மதுரை மல்லிக்கு உலக அங்கீகாரம்!





மதுரையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மல்லிகைப் பூவுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. பழமையும், பாரம்பரியப் பெருமையும், வேறெங்கும் கிடைக்காத தனித்தன்மையும் கொண்ட பொருட்களுக்கு வழங்கப்படும் புவிசார் காப்புரிமைக் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் மதுரை மல்லியின் புகழும், மணமும் உலகெங்கும் பரவப்போகிறது.

தமிழகத்தில் நாகர்கோவில் முதல் திருவள்ளூர் வரை பல பகுதிகளில் மல்லிகை பயிரிடப்படுகிறது. ஆனால் மதுரை மல்லிக்கு இருக்கும் தனித்தன்மை வேறெதிலும் இல்லை. மதுரை மல்லி, மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். இதழ்கள் கடினமாகவும், தண்டுப்பகுதி தடிமனாகவும் இருக்கும். சரியான தட்பவெப்பத்தில் வைத்திருந்தால் மூன்று நாட்கள் வாடாது. மேலும், மனதை மயக்கும் வாசனையில் பிறவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு மதுரை மல்லியே முன்நிற்கிறது.   

மல்லிக்கும் மதுரைக்குமான தொடர்பு, இன்று நேற்றல்ல... சங்க காலம் தொட்டே நீடிக்கிறது. பரிபாடல், மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, சூடாமணி நிகண்டு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் மதுரை மல்லி பற்றிய குறிப்புகள் உள்ளன.

மதுரை மட்டுமின்றி விருதுநகர், தேனி, திண்டுக்கல் பகுதிகளிலும் விளைகிறது மதுரை மல்லி. சொல்லப் போனால் மதுரையை விட அதிகமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்தான் விளைகிறது மல்லி. மதுரை மல்லிக்கான தாய்ச்செடிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தருவிக்கப்படுகின்றன. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேரில் மதுரை மல்லி பயிரிடப்படுகிறது. இப்படி மண் மாறி வருவதால்தான் தனிச்சிறப்புமிக்க வாசம் மதுரை மல்லிக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மல்லி விவசாயிகள்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லிகைப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்கள். வருடத்துக்கு 60 ஆயிரம் டன் மல்லிகை உற்பத்தியாகிறது. மொத்த விளைச்சலில் 30 சதவீதம் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. 25 சதவீதம் இந்தியா முழுதுமுள்ள பல்வேறு கோயில்களுக்கு சுவாமி அலங்காரத்துக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ளவை உள்ளூர் சந்தைக்கு.

மதுரை வட்டாரத்தில் மல்லிகையை பதப்படுத்தும் 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பசை, திரவ வடிவில் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். இம்மல்லி மூலம் சென்ட், ரிலாக்ஸ் ஆயில், பெயின் கில்லர் மருந்துகள் தயாரிக்கிறார்கள்.



இப்படி பல சிறப்புகளை உள்ளடக்கிய மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு பெறும் வகையில், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தானம் அறக்கட்டளை ஈடுபட்டது. முதற்கட்டமாக 111 விவசாயிகளை ஒருங்கிணைந்து மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. அச்சங்கம், சங்க இலக்கியங்கள் உள்பட ஏராளமான தரவுகளைக் கொண்டு ஒரு அறிக்கை தயாரித்து மத்திய வர்த்தகத் துறையிடம் விண்ணப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் மதுரை மல்லிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



புவிசார் குறியீடு பெறுவதால் என்ன நன்மை..? மதுரை மல்லி விவசாயிகள் சங்கச் செயலாளர் அரவிந்தனிடம் கேட்டோம்...
‘‘மதுரை மல்லிக்கு உலகெங்கும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. மும்பையில் உள்ள மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து உலகம் முழுதும் அனுப்புகிறார்கள். மதுரை மல்லிக்கு நல்ல விலை கிடப்பதால், பிற பகுதிகளில் விளையும் மல்லிகைப்பூவையும் மதுரைமல்லி என்ற பெயரில் ஏற்றுமதி செய்கிறார்கள். புவிசார் குறியீடு பெற்றால், ஏற்றுமதி தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும், மதுரை மல்லியின் தரம் பற்றிய அறிக்கை அனுப்பப்படும். விற்பனைக்கான டிரேட் மார்க்கும், லோகோவும் வழங்கப்படும். மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தைத் தவிர உலகில் வேறெந்த நகரத்தில் இருப்பவர்களும் இதைப் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்தினால் சங்கத்துக்கு ராயல்டி வழங்க வேண்டும். அல்லது சங்கத்தில் உறுப்பினராக இணைந்தபிறகே வணிகத்தில் ஈடுபட வேண்டும். இதனால் டிமாண்ட் அதிகமாகி விலை அதிகரிக்கும். இது தவிர ஏற்றுமதி இன்னும் விரிவடையும். இதன்மூலம் மதுரையின் புகழ் எல்லா நாடுகளுக்கும் பரவும்..’ என்றார் அரவிந்தன். நல்ல விஷயம்... நடக்கட்டும்..!
- வெ.நீலகண்டன்