நிழல்கள் நடந்த பாதை



மரணத்தின் தூது

கவிஞர் ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டபோது, மேசை டிராயரில் முப்பது காலி அஞ்சலட்டைகளில் அவரது நண்பர்களின் முகவரிகளை அழகான கையெழுத்தில் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார். அவரது மரணச் செய்தியை யாரெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினாரோ, அவர்களது முகவரிகளை எழுதிவிட்டுச் சென்றார். அந்த அஞ்சலட்டைகளை போஸ்ட் செய்யவேண்டிய அவசியம் ஏதும் நேரவில்லை. ஏனெனில், அவர் தனது மரணத்தின் வழியாகவே பெரும் புகழ்பெற்றார். அவரை ஒருபோதும் கேள்விப்பட்டிராதவர்கள்கூட, அவரது மரணத்தின் மூலம் அவரது கவிதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள்.

ஆனால் இன்றைய பெரும்பாலான மனிதர்களுக்கு அந்தரங்கமான ஒரு கவலை இருக்கிறது. தன் சாவுச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்படுமா என்பதுதான் அது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், அதைப் பற்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக நினைக்கவே செய்கிறார்கள். போதுமான அளவு கண்ணீர் இல்லாமல் விடைபெறுவது என்பது துரதிர்ஷ்டவசமானது. இறக்கும் ஒரு மனிதன் தனக்கான கண்ணீரின் பங்கை ஒருபோதும் இழக்க விரும்புவதில்லை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் அவரவர்க்குரிய நியாயமான கண்ணீர் ஒழுங்காகக் கிடைப்பதில்லை.
இன்றும் கிராமப்புறங்களில் ஒரு மனிதன் இறந்துவிட்டால் யாருக்கெல்லாம் சொல்லியனுப்ப வேண்டும் என்பது ஒரு திட்டவட்டமான நடைமுறையாக இருக்கிறது. சாவு வீட்டில் யாராவது ஒருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, சொல்லியனுப்ப வேண்டியவர்கள் பட்டியல் தயாரிப்பதைப் பார்த்திருக்கிறேன். தந்தி அடித்து வரவழைக்க வேண்டியவர்கள், ஆள் அனுப்பிச் சொல்லவேண்டியவர்கள் எனப் பலவிதமான ஏற்பாடுகள் இருக்கும். அந்தக் குடும்பத்தோடும் மனிதனோடும் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது வெளிப்படையான ஒன்று. தீராப்பகையுள்ளவர்களுக்கு சொல்லியனுப்பாமல் இருப்பது, சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாக அவமதிக்கும் ஒரு வழிமுறை. வீட்டை விட்டுப் போன மகளுக்கு, தாயோ தந்தையோ இறந்துபோனதைச் சொல்லியனுப்பாமல் தண்டிப்பார்கள். சில சமயம் பங்காளிகளுக்கு சாவுச் செய்தி சொல்ல மாட்டார்கள். நாம் யாரையோ வெறுக்கும் ஒரு கணத்தில், ‘‘நான் செத்தாக்கூட என் முகத்தைப் பார்க்காதே’’ என்பதைத்தானே அதீதமான சொல்லாகப் பயன்படுத்துகிறோம்.

சாவுச் செய்தியை ஆட்டோவில் ஸ்பீக்கரில் சொல்லும் முறை வந்தபோது சாவுக்கு ஒரு பொதுத்தன்மை வர ஆரம்பித்தது. பின்னர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வந்தன. பத்திரிகை விளம்பரங்கள் வந்தன. மனிதன் தனது குடும்ப, சாதிய பிணைப்புகளுக்கு அப்பாலும் புதிய உறவுகளுக்குள் வந்துவிட்டதன் அடையாளம் அது. யார் யாருடனோ அவனது வாழ்வும் மரணமும் சம்பந்தப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இந்த மாற்றங்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி நாம் வேறொரு காலத்திற்குள் வந்துவிட்டோம். ஒரு காலகட்டத்தில் என்னோடு மிக ஆழமாக சம்பந்தப்பட்டிருந்தவர்கள் இப்போது உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். அவர்கள் எல்லோருமே எங்காவது எப்படியோ வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை இல்லையா? எப்போதோ நான் பிரிந்து வந்துவிட்ட நண்பர்கள், தொலைத்துவிட்டு வந்த பெண்கள், கடந்துபோய் விட்ட சஹ்ருதயர்கள்... என எவ்வளவோ பேர் இப்போது என்னவாகியிருப்பார்கள் என்று நினைக்கும்போது ஒரு கணம் உடல் அதிர்கிறது.

இரண்டு நாளைக்கு முன்பு ஒரு சிநேகிதியிடம் நான் மறந்துவிட்ட அவளது பிறந்த தினம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ‘‘இந்தப் பிறந்த தினம் ஒரு துயரச் செய்தியோடு கழிந்தது’’ என்றாள். இணையத்தின் மூலம் பழக்கமான ஒரு நண்பன். எப்போதும் பிறந்த தினத்தன்று முதல் வாழ்த்து அவனுடையதாகத்தான் இருக்கும். ‘அடுத்த பிறந்த தினத்தில் ஒரு குறிப்பிட்ட காக்டெயிலை உன்னோடு அருந்துவேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். இடையில் 6 மாதங்கள் அவனுடன் பேசவே இல்லை. காரணம் ஒன்றுமில்லை. இந்தக் காலத்தில் நிறைய பேருடன் அப்படித்தான் நேர்ந்துவிடுகிறது. இந்தப் பிறந்த தினத்தில் அவனிடமிருந்து வாழ்த்துகள் இல்லை. ஏதோ இனம்புரியாத சஞ்சலம். வேறொரு பொது நண்பரிடம் கேட்டபோது, ‘‘அவன் இறந்து போய் 3 மாதம் ஆகிறதே; உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்’’ என்றார்.

ஒரு நண்பன் இறந்துபோவது அல்ல பிரச்னை. நாம் அதைத் தெரிந்துகொள்ளாமலேயே அவனைப்பற்றிய ஏதோ ஒரு உத்தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் என்பது நம்மை மிகவும் அந்தரங்கமாகத் தாக்குகிறது. அது ஒரு நம்பிக்கையின் முறிவு. இறந்துவிட்ட ஒருவன் நமக்குச் செய்யும் துரோகம். ஒரு மனிதன் இறக்கும்போது அந்த தினத்தில் அவனது முகத்தைப் பார்க்கக் கிடைக்காமல், அவனைப்பற்றி நினைக்காமல் நாம் விலக்கப்படுகிறோம் என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒரு துயரமாக மாறிவிடுகிறது. நாம் நன்கறிந்த ஒரு மனிதனின் கடைசி தினத்தைப் பகிர்ந்துகொள்வது நமது தார்மீக உரிமை இல்லையா?

இறக்கும் ஒரு மனிதனுக்கு இந்த உலகில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஆகிவிடுகிறது. ஆனால் அப்போதும்கூட அவனுக்கு தனது சாவுச்செய்தியை முறையாக சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு பொறுப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். அது நம்மோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நாம் தீர்க்கவேண்டிய இறுதிக் கடன்.

இதை எழுதும்போது மிகவும் வினோதமான ஒரு உணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. செத்தவர்களைப் போய்ப் பார்ப்பதுதான் உயிருள்ளவர்களின் கடமை என்று இதுவரை சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சாவுச் செய்தி கொண்டு செல்பவனின் மனநெருக்கடி பற்றி ஒரு கவிதை எழுதினேன். இப்போது இவ்வளவு தொடர்பியல் புரட்சிகள் நிகழ்ந்துவிட்ட ஒரு உலகில், நான் நன்கறிந்த இன்னொரு மனிதனின் மரணத்தை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் குறைந்து விட்டதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு வினோதமான ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம்!
நாளை காலை நான் இறந்துபோனால் என் மரணத்தை உணர்ந்து அனுபவிக்கும் எத்தனை பேர் அதனைத் தெரிந்துகொள்வார்கள் என்று யோசனையாகத்தான் இருக்கிறது. பலருடைய எண்களோ முகவரிகளோ என்னிடம் இல்லை. மேலும் என்னுடைய பல நட்புகளும் உறவுகளும் ரகசியமானவை. என்னோடிருக்கும் யாருக்கும் அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. என் மரணத்தைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகையின் மூலையில் ஒரு செய்தி வரக்கூடும். அவர்கள் அந்தப் பத்திரிகையை வாங்குபவர்களாகக்கூட இருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பக்கத்தை மட்டும் பார்க்காமல் போவதற்கு எல்லா சந்தர்ப்பங்களும் உண்டுதானே? என் வாழ்க்கையில் என்னை அவ்வளவு நேசித்த ஒருவர், ஏதோ ஒரு கடையில் ஒரு பொருளை பேரம் பேசிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக சந்தித்த யாரோ ஒருவரிடமிருந்து எப்போதோ இறந்துவிட்ட என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்குக் கடுமையான ஆட்சேபணை இருக்கிறது அல்லது அவர் அதை ஒருபோதும் தெரிந்துகொள்ளாமலேயே அந்தப் பொருளை வாங்கிக்கொண்டு அந்தக் கடையில் இருந்து இறங்கிச் சென்றுவிடவும் கூடும்.

ஒவ்வொருவரும் உயில் எழுதுகிறோமோ இல்லையோ, இனி நமது மரணம் தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றை எழுதிவைக்க வேண்டும். அது, இறந்து போகும் ஒருவன், இருப்பவர்கள்மேல் காட்டும் தார்மீகப் பொறுப்பு. தேவதச்சன் ஒரு கவிதையில் குறிப்பிடுவதுபோல, இதெல்லாம் இந்த வாழ்க்கையில் வேறெப்படியும் நிகழ முடியாதுதானே?

‘டி20 உலகக் கோப்பை இறுதிப் பந்தயத்தைக் காண தான் வந்தால் இலங்கை தோற்றுவிடும்’ என்று ராஜபக்ஷே பயந்தாராம். இதற்கு முந்தைய இலங்கையின் இறுதிப் பந்தயங்களில் அப்படித்தான் நடந்தது. மீறி பார்க்க வந்தார். இலங்கை தோற்றது. தனது தேசத்திற்கு தான் எல்லா விஷயங்களிலும் எப்போதும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருபவர் என்பதை ராஜபக்ஷே எவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி மகத்தானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒரு பெரிய பந்தயத்தை வெல்கிறார்கள்! உலக கிரிக்கெட்டின் மகத்தான நாயகர்கள் தங்கள் பொற்காலத்தை மீட்டுக்கொள்ள இது ஒரு துவக்கமாக அமைய வேண்டும். கிறிஸ் கெயில், போலார்ட், ப்ராவோ, சுனில் நரைன் என தனித்துவமான ஆட்டக்காரர்கள், வெள்ளையர்களின் கையிலிருந்து கிரிக்கெட்டின் அதிகாரத்தைப் பறித்துக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

ஆஜர் சொல்ல ஆட்சேபம்

அரசு மருத்துவமனைகளில் விரல் ரேகை வருகைப் பதிவு இயந்திரங்கள் பொருத்தும் அரசின் முடிவை டாக்டர்கள் எதிர்க்கிறார்கள். எல்லா அரசு அலுவலகங்களிலும் பொருத்திவிட்டு எங்களிடம் பொருத்துங்கள் என்கிறார்கள். ‘‘அவன வரச் சொல்லு, நான் வர்றேன்...’’ என்று டாக்டர்கள் சொல்வது நியாயமா என்று தெரியவில்லை. நோயாளிகளின் நலத்திற்கு இந்த மாதிரி டாக்டர்கள் மருத்துவமனைக்கு வருவது நல்லதா என்பதை நாம் யோசித்து முடிவு செய்யவேண்டும்.
(இன்னும் நடக்கலாம்...)

நெருடல் அ.இருதய ராஜ்
நமது காலம் பல்வேறு எரியும் பிரச்னைகளின் களமாக இருக்கிறது. அன்றாடம் நாம் பத்திரிகைகளில் கண்டு கடந்து செல்லும் செய்திகள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு மீள் பார்வையும் பரிசீலனையும் அவசியமாக இருக்கிறது. அ.இருதயராஜின் இந்தக் கட்டுரைகள், பல்வேறு சமகாலப் பிரச்னைகளைப் பற்றிய கேள்விகளை நம்முன் எழுப்புகிறது. தலித் அரசியல், வெகுசன ஊடகங்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகம், பொருளாதாரம், கல்வி என பல பிரிவுகளில் அமைந்த இந்தக் கட்டுரைகள் பல்வேறு விவாதக் குறிப்புகளை வாசகன் முன் இட்டுச் செல்கின்றன. லண்டனில் ஷில்பா ஷெட்டிக்கு நிகழ்ந்த அவமானத்திற்காகத் துடித்த ஊடகங்கள், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை என்று கேட்கும் இருதயராஜின் தார்மீகக் கோபம் அவரது எல்லாக் கட்டுரைகளிலும் பிரதிபலிக்கிறது. பொது வாசகர்களை முன்னிறுத்தி எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பல்வேறு விவாதப் புள்ளிகளை உருவாக்குகின்றன.
(விலை. ரூ.70/-, வெளியீடு: நேர்நிரை, டி/1/15 டி.என்.ஹெச்.பி, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600024.)

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்

கூடங்குளம் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பேட்டியளித்த தா.பாண்டியனைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - செய்தி
‘நம்மளும் ஒரு தலைவனாயிட்டோம்’னு தா.பா. இன்னைக்குத் தூங்க மாட்டாப்ல...