ஸ்டெயின்ட் கிளாஸ் சுவர் அலங்காரம்





நட்சத்திர ஓட்டல்களில், அரண்மனை மாதிரியான பிரமாண்ட வீடுகளில், கிறிஸ்தவ தேவாலயங்களில், கதவுகளிலும் ஜன்னல்களிலும் வண்ணம் பூசப்பட்ட ஸ்டெயின்டு கிளாஸ் பெயின்டிங்கைப் பார்த்திருப்போம். கதவுகளிலும் ஜன்னல்களிலும் மட்டுமே இப்படி வரையமுடியும் என்றில்லை. சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த புவனேஸ்வரியின் கைவண்ணத்தில், அதே ஸ்டெயின்டு கிளாஸ், அழகழகான சுவர் அலங்காரங்களாகவும், அன்பளிப்புப் பெட்டிகளாகவும், தோரணங்களாகவும் வடிவம் பெறுகிறது.

‘‘தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கறேன். வார இறுதி நாட்கள்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கைவினைக் கலைகள் பயிற்சி கொடுக்கறேன். இது எல்லாமே நானா என் கற்பனையில முயற்சி செய்து பார்த்தது. வித்தியாசமா இருந்ததால, நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சது. வழக்கமான அன்பளிப்புகளைக் கொடுத்து அலுத்துப் போனவங்க, புதுமையான இந்தப் பொருள்களை ட்ரை பண்ணலாம்’’ என்கிற புவனேஸ்வரி, கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘ஒரு பக்கம் மேடும் பள்ளமுமாகவும், இன்னொரு பக்கம் வழவழப்பாகவும் இருக்கிற டெக்ஸ்சர்டு கண்ணாடி (3 மி.மீ), கிளாஸ் கலர், சாவிக் கொத்து வளையம், கண்ணாடி மணிகள், பூக்கள், கிரிஸ்டல், அலங்காரப் பொருட்கள், நரம்பு ஒயர்... 1,500 ரூபாய் முதலீட்டுல 15 அயிட்டம் செய்யலாம்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘கண்ணாடியை வாங்கி, நமக்குத் தேவையான ஓவியத்தையோ, டிசைனையோ பேப்பர்ல வரைஞ்சு, கண்ணாடி கடைக்காரங்ககிட்ட கொடுத்தா, அதே வடிவத்துல வெட்டி, ட்ரில்லிங் பண்ணிக் கொடுத்துடுவாங்க. வட்டம், சதுரம், அறுகோணம், ஓவல், திலகம், பூ, பட்டாம்பூச்சினு நம்ம விருப்பத்துக்கேத்தபடி எந்த டிசைனும் சாத்தியம். வால் ஹேங்கிங், வாசலை அலங்கரிக்கிற தோரணம், அன்பளிப்புப் பெட்டி, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், பேனா ஸ்டாண்டு... இப்படி என்ன வேணாலும் செய்யலாம்.
ஸ்டெயின்டு கிளாஸ் பெயின்டிங்னு சொன்னாலே, அது பகல் வெளிச்சத்துல ஒரு மாதிரியும், இரவு வெளிச்சத்துல வேற மாதிரியும் அழகா பிரதிபலிக்கும்னு தெரியும். வீடே அழகாகும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘வால் ஹேங்கிங்னா ஒற்றை அடுக்கு, இரண்டடுக்கு, மூன்றடுக்குனு எப்படி வேணா செய்யலாம். அளவையும் டிசைனையும் வேலைப்பாடுகளையும் பொறுத்து, 400 ரூபாய்லேருந்து விற்கலாம். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். எல்லாவிதமான நல்ல காரியங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 5 பீஸ் வரைக்கும் பண்ண முடியும்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோடு சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி