நியூஸ் வே





ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சத்யஜித் ரேவுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். ‘ஆஸ்திரேலியா இந்தியா இன்ஸ்டிடியூட்’டில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய நகரங்களிலேயே சிலை வைத்து அவரைப் பெருமைப் படுத்தாதவர்கள் நாம்!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி இருக்கிறது நார்வே நாடு. இதையொட்டி தலைநகர் ஆஸ்லோவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘பாலிவுட் விழா’வில் நடிகை ஹேமமாலினிக்கு ஸ்பெஷல் தபால் தலை வெளியிட்டார்கள். தன் மகள்கள் இஷா, ஆஹானாவோடு போயிருந்த ஹேமமாலினி நெகிழ்ந்துவிட்டார். இந்தியாவில்கூட கிடைக்காத அங்கீகாரம் அல்லவா அது!

கொச்சியை வார்த்தைக்கு வார்த்தை புகழ்கிறார் பூமிகா. ‘‘நான் பார்த்த நகரங்களிலேயே மிக சுத்தமான நகரம். மக்களும் அமைதியாகப் பழகுகிறார்கள். நடிகை என்பதால் பொது இடங்களுக்குப் போக சங்கடமாக உணர வேண்டியிருக்கவில்லை’’ என்கிறார் அவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியிலும் சரியான பிரேக் கிடைக்காமல் தவிக்கும் மது ஷாலினி, ராம் கோபாள் வர்மாவின் ஹாரர் படமான ‘பூட் ரிட்டர்ன்’ஸை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கிலும் டப் ஆகியிருக்கும் இந்தப் படத்தில் அவரே பேசியும் இருக்கிறார். ‘‘டப்பிங் பேசுவதற்காக படத்தைப் பார்த்துவிட்டு நானே பயந்து போனேன்’’ என்கிறார் மது.

தனது தங்கை இஷிதா தத்தாவை முன்னணி நடிகையாக்கும் முயற்சியில் இருக்கிறார் முன்னாள் மிஸ் இந்தியாவும் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா. எங்கு சென்றாலும் தங்கையுடனே செல்கிறார். சமீபத்தில் இப்படி ஒரு விழாவுக்கு வந்த தனுஸ்ரீயைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆண்கள் போல கிராப் வெட்டி, அநியாயத்துக்கு குண்டாகி 20 வயது அதிகமான தோற்றத்தில் இருந்தார். ஆன்மிக நாட்டம் வந்து ஒவ்வொரு ஆசிரமமாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம். சீக்கிரமே மாதா தனுஸ்ரீ தேவி அவதாரமா?