திருப்புமுனை



 

‘‘எஸ்.எஸ்.எல்.சி வரை படிக்கமுடியாதா? என்கிற கவலையோடு இருந்த என்னை, உலகம் அறிந்த மருத்துவராக்கி இருக்கிறது வாழ்க்கை. சொந்த நாட்டில் வாழ வழியின்றி, மலேசியாவிற்கு கூலித் தொழிலாளியாகப் போன ஒரு ஏழை விவசாயியின் மகனால், ஒரு மருத்துவமனையை நிறுவி, இன்று பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடிந்திருக்கிறது. இலக்கைத் தீர்மானித்து, உறுதியோடு தொடர்ந்து உழைத்தால், யாரும், எதையும் அடையமுடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. கவலை படர்ந்த முகத்தில் வலியோடு வருகிற நோயாளிகளுக்கு நிவாரணம் தந்துவிட வேண்டும் என்று கடைசிவரை போராடுவதில்தான் என் வாழ்வின் நோக்கம் நிறைவேறுகிறது. என் வீடு, என் கோயில், என் உலகம் எல்லாமே ஆபரேஷன் தியேட்டர்தான்!’’

- வயிறு கிழித்து செய்யப்படுகிற அறுவை சிகிச்சைகளுக்கு பதில், சிறு துளைகள் இட்டு, சிக்கலான ஆபரேஷன்களையும் செய்ய முடிகிற லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பத்தை, இந்திய அளவில் இரண்டாவதாக அறிமுகம் செய்த டாக்டர் பழனிவேலு உருவாக்கிய கோவை ஜெம் மருத்துவமனை, இன்று லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிக்கூடமாகவும் திகழ்கிறது.

‘‘என் வயசு பசங்க எல்லாம் காலேஜ் போகும்போது, என்னை பள்ளியில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா என ஏங்கி நின்றேன். சக வகுப்புத் தோழர்களைவிட நான்கு வயது மூத்தவன் என்கிற உணர்வு மனரீதியில் என்னை பாதித்தது. இதில் ‘போதிய சான்றிதழ்கள் இல்லை’ என்று தகுதிநீக்கம் செய்தார்கள்.

மீண்டும் வயல் வேலைக்குச் சென்றேன். நடையாய் நடந்த என் அப்பாவின்மேல் இரக்கப்பட்டு, மீண்டும் அதே வகுப்பில் நான் படிக்க அனுமதி கிடைத்தது. என்னோடு படித்தவர்கள் அடுத்த வகுப்பிற்குப் போக, நான் அதே வகுப்பில் மீண்டும் ஒரு வருடத்தைக் கழிக்கவேண்டும். ‘கெட்டதுலயும் நிச்சயமா ஏதோ ஒரு நல்லது நடக்கும்’ என்பது என் உறுதியான நம்பிக்கை. மற்றவர்கள் புதியதாக படிக்கிற பாடத்தை நான் ஏற்கனவே படித்திருந்தேன். அதனால், மற்றவர்களுக்கு ஆசிரியரைப் போல சொல்லிக்கொடுக்க முடிந்தது. அதுவரை மனதுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையாக அவதாரம் எடுத்தது. ‘மற்றவர்கள் அறியாததை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் எனக்குள் வேர் பிடித்தது. பத்தாம் வகுப்பில் ஆரம்பித்த இந்த ஆர்வம், மருத்துவரான பிறகும் தொடர்கிறது.



ஆசிரியராக வேண்டும் என்று இருந்த ஆர்வம், மருத்துவராக மாறுவதற்கு இரண்டு நிகழ்வுகள் தூண்டுதலாக இருந்தன. நிமோனியா காய்ச்சல் வந்து, முறையான சிகிச்சை இல்லாமல் என் உடன் பிறந்த தங்கை இறந்து போனார். தினம் தினம் எங்களோடு விளையாடிக் கொண்டிருந்தவள், திடீரென்று இல்லாமல் போனதை ஜீரணிக்க முடியவில்லை. மருத்துவராக இருந்திருந்தால், தங்கைக்கு தகுந்த சிகிச்சை அளித்திருக்க முடியும் என்ற நினைப்பு வந்தது. இது முதல் விதை.

எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம், என்னை மருத்துவப் படிப்பின் மீது காதல் கொள்ளச் செய்தது. விடுமுறை நாளில் வயல் வேலை செய்யும்போது, என் கைவிரலில் காயம் ஏற்பட்டது. ‘ஒண்ணும் இல்லடா’ என்று சொல்லி, வேப்பிலை அரைத்து வைத்து, ஒரு பழைய துணியைக் கிழித்து காயத்திற்குக் கட்டுப் போட்டுவிட்டார் தாத்தா. எனக்கு வலி உயிர்போனது. மரணப் படுக்கையில் இருக்கும்போதுதான் எங்கள் கிராமத்திலிருந்து டவுனுக்குப் போய் மருத்துவரைப் பார்ப்பார்கள். வலி தாங்க முடியாமல் நான் கதறியதைப் பார்த்து, என்னை டவுனுக்கு அழைத்துப்போய் மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் மூன்று நாள் மருந்து எழுதிக் கொடுத்து, ஒரு ஊசி போட்டு விட்டார். மறுநாளே வலி போய்விட்டது. ‘நம் கஷ்டத்திற்கு, ஒரு டாக்டர் சுலபமா தீர்வு கொடுத்துட்டாரே’ என ஆச்சர்யமாக இருந்தது. எப்பாடுபட்டாவது மருத்துவராகிவிட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தேன்.  

தடைகளைப் பார்த்து சுருண்டுவிடாமல், ‘அடுத்த வழி என்ன?’ என்று தேடும் மனநிலைதான் என்னுடைய பெரிய சொத்து. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. பரம்பரை பரம்பரையாக படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பணபலம் உள்ளவர்கள், அதிகாரபலம் உள்ளவர்களோடு போட்டிபோட வேண்டும். கிராமத்திலிருந்து மருத்துவம் படிக்க வருகிற மாணவர்கள் வெகு குறைவு. அந்த ஒரு சிலரும் கிராமத்துப் பணக்காரர்களாக இருப்பார்கள். இதையெல்லாம் மீறி என் தகுதிக்கு இடம் கிடைத்தது. ‘கோல்டு மெடல்’ வாங்கி எம்.பி.பி.எஸ் முடித்தேன்.  

உமாபதி என்ற பேராசிரியர் என்மீது அக்கறை கொண்டு, மேல்படிப்பு படிக்கத் தூண்டினார். ‘செயல்முறைத் தேர்வில்’ என்னை கவனித்துவிட்டு, ‘நல்ல சர்ஜனாக வருவாய்’ என்று முதன்முதலில் நம்பிக்கை வைத்து சொன்னவர் அவர்தான். எம்.பி.பி.எஸ் முடித்ததுமே திருமணமும் முடிந்தது. கடன் வாங்கிப் படிக்க வேண்டிய நிலையிலும், மேற்படிப்புக்கு விண்ணப்பித்தேன். நல்ல மதிப்பெண் இருந்தும் சென்னையில் இடம் கிடைக்காமல், மதுரையில் கிடைத்தது. ‘கெட்டதிலும் நல்லது’ என்கிற ஃபார்முலா மீண்டும் வேலை செய்தது. வயிற்றுவலியோடு துடிக்கத் துடிக்க வரும் பரிதாபமான ஏழை நோயாளிகளை அங்குதான் நிறைய பார்த்தேன். தாங்க முடியாத வலியில் துடித்தபடி கண்ணெதிரே செத்துப் போன பல ஏழைகள், எனக்குள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள். ‘இவர்களின் வேதனையைத் தீர்க்க வேண்டுமானால், நான் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சையில் நிபுணர் ஆக வேண்டும்’ என்ற தீர்மானத்தை எடுக்க வைத்தது அவர்களின் அழுகுரல். ‘கேஸ்ட்ரோ என்ட்ராலஜி’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த மதிப்புமிக்க மருத்துவர் ரங்கபாஷ்யம், என்னை ‘எம்.சி.எச் கேஸ்ட்ரோ’ மேற்படிப்பில் சேரச் சொல்லி தூண்டுதலாக அமைந்தார்.



இந்த நிலையில், மாமனார் வீட்டில் எனக்கு சேலத்தில் மருத்துவமனை கட்டித் தருவதாக சொன்னார்கள். ஆனாலும், ‘கற்றுக் கொள்ளும் ஆர்வம்’ என்னை சென்னையை நோக்கி மீண்டும் விரட்டியது. முதல்வருடம் எம்.சி.ஹெச் இடம் கிடைக்க வில்லை. ஒரு வருடம் காத்திருந்து, அடுத்த வருடம் சேர்ந்தேன். எல்லோருடைய கவனமும் பதிகிற ‘நல்ல சர்ஜன்’ என்று பெயரெடுத்தேன். சென்னையில் இருந்து என்னை மதுரைக்குப் பணிமாறுதல் செய்தனர். ஆனால், கோவை என் மனதிற்குப் பிடித்தமான ஊராக இருந்ததால், கோவைக்கு இடமாறுதல் கேட்டு வந்தேன். முப்பது வருடங்களுக்கு மேலான என் மருத்துவப் பணியில், கோயம்புத்தூருக்கு பெரும்பங்கு உண்டு.

புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடல் எனக்குள் எப்போதும் உண்டு. ‘லேப்ராஸ்கோப்பி’ தொழில்நுட்பம் 90களில் அறிமுகமானது. உடலைக் கிழிக்காமல் சிறிய துளைகளின் மூலமே அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்பது நல்ல கண்டுபிடிப்பாக இருந்தது. மருத்துவர்கள் பலரும் இந்த மாற்றத்தை ஏற்கத் தயங்கிய அந்த ஆரம்பகட்டத்தில், நான் துணிச்சலோடு அதைக் கற்றுக்கொண்டேன். சிங்கப்பூரில் அதை சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டு நாளுக்கு ஆயிரம் டாலர் கட்டணம். என் தகுதிக்கு அப்பாற்பட்ட தொகையாக இருந்தாலும், கடன் வாங்கிப் போய் கற்றுவந்தேன். அந்த முடிவு வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவிலேயே ‘லேப்ராஸ்கோப்பி’ தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை செய்த இரண்டாவது நபர் நான்.
வழக்கமான ஆபரேஷனில் ஆஸ்பத்திரியிலேயே குறைந்தது 10 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். மூன்று மாதம் கழித்துத்தான் இயல்பாக முடியும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சையில், இன்று ஆபரேஷன் முடித்து நாளைக்கு எழுந்து நடமாடலாம். மூன்று மாதம் வாழ்க்கை முடங்கிப்போனால், சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்? உயர்ந்த தொழில்நுட்பத்தில், குறைந்த செலவில், தரமான சிகிச்சை என்ற கொள்கைக்கு லேப்ராஸ்கோப்பி சரியான வடிவமாக இருந்தது. அதை பிரபலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கினேன். தமிழ்நாடு, தென்னிந்தியா, வடஇந்தியா, வெளிநாடு என என்னுடைய பயிற்சி முறைகள் மருத்துவ உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தன. அமெரிக்க ஆராய்ச்சிப் பத்திரிகையில், தொடர்ந்து எட்டு வருடம் என்னுடைய ஆராய்ச்சி முறைதான் முதல் இடத்தில் இருந்தது. ‘லேப்ராஸ்கோப்பி’ அறுவைசிகிச்சை செய்கிற மாணவர்கள், என்னுடைய முறையைப் பாடமாகப் படித்தார்கள். நான் செய்யப்போகிற அறுவை சிகிச்சையை வீடியோவில் நேரடியாகப் பார்க்க ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்தப் பெருமையெல்லாம், என்னை நம்பி வருகிற நோயாளிகளுக்குத்தான் போய்ச் சேரும். ஒருமுறை கோவையில் நான் செய்கிற ஆபரேஷனை, மும்பையில் உள்ள மருத்துவர்கள் நேரடியாக வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பார்க்க ஏற்பாடு செய்தேன். இந்தியாவின் பல இடங்களிலிருந்து மருத்துவர்கள் மும்பை வந்திருந்தார்கள். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, கோவையில் இருந்து ‘லைவ்’ செய்ய முடியாத சூழல். ஆபரேஷன் செய்துகொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து, ‘நாளை மும்பைக்கு வந்து, அங்கு ஆபரேஷன் செய்துகொள்ள சம்மதமா’ என்று கேட்டேன். அத்தனை பேரும் சம்மதித்தார்கள். கோவையிலிருந்து விமானம் மூலம் அத்தனை நோயாளிகளோடும் மும்பை சென்று இறங்கியதை, அங்குள்ளவர்கள் நம்ப முடியாமல் பார்த்தனர். ஆபரேஷன் மும்பையில் நடந்தது. கூடியிருந்த மருத்துவர்களுக்கு நேரடியாக மருத்துவ நுணுக்கங்களை விளக்கினேன். குடல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மறுநாள் நடந்துபோய் விமானம் பிடித்து கோவையில் இறங்கினார்கள் நோயாளிகள். எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஆபரேஷன் நடந்த மறுநாள் அவர்களால் எழுந்து நடமாட முடிந்தது. நம் மீது நம்பிக்கை வைப்பவர்கள் கிடைத்துவிட்டால், வாழ்வில் எதையும் சாதிக்கலாம்’’ என்கிற டாக்டர் பழனிவேலுவுக்கு உலக அங்கீகாரங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. ‘நம்பர் ஒன்’ மருத்துவர் என்கிற சாதனையைவிட, ‘மிகச் சிறந்த மருத்துவராக’ இருக்கிற பெருமிதமே அவரை இளமையாக வைத்திருக்கிறது. திறமையை வறுமை தடுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது என்பதற்கு வாழும் உதாரணமாகி இருக்கிறார் அவர்.
(திருப்பங்கள் தொடரும்)
படங்கள்:புதூர் சரவணன்