நியூஸ் வே





எதையும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் நரேந்திர மோடியை அடித்துக்கொள்ள ஆளில்லை. நவராத்திரியை முன்னிட்டு புதுரக பொம்மைகளை குஜராத் மாநில கைவினைப் பொருட்கள் விற்பனை வாரியம் அறிமுகம் செய்துள்ளது. காந்தி, சர்தார் படேல் ஆகியோர் உருவங்களோடு புதிதாக விவேகானந்தரும் மோடியும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். விவேகானந்தர் பெயரில்தான் மோடி தேர்தல் யாத்திரை நடத்துகிறார். மோடியும் விவேகானந்தர் தலைப்பாகை அணிந்திருக்கிறார். வாழும் அரசியல்வாதிகள் பொம்மைகளை குஜராத் அரசு நிறுவனம் விற்பது இதுவே முதல்முறை. முதல்வர் சொன்னால், அவரது பொம்மையை விற்றுத்தானே ஆக வேண்டும்!

காவிரி பிரச்னையை அரசியலாக்கி மீண்டும் வெளிச்சத்துக்கு வர முயற்சி செய்கிறார் முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. ‘‘முதல்வர் பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவி கொடுங்கள்’’ என்று அவர் கேட்டது கிடைக்கவில்லை. இதனால் கடுப்பான அவர், மாநில பா.ஜ.க.வின் இப்போதைய தலைவர் ஈஸ்வரப்பாவை கடுமையாகத் திட்டிவிட்டு, சோனியா காந்தியை புகழ்கிறார். ‘‘அடுத்த திட்டத்தை டிசம்பர் மாதம் அறிவிப்பேன்’’ என்கிறார் சூசகமாக! காங்கிரஸ்காரர்கள்தான் இதனால் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொள்ளும் பாத யாத்திரைக்காக, சூப்பர்ஹிட் சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து ஒரு பிரசார சி.டி. தயாரித்தார்கள். சினிமா பாடல்களை விடவும் அதிகம் பேரைக் கவர்ந்த சி.டி. ஆகிவிட்டது. பாதயாத்திரை நெடுக இந்த சி.டியை திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டு, 62 வயதில் நடப்பதால் ஏற்படும் அலுப்பைப் போக்கிக் கொள்கிறார் சந்திரபாபு நாயுடு.

முன்னாள் துணைப் பிரதமரான தனக்கு அரசு விழாக்களில் முதல் வரிசையில் இடம் தருவதில்லை என வெளிப்படையாகவே இரண்டுமுறை அதிருப்தியை வெளிப்படுத்தினார் அத்வானி. சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அத்வானி உள்ளே நுழைந்தபோது, வழக்கம்போல முதல் வரிசையில் இடமில்லை. மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத்தும் நாராயணசாமியும் அவசரமாக நாற்காலிகளை இழுத்துவர, எதில் உட்காருவது எனக் குழம்பிவிட்டார் அத்வானி.

தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்குப் பயந்து காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் பலர் ராஜினாமா செய்துவிட்டார்கள். ராகுல் காந்தி, ‘‘பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து தர வேண்டும்’’ என்றார். உடனே, அவருக்கும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் மோதல் ஏற்பட்டதாக செய்தி கிளம்பி விட்டது. சில தினங்களில் இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

டீசல் விலை உயர்வை எதிர்த்தும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்தும் சமீபத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தினார், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. போராட்டத்தில் கலந்துகொண்ட மம்தா கட்சியின் எம்.பி. சௌகதா ராயின் பர்ஸை யாரோ கூட்ட நெரிசலில் சுட்டு விட்டார்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டோடு, அவரது எம்.பி. அடையாள அட்டையும் பறிபோனது. எடுத்தது எம்.பி. பர்ஸ் எனத் தெரிந்தும், அடுத்த சில மணி நேரங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்துவிட்டான் திருடன்.