவர் ஆர்வமா தூண்டி விடுவார்னு நினைக்கறேன். அவர் ரொம்ப மா டர்ன்டைப். அவரும் நானும் ஜோடியா நடிச்ச படங்கள் வெற்றி பெறலைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அது பத்தி யாருக்கு என்ன கவலை? நிஜ வாழ்க்கையில நாங்க பொருத்தமான ஜோடி. அவ்வளவுதான்! தீபிகா படுகோனேவுக்கும் எனக்கும் மோதல்னு சிலர் சொல்றாங்க. சைஃப் கூட அவங்க ஜோடியா நடிச்சதால எனக்குப் பொறாமையாம். படத்துல அவர் எந்த நடிகை கூட ஜோடி சேர விரும்பினாலும் பரவாயில்லை; அவங்க கெமிஸ்ட்ரி நல்லா இருக்கறதா எல்லாரும் சொல்லிக்கட்டும். ஷூட்டிங் முடிஞ்சு அவர் வீட்டுக்கு வர்றவரைக்கும், என்னவரா அவர் இருக்கறவரைக்கும் எனக்குக் கவலை இல்லை. இதேபோலத்தான் நான் எந்த நடிகருக்கு ஜோடியா நடிச்சாலும், அவரும் நினைப்பார்.

உங்க முன்னாள் காதலர் ஷாகித் பற்றி?
வாழ்க்கையில நான் அவரைப் பத்தி மட்டும் பேசக்கூடாதுன்னு நினைக்கறேன்.


ஷாகித்தையோ, சைஃப் அலிகானையோ நீங்க எப்பவாவது ஏமாத்தி இருக்கீங்களா?
சத்தியமா இல்லை. நீங்க நேசிக்கற ஒருத்தரோட சந்தோஷமாவும் திருப்தியாவும் வாழ்ந்தீங்கன்னா, உங்களுக்கு ஏமாத்தத் தோணாது. சந்தோஷம் தொலைஞ்சாதான் கண்ணும் மனசும் அலைபாயும்!
- ரெமோ