அண்ணாச்சி





அமெரிக்க செனட்டின் அவசரக்கூட்டம்... அமெரிக்க வணிக நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்து எட்டு வருடங்களாகியும், முன்னேற்றம் ஏற்படாததற்கு காரணங்கள் ஆராயப்பட்டன. மாநிலவாரியாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன!

‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அண்ணாச்சிகள்தான் நமக்கு வில்லன்கள். கடனுக்கு பொருட்கள் கொடுத்து வசூல் செய்யும் லாவகம்... அன்னியோன்யப் பேச்சு... என அவர்களுக்கே உரிய மூலதனங்களை நாம் காசு கொடுத்துக் கொள்முதல் செய்ய முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்...’’ என்றன வணிக நிறுவனங்கள்.

‘‘இந்த வியாபார முறை நன்றாக இருக்கிறதே. பேசாமல் அந்த அண்ணாச்சிகளை நம் நாட்டுக்கு வரவழைத்து, சிறு வணிகக் கலாசாரத்தால் புது வியாபாரப் புரட்சியை ஏற்படுத்தினால் என்ன?’’ என ஒரு செனட்டர் திடீரென சொன்னார்.

இந்த ஐடியாவுக்கு ஆதரவு குவிய, அண்ணாச்சிகளை அழைப்பதென தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு வியாபார விசா வழங்க, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடை கடையாக ஏறி இறங்கினர். ‘அண்ணாச்சிகள் அமெரிக்கா செல்லக்கூடாது’ என்ற மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ‘‘இந்த மண்ணை விட்டுப் பிரியமாட்டோம்’’ என்ற அண்ணாச்சிகளின் ஏகோபித்த தீர்மானம், 2022ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி செய்தித்தாள்களில்
கட்டம் கட்டப்பட்டது.