ஜரீன் கான்...





‘வேலை செய்யாமல் சம்பளம்’ என்பதைப் படித்தபோது நம் நாட்டிலும் அது வேறு வடிவமாக - ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ என்ற பெயரில் நடைபெறுவதே நினைவுக்கு வந்தது. பலர் அதில் வேலை செய்யாமலும் பணிக்கே வராமலும் சம்பளம் பெறுவதாகக் கூறுகிறார்கள். விவசாயப் பணிகளுக்கு இதனால் வேலையாட்கள் கிடைப்பதில்லை. சிந்திக்கத் தூண்டிய கட்டுரை அது!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91;
இரா.வளையாபதி, கரூர்.


செக்யூரிட்டி வேலை செய்துகொண்டே, வாழ்க்கையில் செக்யூரிட்டி இல்லாத அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதும் ஸ்ரீதரகணேசனின் தமிழ்ப் பணி, சமுதாயப் பணியும் கூட!
- எஸ்.சாந்தி, காட்பாடி.

குழந்தைகளே நடமாடும் கவிதைகள்தான்! அந்தக் குழந்தைகள் ‘க்ளிக்’கிய புகைப்படக் கவிதைகள் நெஞ்சைப் பிசைந்தன. அந்தத் தண்ணீர்க் குடமும் சிறுமியும் மனதில் கல்வெட்டாக நிற்கிறார்கள்!
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

‘அட... அக்கு பிரஷரில் குறட்டைக்குக் கூட சிகிச்சையா? அப்போ இனி குறட்டைக்கு ‘குட் பை’தான். இது தெரியாமல்தான் அயல்நாடுகளில் எத்தனை விவாகரத்துகள்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
‘மல்கோவா... பால்கோவா... ஐயம் ஃபிரம் கிரேட் கோவா...’ என்ற ‘தத்துவ’ முத்துக்களை உதிர்க்கும் பாடலுக்கு ஆடும் ஜரீன் கான் நிஜமாகவே புதிதாய் பொரிந்த பாப் கார்ன்தான். அதற்காக இப்படித்தான் ஏகத்துக்கும் ஜொள்ளு விடுவதா? (இது புகார் அல்ல... பொறாமை!)
- கே.வி.ஸ்டீபன் சார்லஸ்,நாகர்கோவில்.

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதை நிரூபிக்கும் ஆப்பிள் ‘ஐபோன் 5’-ன் இமாலயத் தோல்வி, ஸ்டீவ் ஜாப்ஸ் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதையே காட்டுகிறது!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

டி.வி, பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்
பாளர்களை விடவும் கீழாக எழுத்தாளர்கள் மதிக்கப்பட்டால், எழுத்துக்கு என்ன மரியாதை? மனுஷ்ய புத்திரனின் ஆதங்கம் நியாயமானது!
- கரு.பாலகிருஷ்ணன், மதுரை-20, சா.ச.பாவேந்தன், கும்பகோணம்.
என்னது? பத்தாவது படிச்சாலே மேனேஜர் வேலையா? எப்படியெல்லாம் புதுசு புதுசா புளுகுறாங்க! இத்தனை நகைச்சுவையாக இப்படியொரு விழிப்புணர்வு கட்டுரையைத் தரவே முடியாது. இதைப் படித்தாவது ஏமாறும் இளைஞர்கள் சுதாரிப்பார்களா?
- எம்.ஆர்.அனுஷா, பெங்களூரு.

சூர்யா, ‘மாற்றான்’ படத்தை எம்.ஜி.ஆர் ஃபார்முலா என்கிறார் என்றால்,  புரட்சித் தலைவரின் ஃபார்முலா, இந்த ‘ஃபார்முலா ஒன்’ காலத்திலும் முந்தும் என்ற ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்!
- எல்.பல்லவராஜன், சிவகங்கை.