கிசுகிசுவால திருஷ்டி போச்சு!





தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என சினிமாவில் டாப்ஸியின் ‘ஆடுகளம்’ செம ஸ்ட்ராங். மும்பையில் அஜித்தின் பெயரிடப்படாத படத்தின் முதல் ஷெட்யூல் முடித்து சென்னை திரும்பியவரை சந்தித்தோம். கொஞ்சும் தமிழ் இல்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசும் டாப்ஸி, எந்த மொழி பேசினாலும் புரியவைத்து விடுகின்றன அவர் கண்கள்.

‘‘தமிழ்ல ‘ஆடுகள’த்துக்குப் பிறகு ஒரு ரவுண்ட் வருவீங்கன்னு பார்த்தா தெலுங்கு, இந்தின்னு திசை மாறிட்டீங்களே..?’’
‘‘உண்மைதான். ‘ஆடுகளம்’ எனக்கு சூப்பர் ஓப்பனிங்கா இருந்துச்சு. சரி, தமிழ்நாட்ல நமக்கும் ஒரு இடம் கிடைச்சிருச்சின்னு ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், இன்னொரு பக்கம் சரியான கதைகள் அமையல. ஜீவாவோட ‘வந்தான் வென்றான்’ படத்தை பெரிசா எதிர்பார்த்தேன். ப்ச்... எதிர்பார்த்தது மாதிரி நடக்கல. நல்ல ஸ்டோரி வந்தா மட்டும் நடிப்போம்னு ஐதராபாத் போயிட்டேன். அதுக்குள்ள தமிழ் மீடியாவுல என்னைப் பத்தி தப்பு தப்பா செய்தி வந்துச்சு...’’ என்றவரிடம், ‘‘எதை பற்றி சொல்றீங்க?’’ என்று கிளறினோம்.

‘‘டாப்ஸி ரொம்ப கோபக்காரி, யாரையும் மதிக்கறதில்ல, ஆக்டிங்கை விடப்போறாள்னு நிறைய செய்திகள் வந்திருக்கு. ஆனா, நான் அப்படியெல்லாம் இல்லை தெரியுமா? (அடடா... இந்த கெஞ்சலுக்கு ஒன்ஸ்மோர் கேட்கலாம் போலிருக்கே!) மீடியாக்காரங்க என்ன தப்பா நினைச்சிட்டாங்க. நோ ப்ராப்ளம். இனி அப்படி எழுதமாட்டாங்கன்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம், ‘‘அப்போ மஹத் - மனோஜ் பிரச்னை உங்க ஞாபகத்தில் இல்லையா?’’ என்றோம்.

சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, ‘‘யெஸ்! யூ ஆர் கரெக்ட். அந்தப் பிரச்னையை நான் மறக்கணும்னு பார்க்கிறேனே தவிர, மறைக்கணும்னு நினைக்கல. மனோஜ், மஹத் ரெண்டு பேருமே எனக்கு நண்பர்கள்தான். அந்தப் பிரச்னைக்கு பத்து மாசம் முன்னாடியே மஹத்துக்கும் எனக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாமப் போச்சு. பிரச்னை நடந்த இடத்துலயும் நான் இல்ல. ஆனா, தேவையில்லாம அதுல என் பேரை இழுத்துட்டாங்க. அந்த இடத்துல சண்டை நடந்தது பத்தி எனக்குத் தெரியாது. எதுக்காக நடந்துச்சுன்னும் தெரியாது. அந்த நியூஸ் பார்த்து நான் கவலைப்பட்டாலும், கண் திருஷ்டி போயிடுச்சுன்னு எடுத்துக்கிறேன்...’’ ‘‘கால்ஷீட் டைரில என்னென்ன படங்கள் இருக்கு?’’

‘‘தமிழில் விஷ்ணுவர்தன் சார் இயக்கத்துல அஜித் சார் நடிக்கும் படத்துல, ஆர்யா ஜோடியா நடிக்கிறேன். அஜித் சாரோட டூயட் ஆடுற வாய்ப்பு மிஸ்ஸிங்னாலும் அவரோட சேர்ந்து நடிக்கிற சீன்ஸ் நிறைய இருக்கு. ரொம்ப க்யூட்டான, சிம்பிளான ஜென்டில்மேன். வருங்காலத்துல அவருக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன். இதத் தவிர தமிழ்ல வேற கமிட்மென்ட்ஸ் இல்ல.
தெலுங்குல ஆதி ஜோடியா ‘குண்டல்லோ கோடாரி’ படத்துல நடிச்சிருக்கேன். அந்தப் படம் தமிழ்ல ‘மறந்தேன் மன்னித்தேன்’ங்கற பேர்ல டப் ஆகுது. 1981ல் நடந்த மீனவ கிராமத்து கதை. படத்துல தாவணிதான் என்னோட காஸ்ட்யூம். அப்புறம் இந்தியில் சித்தார்த் ஜோடியா ‘ஜஸ்மி பட்டூர்’ படத்தில நடிச்சிருக்கேன். இந்த மொழிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்னு சொல்லமாட்டேன். எந்த மொழியா இருந்தாலும் கதைதான் ஹீரோங்கறதை நம்புற ஆளு நான். அதான் ரொம்ப தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.’’



‘‘ஹீரோயின்கள் போட்டியில நீங்க எந்த இடத்துல இருக்கீங்கன்னு தெரியுமா?’’
‘‘இந்தப் போட்டி, பொறாமை ஆட்டத்துக்கு நான் வரல. அவங்கவங்க இடத்தை நிரப்ப அவங்கவங்களாலதான் முடியும். இதுல போட்டி என்ன இருக்கு? தமன்னா, ப்ரியாமணியெல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ். டைம் கிடைக்கும்போது பேசிக்குவோம். ஒருத்தர் படத்தை ஒருத்தர் பாராட்டிக்குவோம். அதுதான் ஹெல்த்தியா இருக்கும். ‘வெற்றியை தலையில தூக்கி வச்சிக்கக் கூடாது... தோல்வியை மனசில வச்சிக்கக்கூடாது’ங்கிற பெரியவங்க வார்த்தைப்படி நடந்துக்கணும்னு நினைக்கறேன்.’’ கீப் இட் அப் டாப்ஸி!
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்