2017 வரை பவர்கட் தீராது!





சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இம்சிக்கத் தொடங்கிவிட்டது மின்தடை. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 10 முதல் 14 மணி நேர மின்தடை. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பவர்கட்டால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் கருகி விட்டன. மக்களை பெரும் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்த மின்தடை எப்போது சரியாகும்..? வரலாறு காணாத இந்த மின்தடைக்கு என்னதான் காரணம்..?

ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரும், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கÕத்தின் தலைவருமான சி.செல்வராஜிடம் கேட்டோம். “இப்போதிருக்கும் நிலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த மின்தடை சீராக வாய்ப்பேயில்லை என்கிறார் செல்வராஜ்.

“மின்வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளும், ஊழலுமே மின்தடைக்கு முக்கியக் காரணம். தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. இப்போதைக்கு சராசரியாக 8000 மெகாவாட்தான் கிடைக்கிறது. இதுவும் படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது. காரணம், மின் உற்பத்தி நிலையங்கள் எதிலும் சரியான பராமரிப்பில்லை. திறமையான ஊழியர்கள் இல்லை என்று கூறி, மின்நிலைய பராமரிப்பு வேலைகள் அனைத்தையும் தனியாருக்கு கான்ட்ராக்ட் விட்டுள்ளது மின் வாரியம். கான்ட்ராக்ட் எடுத்தவர்களை முறையாகக் கண்காணிப்பதில்லை. இதனால் பல மின் நிலையங்களை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறையில் தனியாரின் ஆதிக்கம் தலைதூக்கி விட்டது. அதிகாரிகளை வெகு எளிதாக வளைத்து கையில் போட்டுக்கொண்டு மின்வாரிய உற்பத்தி நிலையங்களைக் குலைத்து, தங்கள் உற்பத்தியை கொள்ளை விலைக்கு தலையில் கட்டி விடுகிறார்கள். மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க செலவிடும் தொகை 2.64 காசுகள். ஆனால், தனியாரிடம் 6 முதல் 7 ரூபாய் கொடுத்து 1 யூனிட் வாங்குகிறார்கள்.

புதிதாக மின்திட்டங்களைத் தொடங்க விடாமல் இந்த தனியார் நிறுவனங்கள் ÔலாபிÕ செய்கின்றன. பல மட்டங்களில் இதற்கென்று புரோக்கர்கள் செயல்படுகிறார்கள். 90-91க்குப் பிறகு புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் மின்வாரியத்தால் தொடங்கப்படவில்லை. கடந்த 16 வருடங்களில் கூடுதலாக ஒரு யூனிட் கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை. தனியாரிடம் எவ்வளவு மின்சாரம் வாங்கவேண்டும், என்ன விலைக்கு வாங்கவேண்டும் என்பதை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் தீர்மானிக்கும். ஆனால் இப்போது ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலே சட்டவிரோதமாக நினைத்த விலைக்கு வாங்குகிறார்கள். பணத்தை முறைகேடாக செலவு செய்துவிட்டு, மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கதை கட்டி மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார் செல்வராஜ்.

பெரும் எதிர்பார்ப்போடு அண்மைக்காலத்தில் தொடங்கப்பட்ட மின்உற்பத்தித் திட்டங்களின் நிலையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் செல்வராஜ். ‘‘வடசென்னை தெர்மல் பவர் ஸ்டேஷன் இந்த ஆண்டு ஜூன், அக்டோபர் மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்றார்கள். அது இயங்கினால் 1200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. வல்லூர், மேட்டூர் மின்திட்டங்களும் கிடப்பிலேயே உள்ளன. மேட்டூர் மின்திட்டத்திற்கு அமைக்கப்பட்ட கருவிகள் ஃபெயிலியர் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது புதிய திட்டங்களைத் தொடங்கினால் கூட 5 முதல் 7 வருடங்கள் கழித்தே உற்பத்தி செய்யமுடியும்’’ என்கிறார் செல்வராஜ்.

நடுவில் திடீரென மின்தடை நேரம் குறைந்ததே?  
‘‘காற்றாலை மின் உற்பத்தி சற்று அதிகரித்ததே காரணம். 7000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் இங்கு இருக்கின்றன. காற்றின் அளவைப் பொறுத்தே உற்பத்தியின் அளவு இருக்கும். அக்டோபர் 9ம் தேதி மாலை காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரம்  1383 மெகாவாட். மறுநாள் 285 மெகாவாட்தான் கிடைத்தது. மேலும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் அளவுக்கு நம்மிடம் கட்டமைப்பு இல்லை’’ என்கிறார் செல்வராஜ்.

ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தியும் நிர்வாகச் சீர்கேடுகளையே மின்தடைக்கான காரணமாகச் சுட்டுகிறார். “குத்தாலம், வழுதூர் பகுதிகளில் இயங்கும் 288 மெகாவாட் திறன்கொண்ட கேஸ் பிளான்ட் ரிப்பேராகி விட்டது. ஆனாலும் ஒரு நாளைக்கு 71 லட்ச ரூபாய் கொடுத்து கேஸ் கொள்முதல் செய்கிறார்கள். மின்வாரியத்தில் ஏராளமான முறை
கேடுகள் நடக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்தாலே ஓரளவுக்கு நிலைமை சரியாகிவிடும். ஒவ்வொரு வருடமும் 1000 மெகாவாட் மின் தேவை அதிகமாகிறது. எனவே சீர்கேடுகளை அகற்றி, தொலைநோக்குடன் மின் உற்பத்தித் திட்டங்களை தொடங்க வேண்டும்...’’ என்கிறார் காந்தி.

தற்காலிகமாக மின்தடையை சமாளிக்க செல்வராஜும், காந்தியும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள். “மொத்த மின்சாரத்தில் 25 சதவீதம் சென்னைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிற பகுதிகளில் 10 முதல் 14 மணி நேரம் மின்தடை செய்யப்படும் நிலையில் சென்னையில் 1 மணி நேரம் மட்டுமே மின்தடை. இங்கு மின்தடை நேரத்தை அதிகரித்து, பிற பகுதிகளுக்கு கூடுதலாக வழங்கலாம். சென்னை மற்றும் அதைச்சுற்றி இயங்கும் எம்என்சி கம்பெனிகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு 300 முதல் 500 மெகாவாட் அளவுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்திலும் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. அந்நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு தடைசெய்து பிற பகுதிகளுக்கு வழங்கலாம்.’’ மின்தடை மக்களின் இயல்பை குலைத்துப் போட்டிருக்கிறது. கொதிப்பும், கோபமும் எங்கும் எதிரொலிக்கிறது. போர்க்கால அடிப்படையில் அரசு ஏதாவது செய்தாக வேண்டும். இதேநிலை நீடித்தால் வீடுகள் மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையும் இருண்டுவிடும்.
- வெ.நீலகண்டன்