கழிப்பறையால் தடைபடும் கல்வி!





‘இந்தியாவில் கழிப்பறைகளைவிட கோயில்கள் அதிகமாக இருக்கின்றன’ என ஒரு அக்கறையில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... அவருக்கு எதிராக இந்துத்வா அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. இந்தக் களேபரத்தில், உச்ச நீதிமன்றம் போட்ட ஒரு உத்தரவு, பல காதுகளில் விழவில்லை.

‘இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்தியாவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்’ என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் காச்மூச்சியிருக்கிறது.

இந்த உத்தரவை தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் கரகோஷத்தோடு வரவேற்றிருக்க, அதில் பலமான கைதட்டலாக ஒலிக்கிறது ‘க்ரை’ என்ற தொண்டு நிறுவனத்தினரின் குரல். காரணம், கடந்த சில மாதங்களாக அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் கல்வி குறித்தும் மற்றப் பிரச்னைகள் குறித்தும் இந்தியப் பெருநகரங்களில் ஆய்வு செய்து, பல அதிர்ச்சித் தகவல்களைக் கையில் வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

‘‘இந்தியாவில், பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடும் அவலம் கூடிக்கொண்டே போகிறது. அதுவும் அரசுப் பள்ளிக்கூடங்களில் படிப்பை விடுவது இன்னும் அதிகம். அதற்கு அடிப்படைக் காரணமே பல அரசுப் பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாததுதான்!’’ என்று ஆரம்பித்தார் ‘க்ரை’ நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர் தெரசா.
‘‘சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி என ஐந்து பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பள்ளிக்கூடங்களில் மட்டும் நடத்தப்படவில்லை. அந்தந்த நகரங்களில் குடிசைப்பகுதி மக்களிடம் பேசி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இந்திய அளவில் நாற்பது சதவீத பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கென்று தனியே கழிப்பறை வசதி இல்லை என்பது வருத்தத்துக்குரியது. சென்னையில் 74 சதவீத அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தனியான கழிப்பறை இல்லை. பொதுவான கழிப்பறைகள் கூட மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை இலவசமாகப் பெறும் உரிமை இருக்கிறது என்ற தகவலே இங்கு 85 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. ஆர்டிஐ எனும் இந்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் பற்றிக் கேட்டால், ‘இப்படியெல்லாம் கூட சட்டம் இருக்கிறதா?’ என்று நம்மைத் திருப்பிக் கேட்கிறார்கள். அதே போல் ஏழைப் பெண் பிள்ளைகளுக்காக அரசாங்கம் கொடுக்கும் பலவித சலுகைகள் பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள்.  


இப்படிப்பட்ட அறியாமையால்தான் இந்தியா முழுவதுமே ஏழை மக்கள் பெண் குழந்தைகளை பாரமாகக் கருதுகிறார்கள்.  
பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாததால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது; குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்குக் கை கொடுக்க வேண்டும் என பெண் குழந்தைகளிடம்தான் ஏழை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; பல பெண்கள் தங்கள் திருமணத்துக்காக இளம் வயதிலிருந்து தாங்களே சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல நேரிடுகிறது.

ஆய்வுக்குட்பட்ட மக்களில் 20 சதவீதத்தினர் பெண் கல்வியின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். ஆனாலும் மேற்சொன்ன காரணங்களால், அவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. அவர்களின் தயக்கத்தைப் போக்க வேண்டுமானால், அவர்களால் பட்டியலிடப்படும் பிரச்னைகள் ஒவ்வொன்றாகக் களையப்பட வேண்டும். அதை நோக்கிய முதல் அடியாகத்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார் தெரசா.

‘‘கிராமப்புற மற்றும் குடிசைப்பகுதி மக்களிடம் சுற்றுப்புற சுகாதாரத்தை பிரசாரம் செய்யும் அரசாங்கம், தான் நிர்வகிக்கும் பள்ளிகளில் அந்த சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காதது மிகவும் அவமானகரமானது. சுகாதாரமின்மையால் பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல் ஆண் பெண் என எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே போதுமான ஊட்டச்சத்து இன்றியும், அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தும் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த கோர்ட் உத்தரவால் அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கென்று தனியான கழிப்பறைகள் அமைக்கப்பட்டால், அது உச்ச நீதிமன்றம் மக்களுக்குச் செய்த பெரிய நன்மையாக இருக்கும். பெண் கல்வி மேம்படுவது எந்த நாட்டுக்குமே வளர்ச்சிதானே!’’ என்றார் அதே க்ரை அமைப்பின் மற்றொரு மேலாளரான சாரா ரம்யா.
‘இந்தியா ஒரு திறந்தவெளி கழிப்பறை’ என்று சர்வதேச சமூகத்திடம் நாம் வாங்கிய கெட்ட பெயரை, கழுவி சுத்தம் செய்வது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்