இந்த வருஷம் தீபாவளி இல்லை... பொங்கலும் இல்லை!






நாகப்பட்டினத்தை அடுத்துள்ள கூத்தூரில் வந்திறங்கிய மத்தியக்குழு நிலைகுலைந்து நின்றது. தலைவிரி கோலமாக தங்கள் முன்னால் நின்று, ‘‘எங்க வயித்துல அடிக்காதீங்கய்யா’’ என்று காலில் விழுந்து கதறியழுத பெண்களை என்ன சொல்லித் தேற்றுவதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

காவிரியோடு டெல்டா மக்களுக்கு இருப்பது வயல் உறவு மட்டுமல்ல; வாழ்க்கை உறவு. மெல்ல மெல்ல காவிரி தங்கள் கைவிட்டுச் செல்கிறது என்பதை எல்லோரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த இழப்பின் வலி அங்கு கதறியழுத பெண்களின் கண்ணீரில் கலந்திருந்தது.

இதுவரை கடந்துபோன எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காவிரி டெல்டா மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. குறுவை சாகுபடி குலைந்துவிட்ட நிலையில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் ஆகஸ்ட்டில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் திறப்பதற்கான முகாந்திரங்கள் தெரியாத நிலையில், முக்கிய வாழ்வாதாரமான சம்பா சாகுபடியும் கேள்விக்குறி ஆகிவிட்டது.


கர்நாடகம் காவிரி உரிமையை மறுத்து துரோகம் செய்த நிலையில், தமிழக அரசு தன் பங்குக்கு மின்சாரத்தை நிறுத்தி வஞ்சிக்கிறது. நாளொன்றுக்கு 3 மணி நேரம் கூட மின்சாரம் வராத நிலையில், பணத்தை செலவழித்து மின்மோட்டார் அமைத்தவர்களும் கூட செய்வதறியாது தவிக்கிறார்கள். குருட்டு தைரியத்தில் விதைத்தவர்களின் வயற்காடுகள், தண்ணீர் இல்லாமல் வெடித்துக் கிடக்கின்றன. பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்க்கையை இருட்டாக்கி விட்டன.

தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் வயல்கள் வறண்டு கிடக்கின்றன. எப்போதும் பசுமை போர்த்திக் கிடந்த சோழ மண்டலம், ஆடை களைந்த ஏழை மகளாக வெற்றுடம்பு தரித்து குறுகிக் கிடக்கிறது.

‘‘ஜூன்ல குறுவை சாகுபடிக்கான வேலையை ஆரம்பிச்சா, தீபாவளிக்கு முன்னாடி அறுவடை முடிஞ்சிரும். குறுவை இல்லாததால டெல்டா விவசாயிகளுக்கு இந்த வருஷம் தீபாவளி இல்லை. அறுவடை முடிஞ்சு, கையில பணம் புழங்குகிற ஐப்பசி மாசத்துலதான் விவசாயி வீடுங்கள்ல கல்யாணம், காது குத்து மாதிரி விசேஷங்கள் நடக்கும். இந்த வருஷம் அதுக்கும் வாய்ப்பில்லை. ஆகஸ்ட் மாதம் சம்பாவுக்கான வேலைகளைத் தொடங்குனா பொங்கல் நேரத்துல அறுவடை நடக்கும். இந்த வருஷம் எங்களுக்குப் பொங்கலும் இல்லை.

இதுவரை சந்திக்காத மிகப்பெரிய அதிர்ச்சியை இந்த வருஷம் சந்திச்சிருக்கோம். காவிரிதான் இல்லை. மோட்டார் தண்ணியில விவசாயம் பண்ணலாம்னா அதுக்கும் வழியில்லை. விவசாயத்தை ஒரு தொழிலாவோ, பல லட்சம் மக்களோட வாழ்க்கையாவோ தமிழக அரசு பார்க்கல. சென்னையில பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை வாரி வழங்குற அரசு, விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கத் தயாரா இல்லை. மின் மோட்டாரை நம்பி சாகுபடி பண்ணினவங்க உள்ளதையும் இழந்துட்டு தவிக்கிறாங்க...’’ என்று குமுறுகிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன்.

‘‘இன்றைக்கு டெல்டா விவசாயிகள் எதிர்காலம் புரியாமல் தவித்து நிற்பதற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றும் குற்றம் சாட்டுகிறார் விமலநாதன். ‘‘கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் உள்ள நீரை கோடைக்காலத்தில் விவசாயத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீரையெல்லாம் பம்ப் செய்து ஏரிகளுக்குக் கொண்டு சென்று விவசாயத்துக்குப் பயன்படுத்தி விட்டு அணைகளில் தண்ணீர் இல்லை என்று நாடகமாடுகிறார்கள். அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது, அதை என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..? மத்திய அரசு நியமித்த கண்காணிப்புக் குழு என்ன செய்கிறது..? அப்போதே உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தால் இப்போது சம்பாவுக்காவது தண்ணீர் கிடைத்திருக்கும். அடுத்த ஆண்டும் கர்நாடகா இதையேதான் செய்யப்போகிறது... வழக்கம்போல டெல்டா கருகப்போகிறது...’’ என்று வெடிக்கிறார் விமலநாதன்.   



வழக்கமாக டெல்டாவில் நான்கரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் நடக்கும். தற்போது 1 லட்சம் ஏக்கர் பரப்பில் கூட சாகுபடி நடக்கவில்லை என்கிறார்கள். டெல்டாவில் சுமார் 7 லட்சம் ஆழ்குழாய்க் கிணறுகள் உண்டு. தொடக்கத்தில் 14 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. இடையில் 9 மணி நேரமாகக் குறைத்தார்கள். இப்போது மூன்று மணி நேரம் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. அதையும் கூட தொடர்ச்சியாகத் தருவதில்லை. முன்பு ஒரு ஏக்கர் வயலுக்கு 4 மணி நேரத்தில் தண்ணீர் பாய்ச்சிவிடுவார்கள். இப்போது நான்கு நாட்கள் தேவைப்படுகிறது. இதனால் பலர் சாகுபடியை சுருக்கி விட்டார்கள். பலர் விவசாயத்தை விட்டு விலகியே விட்டார்கள்.

‘‘பிரதான சாலைகளுக்கு அருகில் இருக்கும் வயல்கள் அனைத்தும் அதிவேகத்தில் ரியல் எஸ்டேட் மனைகளாகி வருகின்றன. தண்ணீர் கிடைக்காத நிலையில் வயல்களை தரிசாகப் போட்டு வைப்பதால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் பகுதிகளில் மண் அடித்து வயல்களை மேடாக்கி மனைகளாக்கி விட்டார்கள்...’’ என்கிறார் தஞ்சாவூர் விவசாய சங்கப் பிரதிநிதி ஜீவகுமார்.

ஜீவகுமாரும், ‘‘விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடுவதற்கு தமிழக அரசின் பாராமுகமே காரணம்’’ என்று குற்றம் சாட்டுகிறார். ‘‘விவசாயத்துக்கு சாகுபடி கடன் வழங்குவதை அரசு நிறுத்திவிட்டது. நகை ஈட்டுக்கடன் மட்டுமே வழங்குகிறார்கள். நகை இல்லாத விவசாயிகள் விவசாயம் செய்யவே முடியாது என்றாகி விட்டது. விவசாயிகளுக்கு விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. விவசாயம் பொய்த்துப் போனால் அவர்களால் வாழவே முடியாது. மிக இக்கட்டான நிலையில் டெல்டா விவசாயிகள் இருக்கிறார்கள். இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் அவர்.

தஞ்சை மட்டும் இல்லையெனில் மைசூர், மாண்டியா, ஹாசன் ஆகிய மூன்று மாவட்டங்களும் வரைபடங்களிலிருந்தே அழிந்து போயிருக்கும். வெள்ளத்தில் மூழ்கித் தவித்த காலங்களில் எல்லாம் வடிகாலாக இருந்து மொத்த அழிவையும் தாங்கிக்கொண்டது தஞ்சை டெல்டாதான். இப்போது போராட்டம் நடத்தும் கர்நாடக விவசாயிகளுக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். காலம் அந்த வரலாற்றின் வீரியத்தை அவர்களுக்கு உணர்த்தும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்