வந்தாச்சு





நம்பிக்கை வாசல்

பெயருக்கு ஏற்றவாறு இதழ் நெடுக தன்னம்பிக்கை விரவிக் கிடக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் படைப்பாளுமையை வெளிக்கொணரும் வகையில் பல தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ள கவிஞர் ஏகலைவன்தான் இதன் ஆசிரியர். மாற்றுத்திறனாளியாக இருந்தும், கபடி, நீச்சல், தடகளம் எனப் பல விளையாட்டுகளில் கலக்குகிற எம்.ஆர்.சௌந்தர்ராஜனின் நீண்ட பேட்டி, உற்சாக டானிக். உதாரணங்களாக வாழும் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள், முன்னோடி மனிதர்களின் கேள்வி பதில், இலக்கியச் செய்திகள், மாணவர்களுக்கான போட்டிகள் என துவண்டு விழுவோரையும் எழுந்து நின்று சாதிக்கத் தூண்டுகிற இதழாக மலர்ந்திருக்கிறது நம்பிக்கை வாசல்.
ஆசிரியர்: ஏகலைவன், தனி இதழ்: ரூ.10/-, ஆண்டுச்சந்தா: ரூ.120/-, முகவரி: 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம்-636015. பேச: 99443 91668.


வலை
‘‘இணையத்தில் இசையைத் தேடுவதற்கு ஆயிரம் வார்த்தைகளைத் தட்டச்சுவது எதற்கு? ரெண்டு வரி பாடிக் காட்டினால் போதுமே’’ என்ற இணையப் புரட்சி கடந்த ஒரு வருடமாகவே விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இதனை செயல்படுத்திய ‘குரல் இசைத் தேடல்’ தளங்களில், இன்று வரை நின்று நிலைத்து வளர்ந்து கொண்டிருக்கும் தளம் www.midomi.com. ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கும் மற்ற தளங்கள் போலில்லாமல், இதில் தமிழ்ப் பாடல்களையும் பாடித் தேடலாம். கலெக்ஷன்ஸ் மிகக் குறைவு, நம் உச்சரிப்பை தவறாகப் புரிந்துகொள்ளுதல் என குறைகள் நிறைய உண்டு என்றாலும் ‘தமிழ் குரல் தேடல்’ என்ற தொழில்நுட்பத்தின் முதல் வரவை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். ஆப்பிள், ஆன்ட்ராய்டு போன்களுக்கான ஆப்ஸாகவும் இதே இசைத்தேடல் சேவை கிடைக்கிறது.

கடைசிப்பக்கம்
‘குங்குமம்’ இதழில் வெளியான கடைசிப்பக்க கதைகள் முதல்
முறையாக நூல் வடிவம் பெற்றிருக்கிறது. மனித இனம் நாடோடிகளாக அலைந்து திரிந்த காலம் தொட்டு, கம்ப்யூட்டர், ஐபாட், இ ரீடர் என நவீனங்கள் கோலோச்சும் காலம் வரைக்கும் அழிவின்றி நீள்கின்றன நீதிக்கதைகள். பொதுவில், நீதிக்கதைகள் குழந்தைகளுக்கானவை என்ற பிம்பம் நம்மிடம் உண்டு. உண்மையில் பெரியவர்களுக்குத்தான் அதன் தேவை அதிகமிருக்கிறது. குங்குமம் இதழில் கடைசிப்பக்கம் லட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அதுவே காரணம். சுகமான ஒரு குட்டிக் கதையின் பின்னணியில் அழுத்தமான ஒரு நீதியை இணைத்து, நொடிப்பொழுதில் வாசகனை திகைக்கச் செய்யும் 145 கதைகளை நூலாக்கியிருக்கிறார்கள். தனித்தனியாக படித்தவற்றை ஒருசேரப் படிக்கும்போது ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது.
விலை: ரூ.90/-, வெளியீடு: மணற்கேணி, பி-1-4 டெம்பிள்வே அவென்யூ, கிழக்குக் கடற்கரை சாலை, லாஸ்பேட்டை, புதுச்சேரி-605008, பேச: 94430 33305

அம்மாவின் கைப்பேசி
தன் படங்களுக்கு இளையராஜாவின் இசையை உயிர் நாடியாக நம்பிக்கொண்டிருந்த தங்கர்பச்சான், இம்முறை ரோஹித் குல்கர்னி என்ற புதுமுக இசையமைப்பாளருடன் கை கோர்த்திருக்கிறார். நான்கு பாடல்கள், இரண்டு தீம் மியூசிக், கரகாட்ட இசையும் மேற்கத்திய இசையும் கலந்த ஒரு பாடல் என ஆல்பத்தில் அடிக்கிறது கதம்ப வாசனை.

‘என்ன செஞ்சிப் போற...’ பாடலில் வழக்கம்போலவே முத்திரை பதிக்கிறார் நா.முத்துக்குமார்.  ‘அம்மாதானே...’ பாடலில் ஏகாதசியின் வரிகளுடன் குழைந்து ஹரிச்சரணின் குரல் உருக்கி எடுக்கிறது. புஷ்பவனம் குப்புசாமி - ராகினி ஸ்ரீ இணைந்து ‘போடு தில்லாலே...’ என ஆட்டம் போட வைக்கின்றனர். ‘நெஞ்சில் ஏனோ....’ பாடலில் காதலின் பிரிவை வலிகள் சொட்ட பிரதிபலிக்கிறது ஹரிணியின் குரல். எல்லா பாடல்களிலும் மிஸ் ஆகாமல், ‘பிரசன்ட் மிஸ்’ சொல்லும் புல்லாங்குழல், இசையமைப்பாளரின் ஃபேவரிட் என்பதை சொல்லாமல் சொல்கிறது.